Wednesday, August 5, 2009

முரண்...

என்னை எழுதச்சொல்லும்
ஒவ்வொரு வினாடியும்
உன்னை யோசிக்கிறேன்..
நொடிந்துபோய்
புதிதாய் பரிணமிக்கிறேன்..

என் உதடுகள்
முனுமுனுக்கும் ஒவ்வொரு
வார்த்தையிலும் வியர்வையில்
முத்திப்போய்
முத்துமுத்தாய் உன் நினைவு...
என் கனவு...

வார்த்தை ஜாலத்தை
தூர ஒடுக்கிவிட்டு
நிஜங்களைக்கூற பயந்து
தூரப்போய் ஒதுங்குகிறேன்...
நினைவினில் நிஜமாய்
நீ என்பதால்...

எந்தன் தொலைநோக்குப்பார்வை
கிட்டப்பார்வையானது...
உன்னை எண்ணி நான்
மிரண்டு தொலைத்ததால்...

பார்வையால் உன்னைப்
பரிகசிக்கும்போது
வேர்வையில் நனைகிறேன்..
சரிந்துபோய்த்
தோற்கிறேன்...
அத்தனை ஒளிச்சிதறல்கள்..

கூட வரும்போது
கூட்டத்தில் ஒளிகிறேன்...
வாடிப்போன என்முகம்
ஓட்டமெடுக்கிறது தன்னறிவின்றி...

வினாடித் துளிகளில்
ஏனோ வேகம்...
நீ நெருங்கியிருப்பதால்
என்னை நெருக்கியிருப்பதால்...
பயத்தில்...

ஒவ்வொருமுறை
விழித்தெழும்போதும்
கைகூப்பி உன்பெயரை
உச்சரித்துக்கொள்கிறேன்...
இன்றாவது ஜெயிக்கவேண்டி...

கண்களின் எதிரிலில்லாமல்
மூளையில் லாவகமாய்
ஒட்டிக்கொண்டாய்...
என்னைத் தகர்த்தெறிய
அறிந்தே சதிசெய்கிறாய்...

முரண்பாட்டின் உச்சியில் நீ..
உன்னிடமிருந்து
முரண்படநினைந்து நினைந்து
உடன்பாட்டில் நான்..

என் ஒவ்வொரு
தோவியிலும்
அமர்ந்துகொண்டு
நகைக்கிறாய்...

நீ என்னுடனிருப்பதை
ஒழிக்கமுடியவில்லை என்னால்...
ஒழிக்கத் தோன்றவும் இல்லை...

என் முதுகிலமர்ந்து
சவாரி செய்கிறாய்...
நீ என் இயலாமை.....

No comments: