Wednesday, August 5, 2009

ஈழம் பிறக்கும்....

சூழ்நிலைச் சகதியில்
வீழ்நிலை பெற்றாலும்
வாழ்நிலையற்று
தாழ்நிலை பெற்றாலும்..

வாழும் எந்தன் தேசம்...
தமிழ் வாழ்க வாழ்க வென்றே
தினம் கூவும்...

தோல்வி என்பது ஒருவேளை
வேள்விபடைக்கலாம்...
தோள்வலி தீரக்
கேள்விகள் படைக்கலாம்...

புண்கள் ரணம்மிகு
வலிகள் தரலாம்...
கண்கள் புரையோடிட
விழிகள் பிதுங்கலாம்...

காலம் மருந்தாக
விசம் கொண்டுதரலாம்..
ஞாலம் தோற்றுப்போய்
விசமிகள் மிகலாம்...

எல்லாம் உதிர்ந்தபின்னும்
வீறிட்டு உலகில்
ஒருநாள் மலரும் ஈழம்...
என் கனவு நனவாக
கண்டு எம்மனம்
களிக்கும் களித்துருகி
கண்ணீரில் மகிழும்...

நாளைவருமெனக் கனவில்
இன்றைத் தொலைக்க
நினையாமல் தமிழினம்
திரளும்...

தமிழின ஆர்வலன்,
தமிழின காவலன்
என்ற முகமூடிகிழிக்கும்..
உண்மைத் தமிழினத்தின்
தாயகம் விழிக்கும்...

வல்லமைமிக்க தாயின்
அன்புமிகு கருவறை...
சிறைக்குள்ளிருந்தாலும்
சிறகடிக்கத் துடிக்கும்...

கருவில் நுழைந்த
கண்ணியம் பெற்று புது
உருவில் உருவாகும்
தாகம்...

தொடர்ச்சியான தோல்விகளை
மறந்து விட்டொருநாள்
விரியும் என் தேசம்
விருட்சமாய்...
தமிழருக்கென
ஓர் தேசம்...
அதுதான் எம்
ஈழம் காணும்
புண்ணிய தேசம்....

No comments: