Thursday, August 6, 2009

ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கும் மேலாக நான் அவ்வப்போது பார்த்து வாசிக்கிற வலைப்பதிவுகளிலும் சரி, வலைக்குழுமங்களிலும் சரி, தம்மைத் தாமே ’அறிவுஜீவி’கள் என்று வெளிப்படுத்திக்கொள்ள சில நுட்பமான அணுகுமுறைகளைப் பலர் கடைபிடித்து வருவதை கவனிக்க முடிந்தது. அதன் அடிப்படையில், இன்றைய தேதியில் யார் ’அறிவுஜீவி’ தன்னைப் பிறர் கருத வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் செய்ய வேண்டியவற்றைக் கீழே வழங்கியிருக்கிறேன்.
1. கஷ்டமோ நஷ்டமோ, ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து விடுங்கள்! யாஹூ,கூகிள், ஆர்குட், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் இணைந்து கொள்வது உத்தமம். இலவசமாக பூங்கொத்து, வெண்ணைக்கிருஷ்ணன், கரடிபொம்மை (எல்லாம் படங்கள் தான்!) அனுப்பி சினேகிதர்களைப் பிடிக்கிற வலைத்தளங்களுக்கு இணையத்தில் பஞ்சமே கிடையாது.

2. நீங்கள் மதச்சார்பின்மையுடையவராக இருத்தல் மிக அவசியமாகும். அதாவது, பிற மதங்களில் உள்ள நல்ல விஷயங்களையெல்லாம் ஆஹா,ஓஹோ என்று புகழ்ந்து எழுதி, நீங்கள் சார்ந்திருக்கிற மதத்தைப் பற்றி எவ்வளவு நக்கல், கிண்டல் பண்ண முடியுமோ, அனுதினம் அயராமல் பண்ண வேண்டியது. இதன் மூலம் இணையத்தில் உலவுகிற பிற ’அறிவுஜீவி’களின் தொடர்பு கிடைப்பதோடு, உங்களது வலைப்பூவுக்கு நிறையே பேர் வந்து போவார்கள்.

3. இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த கருத்துக்களை அறவே மேற்கோள் காட்டக்கூடாது. மாறாக, மேலை நாடுகள், ரஷியா, சீனா மற்றும் ஈராக் போன்ற நாட்டுத்தலைவர்களின் சொற்பொழிவுகளிலிருந்து மேற்கோள் காட்டுவது உசிதம். தப்பித் தவறி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ஏதாவது இந்தியா சம்பந்தப்பட்ட விஷயத்தை மேற்கோள் காட்டியே ஆக வேண்டுமென்றால், காந்தி, நேரு, பெரியார் போன்றவர்களின் கருத்துக்களை மாத்திரமே உபயோகப்படுத்தல் வேண்டும்.

4. இந்தியாவை மட்டம் தட்டி எழுதுவதற்கு உதவியாக, வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவைத் திட்டிப் பிழைப்பு நடத்துகிற இந்தியர்களின் வலைப்பதிவுகளையும், புத்தகங்களையும் உதாரணமாகக் காட்டி எழுத வேண்டும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணி புரியும் மைக்கேல் விட்ஸெல், இடதுசாரிக் கொள்கையுடையவரான ரோமிலா தாபர், காஞ்சா இலியா போன்றவர்களின் எழுத்துக்கள் உங்களுக்கு நிறைய உதவியளிக்கும்.

5. கடந்தகாலமோ, நிகழ்காலமோ, எதிர்காலமோ, எக்காலத்திலும் இந்தியா உருப்படியாய் இருந்தது, இருக்கிறது அல்லது இருக்கும் என்று தப்பித் தவறியும் எழுதக்கூடாது.

6. நீங்கள் என்ன எழுதினாலும் சரி, அது எத்தனை பேருக்கு மகிழ்ச்சியளிக்கிறதோ, அதை விட இரண்டு மடங்கு மக்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

7. விஞ்ஞானம் பற்றி எழுதும்போது, சர்.சி.வி.ராமன், டாக்டர்.ஹோமி பாபா போன்ற இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி எழுதுவதை அறவே தவிர்க்கவும். வெளிநாட்டில் பிறந்தவர்கள் மட்டுமே விஞ்ஞானிகள்; இந்தியாவில் பிறந்தவர்கள் அஞ்ஞானிகள் என்பதை ஆணித்தரமாக நம்புகிறவர்களாக ’அறிவுஜீவி’கள் இருந்தாக வேண்டும்.

8. இந்தியாவில் எந்தவொரு சாதனை நடந்தாலும் அதைக் கொச்சைப்படுத்தி மட்டம் தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும். அத்தோடு, உங்களது பாணியைக் கடைபிடிக்கிற ஒரு பட்டாளத்தையும் உங்களது வலைப்பதிவு மூலம் உருவாக்க வேண்டும்.

9. இந்தியாவைத் தவிர உலகில் எங்கெங்கு என்னென்ன நடந்து கொண்டிருக்கின்றன என்ற தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். ஈராக், ஈரான், கொரியா,மடகாஸ்கர்,உகாண்டா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் நடப்பதை எழுதி உச்சுக்கொட்ட வேண்டும்.

10. காஷ்மீரில் யாராவது காய்ச்சல் வந்து இறந்தாலும், அது தனி மனித உரிமை மீறல் என்று எழுத வேண்டும். இராணுவம், காவல் துறை போன்றவற்றை எவ்வளவு தாறுமாறாக விமர்சித்து எழுத முடியுமோ, அவ்வளவு விரைவில் நீங்கள் அறிவுஜீவி என்ற அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

11. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளைக் கிண்டல் செய்ய வேண்டும். ஆனால், மறக்காமல் கிறிஸ்துமஸ், ரம்ஜான், குருநானக் ஜெயந்தி போன்ற பிற சமயப் பண்டிகைகளைப் போற்றி அறிக்கை விட வேண்டும். ஒரு கவிதையும் போட்டால் இன்னும் கைமேல் பலன் கிடைக்கும்.

12. ஆண்களாக இருந்தால் பைஜாமா ஜிப்பா போட்டுக்கொள்ளவும். பெண்களாக இருந்தால் பெயரை சுத்தத்தமிழில் மாற்றிக்கொள்ளவும்.

சுருக்கமாகச் சொன்னால், நாம் இந்தியாவை எவ்வளவுக்கு எவ்வளவு திட்டுகிறோமோ, அவ்வளவு விரைவில் நாம் அறிவுஜீவி ஆகி விடுவோம்.

மேற்கண்டவற்றைத் தொடர்ந்து முப்பது நாட்கள் கடைபிடித்தால், முப்பத்தி ஓராவது நாள் ’அறிவுஜீவி’ என்ற பட்டம் உங்களது முகவரிக்கே இலவச பார்சல் சேவையில் வந்து சேரும்!

வாழ்த்துக்கள்!

மும்பை சந்தோஷ்

No comments: