Thursday, August 6, 2009

புரட்சி

இன்றைய தினசரியைப் பிரித்தேன். முதல் பக்கத்தில் கண்ணில் பட்ட கொட்டை எழுத்தில் இருந்த செய்தி

“ஆக.15ல் 'விடுதலைப் பிரகடனம்' செய்யும் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் (ம.ப.க.ச.)”

ஓஞ்சு போன என் ஒடம்புலெ திடீர்னு ஒரு மின்சாரம் ஓடினாப்பளே இருந்துது. சட்டுன்னு ஒரு சட்டெயெப் போட்டுண்டு, கைலெ பேபரையும் எடுத்துண்டு கோடி வீட்டுக் குப்புசாமியெப் பாக்கக் கெளம்பினேன்.

“ஏன்னா எங்கெ ஊரெச் சுத்தக் கெளம்பரேள் காலங் காத்தாலெ?”

“எங்கெயும் இல்லெ. தோ வந்துடறேன் அஞ்சு நிம்ஷத்துலெ.”

“குப்பு... குப்பு... இதெப் பாரு. நமெக்கெல்லாம் காஞ்ச வயத்துக்குப் பால் வாத்தாப்ப்ளெ ஒரு செய்தி வந்திருக்கு பாரு இன்னி பேபர்லெ.”

“என்ன சார் வந்திருக்கு அப்படி பேபர்லெ?”

“ஒரத்திப் பேசாதெ. காதும் காதும் வெச்சாப்ளெ செய்ய வேண்டிய காரியம் ஒண்ணு இருக்கு. வெளிலெ வா. சொல்றேன்.”

குப்பு வருகிறார் வெளியில் சட்டையின்றி இருந்த உடம்பில் ஒருதுண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு.

“வா கோவாலுவையும், சுந்தாவையும், முருகனையும் கூட்டிகிட்டு ஊரு கோடி ஆலமரத்தடிக்குப் போவோம். முக்கியமான ஒரு விஷயம் பத்திப் பேசி நாம இன்னிக்கி ஒரு முடிவெடுக்கணும்.”

“அப்படி என்னா சார் முக்கியமான தலெ போற விசயம்?”

“தலெ போற விசயம் இல்லெ. தலெயெக் காப்பாத்துற விசயம்.”

:அதான் இன்னான்னு சொல்லுங்க?”

“அவசரப் படாதெ. அஞ்சு பேருமா ஆல மரத்தடீலெ கூடினதும் சொல்றேன்.”

“சுந்தா சார்... சுந்தா சார்...”


“எந்தா விசயம் சுந்தா சார் சுந்தா சார்னு கரையுன்னது?”

“ஞான் பரையும் பரையும். கொரெச்சு பொரத்தே இவ்வட வரு. ஆல மரத்தடிலெ பரையும்.”

“எந்தா.. சாரெ?”

“உஸ்ஸ்...” என் விரல் உதடுகளின் முன். சுந்தாவுக்கா புரியாது வழக்கமாக சீட்டாடப் போகுமுன் நடக்கும் ஒரு நாடகம்தானே இது.

மூவருமாக நடக்கிறோம் கோவாலு வீட்டிற்கு. கதவில் இருந்த காலிங்க் பெல் ஸ்விச்சை அழுத்த்க் கதவைத் திறக்கிறார் கோவாலு என்னும் கோபாலசாமி.

“மனைவி உள்ளே இருக்கிறாளா?” என்று சைகையில் நான் கேட்க அவர், “இல்லை வெளியே போயிருக்கிறாள் என்று வாய் திறந்தே சொல்கிறார் தைரியமாக.” மனைவிதான் வீட்டில் இல்லையே?

“சட்டுன்னு வாங்க எங்க கூட. ஒரு முக்கியமான வேலெ.”

“என்ன வேலெ?”

“சொல்றேன் வாங்க.”

வீட்டைப் பூட்டி சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு கோவாலுவும் வருகிறார் எங்க்ள் கூட.

அடுத்தது முருகனைக் கூப்பிட வேண்டுமே. அவன் குடிசை வாசலில் துணிகளுக்கு இஸ்திரி தேய்த்துக் கொண்டிருக்கிறான். மற்றவர்களைக் கூப்பிட்டது போலக் கூப்பிட்டால் அவன் மனைவி காதில் விழுந்து அவள் வெளியே வந்தால் முருகனுக்கு விழுமே விளக்குமாத்தடி. அது மட்டுமா அவள் எங்களுக்கு அளிக்கும் கௌரவப் பட்டப் பெயர்களைக் காதால் கேட்கக் கூடக் கூசுமே. அவை என்ன அண்ணா பல்கலைக் கழகம் அளிக்கும் கவ்ரவப் பட்டங்களா என்ன கவ்ரவமாகப் ஏற்றுக் கொள்ள?

அதனால் தூரத்தில் இருந்தே கையை ஆட்டி சைகை காட்டி “விஷயம் ஆர்டினரி இல்லை அர்ஜென்ட்” என்பதைத் தெரிவிக்கிறேன், எங்கள் ஞாயிறு சீட்டாட்டக் கூட்டாளிக்கு ஜாடையா புரியாது. கையில் இருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு ஓடி வருகிறான். முருகன்.

ஐந்து பேரும் அடைகிறோம் ஆலமரத்தடி.

ஏக காலத்தில் நால்வர் குரல், “என்ன அர்ஜென்டு விசயம்? சட்டுனு சொல்லுங்க.”

“சொல்றேன் கேளுங்க. ஒங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? நம்ம நாட்டுலெ மனைவிகளால் கொடுமைப் படுத்தப்படும் கணவன்மார்கள் சங்கம் (ம.கொ.ப.க.ச.) னு ஒண்ணு இருக்கு.”

“அப்படியா?” மீண்டும் நான்கு குரல்கள் ஏக காலத்தில்.

“அந்த சங்கம் ஆகஸ்டு பதினஞ்சாம் தேதி சிம்லாவுலெ கூடப் போவுது.”

“கூடி?”

“கூடி நம்ம நாட்டுலெ இருக்கிற பல சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாவே இருக்கு. அதெயெல்லாம் மாத்தி ரெண்டு பேருக்குமே நியாயம் கெடைக்கிறாப்ளெ செய்யணும். சர்க்கார் இதெ உடனே செய்யலேன்னா நாடு தழுவிய பலவித போராட்டங்களையும் ஆரமிக்கணும் ஒரு தீர்மானம் கொண்டு வரப் போராங்க.”
“நல்ல காரியந்தான். அதுக்கு நாம என்ன செய்யணும்?”

“சொல்றேன். போன வாரம் என் பொண்டாட்டி கேக்கறா வரவர நீங்க தோச்சு போடற என் பொடவெயெல்லாம் ஏன் வேளுக்காமலே இருக்கு? துணிக்கு வலிக்குமோ கல்லுக்கு வலிக்குமோன்னு அப்படியே தண்ணிலெ முக்கியெடுத்துப் புழிஞ்சு ஒணத்திடறேளா? ன்னு. குப்பு சார் நீங்க என்னமோ சொல்ல வரீங்களே என்னது? தைரியமா சொல்லுங்க. இங்கெ நம்ம அஞ்சு பேரெத் தவிற வேறெ யாரும் இல்லெ.”

“முந்தாநேத்து பாருங்க மார்கெட்டுக்குப் போயி காய்கறி வாங்கியாந்தேன். அதுலெ ரெண்டு சொத்தெ வெண்டெக்கா இருந்துருக்கு போலெ. கத்தினாளே பாக்கணும் எம் பொஞ்சாதி ஒங்க மூஞ்சிலெயே எளுதி ஒட்டி இருக்குது ஏமாந்த சோணகிரின்னு. அதாம் இப்படி சொத்தலையும் புழுத்தலையும் கட்டி உடறாங்கன்னு.”

“எண்ட வீட்டிலும் இதேயாணும் ப்ராப்ளம். எண்டெ மோனா சாடினா ஞான் ஓடும் பொரத்தே.”

கோவாலு ஆரம்பித்தார் தன் புலம்பலை. “எங்க விட்டிலேயும் இப்படித்தான் சார். நான் எது செஞ்சாலும் அதுலெ ஒரு குத்தம் கண்டு பிடிக்கிறதே என் பொண்டாட்டியோட வேலெ சார். போன வாரம் பாருங்க ‘ஆடி மாசம் பொறந்துடுச்சு. அவரெக்கு ஒருபந்தல் போடுங்க’ ன்னா. நானும் உசிரெ உட்டு கொய்யா மரத்துலேந்து நாலு கெளெயெ வெட்டி பந்தல் போட்டா ‘ஏங்க ஒங்களுக்கு சதுரமா பந்தல் வராப்புளெ நாலு கால் நடத் தெரியாதா?’ ங்கறா. கெளெயெ வெட்டறத்துக்கும் குழியெத் தோண்டறத்துக்கும் நான் பட்ட அவஸ்தெ எனக்குத் தெரியும். என்னெப் படெச்ச் ஆண்டவனுக்குத் தெரியும்.”

தன் பங்குக்கு முருகன் சொன்னான். “நான் போன நாயித்திக் கெளெமெ சீட்டாட்டம் முடிஞ்சு ஊட்டுக்குப் போறச்சே ஒரு குவார்டரும் நாலு மூசுருண்டையும் வாங்கிக்கினு குடிசெக்குப் பின்னாலெ செவனேன்னு குந்திகினு சொகமா அனுபவிச்சுக் கிட்டு இருந்தேன். அது எப்பிடிதான் தெரிஞ்சுதோ அந்தக் களுதெக்கு. களுகுக்கு மூக்குலெ வேக்கும்பாங்களே அதெப் போல. வந்தா காளி வாருவலோட. போட்டா நாலு என் தலெ மேலெயே ஏண்டா நீ சம்பாதிக்கிறெ காசுக்கு குடியும் கூத்தியாளுந்தான் கேக்குதான்னு கத்திகிட்டே. நீயே சொல்லு சார். நா இன்னா கெட்ட காரியம் செஞ்சிட்டேன் பெரிசா? எதோ நாயித்திக் கெளெம வந்தா ஒரு நாலு மணி நேரம் ஒங்க கூட சீட்டு ஆடுறேன். சாயங்காலம் ஆனா ஒரு குவர்டர்ரெ உள்ளெ தள்ளுறேன். வாரம் பூரா நெருப்புப் போட்ட இரும்புப் போட்டியத் தூக்கி இஸ்திரி போட்டு சாவலெ, சோறாக்கக் காசு சம்பாரிகணுமேன்னு?”

“நாமெ அஞ்சு பேருமே ஒரே ஒடத்துலெதான் போறோம்.”

“ஆல மரத்தடிலெ இல்லெ சார் குந்தி இருக்கோம்? ஓடத்துலெ எங்கெ சார் போறோம்? நீ ஒண்ணும் போடலெயெ சார்?”

“முருகா... இங்கிலீஷ் காரங்க சொல்லுவாங்க ஒரே நெலெமெலெ இருக்குரவங்களெ ஒரே ஓடத்துலெ போறவங்கன்னு. அதெத்தான் சாரு தமிழ்லெ சொல்லீட்டாரு’”.

“எது எப்பிடியோ? இப்போ நாமெ இன்னா பண்ணோணும் அதெச் சொல்லு.”

“சொல்றேன். மொதல்லெ நாம் அஞ்சு பேருமா சேந்து மனைவிகள் கையில் மாட்டித் தவிப்போர் சங்கம், கொட்டாம் பட்டிக் கிளை ன்னு ஒண்ணு ஆரம்பிக்கணும். அந்த விசயத்தெ பத்திரிகை ஆபீசுக்கும் அனுப்பணும். அவங்க அதெ செய்தியாப் போட முடியாதுன்னா நாம அஞ்சு பேருமா சேந்து பணம் போட்டு பத்திரிகைலெ அதெ விளம்பரமாக் கொடுக்கணும்.”

“அடுத்ததா ஒரு தீர்மானம் எக மனதாக் கொண்டு வந்து அதுலெ நாம அஞ்சு பேரும் கையெழுத்துப் போடணும்.”

“என்ன தீர்மானம்?”

“நாங்கள் இனி வானமே இடிந்து விழுந்தாலும் எங்கள் மனைவிமார்களுக்குப் பயப்படமாட்டோம். சுயமாக சிந்தித்து செயல் படுவோம். இதுதான் அந்தத் தீர்மானம்.”

“வளர ஹேப்பி ந்யூசாணும் இது.”

“முருகா நீ என்ன சொல்றே?”

“நா இன்னா சாமி தனியா சொல்லப்போறேன்? பிடாரி கைலேந்து தப்பிக்க வளி இருக்குன்னா நீ இன்னா சொல்லுறியோ அதெ நானும் செய்யுறேன் சார். பேபர்லெ எளுதிக் கொண்டா. கை நாட்டு வெக்கெறேன் காட்டுற எடத்துலெ.”

“குப்பு சாரும் கோவாலு சாரும் என்ன சொல்றீங்க?”

“நாங்க என்ன சார் தனியா சொல்லப் போறோம்? நீங்க முன்னெ இருந்து காயெ நகத்துங்க. நாங்க ஒங்க பின்னாடியே வறொம்.”

தூரத்தில் ஒரு உருவம் தெரிகிறது கையில் ஒரு துடைபத்துடன். கிட்டெ நெருங்கியதும் கத்துகிராள் முருகனின் மனைவி. “ஏன்யா துணிமேலெ இஸ்திரி பொட்டியெ வெச்சீட்டு இங்கெ வந்து குந்திக்கினையா சீட்டாட? அங்கெ துணி பொசுங்கி நாத்தம் வந்திச்சு. பாத்தா ஒன்னெக் காணும்.” அவள் நெருங்குவதற்குள் ஓடினான் முருகன் தன் குடிசையை நோக்கி.

அடுத்து வந்தது ஒரு வெண்ணிற ஆடை நிர்மலா, சாரி மோனா.
“எந்த சேயுன்னது இவ்வடெ? ஏகதேசம் ஜோலியுண்டு வீட்டில். நட” என்று அவள் விரட்ட வாலைக் குழைத்துக் கொண்டு விசுவாசமுள்ள நாய் போல அவள் பின்னெ சென்றார் சுந்தா.

குப்புவின் குட்டிப் பையன் மூச்சு வாங்க ஓடிவந்தான். அவன் கொண்டு வந்த செய்தி, “அப்பா எங்கெ போயிட்டிங்க நீங்க? அம்மா அங்கெ கத்திகிட்டு இருக்காங்க. ‘வ்ரட்டும் அந்த ஆளு. வார நாள்லெயே சீட்டா? ரெண்டு நாளெக்கு பட்டினி போட்டத் தெரியும் நான் யாருன்னு’ ன்னு.

குப்புவும் குட்டிப் பையனோடு சொல்லி கொள்ளாமலே செல்கிறார்.

கோவாலு எப்பொவுமெ நம்ம ஆளு. அவருதான் எங்கூட கடைசீ வரை நிற்பார் என்று நினைத்த என் எண்ணத்தில் மண் விழுந்தது அடுத்த நிமிஷமே. காரணம் அங்கு தோன்றிய அவர் மனைவி கோமளமும் அவள் கையில் இருந்த கரண்டியும்.

கரண்டிக் கை கோமளம் பின்னே காந்த்ம் இழுத்த இரும்பு போல சத்தமின்றி நடந்தார் கோவாலு அவர் வீட்டை நோக்கி. கோமளம் என்றுமே வீணாக வார்த்தைகளைக் கொட்டுவதில்லை. அவள் செய்கையிலேயே தன் மனதில் உள்ள எண்ணங்களைத் தெளிவாகத் தெரிவித்து விடுவாள் போலும்.

சரி யார் சேர்ந்தால் என்ன சேராவிட்டால் என்ன நான் தனியாக நின்றே போராடுவேன். அடுத்து என்ன செய்யலாம் என்று கண்களை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்த என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது என் சகதர்மிணியின் குரல்.

“ஏன்னா. இங்கெத் தனியா கண்ணெ மூடிண்டு ஒக்காந்துண்டு என்னெ யோஜென பண்ணிண்டு இருக்கேள்? எப்பொடா நாலுபேரு சேருவா. சீடாட்டம் ஆரம்பிக்கலாம்னா? வீட்டுலெ வேலெ கெடக்கு ஊர்பட்டது. நானும் ரெண்டு மாசமா சொல்லிண்டு இருக்கேன் ந்யூஸ் பேபர் மலையா சேந்துண்டு இருக்கு. அதெக் கொண்டு போய் காயலான் கடெலெ போட்டுட்டு வாங்கோன்னு. அதெச் செய்யறதெ உட்டூட்டு இங்கெ வந்து ஒக்காந்துண்டு இருக்கேளே? நான் ஒரு நிமிஷம் பதறிப் போய்ட்டேன் ஒங்களெக் காணுமே. இன்னிக்கி ஞாயித்திக் கெழெமெ கூட இல்லையேன்னு.”

மனதில் அன்று தோன்றிய வீர எண்ணங்கள் மழையில் நனைந்த மத்தாப்பு போல எர்யாமலே போக வீடு திரும்பினேன் நானும்.

நடராஜன் கல்பட்டு

No comments: