Wednesday, August 5, 2009

தராசு...

இன்னும்
நெருங்கி வந்து
கேட்டுப்பார்
என் உயிரின்
முனகல்
அடங்கிக்கொண்டிருக்கிறது...

விண்மீன்களைத்
துளைத்தெடுத்த
வெளிச்சத்தில் உன் முகம்
சதிராடுது - கண்டு என்
சதையாடுது..

நான்
இப்பொழுதுதான்
நாகரீகங்களுடன்
போட்டியிட எத்தனிக்கிறேன்...
நீயோ
நவநாகரீகத்துடன்
ஜொலிக்கிறாய்...

என் எல்லாத்
திசைகளிலும்
கச்சிதமாய் உன் சாரல்...
என் மரணத்தை
முழுவதும்
அலங்கரித்து நிற்கிறது
உன் காதல்..

உன் நிழல்
என்மீது விழுந்தால்கூட
பூரிக்கிறது உயிர்...

என்ன செய்வது
என்னால்
கவிதைதான் எழுதமுடியும்
உன்னைப்போல
காதலை எழுத முடியாது...

நீ
நான்
கவிதை
சொற்கள் வெவ்வேறு..
மூன்றையும்
வெவ்வேறு நேரத்தில்
வெவ்வேறு விகிதத்தில்
ஒன்று சேர்க்க
கிடைப்பது காதல்...

என்
தன்மானத்தோடு விளையாடாதே..
என் தவிப்பு
உன் நியாயங்களைவிட
வன்மையானது...

என் கோரிக்கைகளை
கண்களைக் கட்டிக்கொண்டு
தராசுபிடித்த
காதல் தேவதையிடம்
காதல் குற்றமொன்றை
முன்மொழிந்தேன்...

கண்களைக் கட்டிக்கொண்டவளிடம்
நியாயம் எப்படிக்கிடைக்கும்..?
புண்களையே பதிலாய்
ரணப்படுத்தியது காதல்நீதி....

வஞ்சித்தது
உன் காதல் என்றேன்...
வஞ்சியால்
வஞ்சிக்கப்பட்டதற்கு
வெகுமானம் வேண்டுமென்று
புன்னகைத்தாள் தேவதை...
அவமானப்பட்டதுதான் மிச்சம்...

என் இதயத்தை
ஒருதட்டில் வைக்கிறேன்...
உன் மௌனத்தை
மறுதட்டில் வைக்கிறாய்..
சரிகிறது முள்....
மௌனமாய்ச் சிரிக்கிறாள்
காதல் தேவதை
உன் முகப்பிம்பத்துடன்...


--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

No comments: