1000 அடி உயரத்தில் விமான இறக்கையில் நின்றபடி பறந்து 89 வயது வயோதிபர் சாதனை
1000 அடி உயரத்தில் மணிக்கு 100 மைல் வேகத்தில் பறந்த விமானத்தின் இறக்கையில் நின்றபடி ஆங்கிலக் கால்வாயை கடந்த உலகின் வயதான நபர் என்ற சாதனையை டொம் லேகி (89 வயது) என்பவர் நிலை நாட்டியுள்ளார்.
அத்துடன் 25 மைல் நீளமான மேற்படி கால்வாய் மீது விமானம் பறந்து கொண்டிருக்கையில் விமானத்தின் இறக்கையில் 9 தடவைகள் அவர் நடந்தும் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் பிரான்ஸ் நாட்டவரான லூயிஸ் பிலிறியட்டால் நிகழ்த்தப்பட்ட சாதனையொன்றை பிரித்தானியரான டொம் லேகி முறியடித்துள்ளார். டொம் லேகியை விட லூயிஸ் 20 வயது இளையவராவார்.
இந்த சாதனை அனுபவம் குறித்து இரு பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவான டொம் லேகி விபரிக்கையில், "கடலின் மீது விமானத்தின் இறக்கையில் நின்றபடி பறந்தமை அற்புதமான அனுபவமாக இருந்தது. உடலை வேகமாக காற்று மோதிச் செல்வது இதுவரை ஏற்படாத திகிலூட்டும் உணர்வை ஏற்படுத்தியது'' என்று கூறினார்.
டொம் லேகி பிரான்ஸிலுள்ள சன்ஹத் எனும் இடத்திலிருந்து புறப்பட்டு பிரித்தானிய டோவர் நகருக்கு அண்மையில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவிலுள்ள சொலிஹல் எனும் இடத்தைச் சேர்ந்த அவர், கடந்த வருடம் தனது மகள் ஆன் ஜொய்ன்ஸன் புற்று நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, புற்றுநோய் ஆராய்ச்சிக்கு ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதியை திரட்டும் முயற்சியின் ஒரு அங்கமாகவே இந்த சாதனை முயற்சியில் களம் இறங்கியிருந்தார்.
Posted by எம்.ரிஷான் ஷெரீப்
No comments:
Post a Comment