Saturday, August 15, 2009

கிழிசல்

ஏழரைக்கோடிகள்
நிறைந்த சமுதாயத்தை
வெறும் ஒன்றரைக்கோடி
ஒன்றுக்கூடிக்
காறித்துப்பிய கதை...
தமிழ்ச்சரித்திரம் தெறிக்க
தமிழீழம் உமிழும்
அந்தக் காதை...

இறையாண்மைக் கதைபேசி
இருக்கும் மனிதம் தொலைத்து..
இந்தியம் எனும்
வீரம் தொலைத்தோம்...

ஒட்டுக்குழுக்களாய்
உடைந்துபோய் கிடக்கிறோம்...
தட்டுத்தடுமாறி
சிதைந்துபோனது சுதந்திரம்...

தன்னலச் சாக்கடையில்
சிக்கித் தவிக்கிறது நம்பிக்கை...
உன்னலம்பாராட்ட
ஊனப்பட்டது தமிழீழம்...

இனமான
எழுச்சிப்போரென்று
வெறும்கதை பேசிப்பேசி
பல லட்சம் மக்களை
ஏதிலிகள் ஆக்கினோம்..
சிலலட்சம் மக்களின்
சிதிலம் தொலைத்தோம்...

உணர்ச்சிமிகு தமிழா
எழுந்துவா தமிழா...
கூக்குரல்கள் வெறும்
கூச்சலாகிப்போனதிங்கே..

தமிழனாகவே உன்னால்
ஒன்றுபட இயலவில்லை..
மேலுக்கு ஏன்
இந்த இந்தியப் போர்வை..

மீளாத் துயரில்
யாம் பெற்ற வேதனையில்
உலகம் அழுதது..
அதைக்கண்டு எம்
இந்தியம் சிரித்தது..

உண்மையில் உள்ளன்பு
ஒற்றுமையாய் இருந்திருந்தால்
உதவிக்கு இன்னும் சில
மாநிலங்கள் வந்திருக்கும்...

செத்துப்போன அவ்வுலகில்
நீதி ஜெயித்திருக்கும்...
பித்துப்பிடித்த இளைஞர்தம்
வாழ்வு ஜொலித்திருக்கும்...

ஊர்வலம், உண்ணாவிரதம்
பொதுக்கூட்டம் என்று பல
நாடகங்கள் அரங்கேற்றம்...
ஊடகங்கள் திசைமாற்றம்...

சொந்தத் தொலைக்காட்சியில்
சொந்தங்கள் தொலைந்த கதை
சொல்ல மறுத்ததில்
கூனிக்குறுகி முக்காடிட்டது
எம் தேசப்பற்று

உங்கள்
சுயலாபப் பித்தில்
அவர்கள்
சுதந்திரம் பறிக்கப்பட்டது...

ஈழ மக்கள்
திருப்தியடைந்ததாய்
சகட்டுக்கு பேசி
சரித்திரம் தொலைத்தோம்...
மகிழ்ச்சியடைந்ததான்
ராஜபக்ஷே...

பிணந்தின்னு கழுகுகூட
இறந்தபின் சதையுண்ணும்..
இனந்திண்ணி பக்ஷேயோ
இருக்கும்போதே
இரத்தம் குடித்தான்...

அவலங்களைத் தாங்கி
அறப்போர் செய்யும் வேளையில்
கோஷ்டிப்போசலில்
குற்றம் புரிந்ததால்
நீதிதேவதையின்
நெற்றியை பிழந்தது விதி...
வெற்றியடைந்தது சதி...

இன்னும்
சொல்லத்தான் துடிக்கிறது..
துயரப்படும் ஈழச்
சகோதர்களுக்காய்
இப்போதும்
என்ன செய்து
கிழித்திருக்கிறோம் நாமும்...?

No comments: