Wednesday, August 5, 2009

நீயும் மனிதனாகு
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும்
ஒரு பிரதிபலிப்பு இருப்பது
உனக்குத் தெரியுமா ?

வஞ்சம் மிகுந்த வார்த்தைகள்
அம்பெனப் பாய்ந்து தாக்குவது
உனக்கு ஏன் புரியவில்லை ?

ஏளனச் சிரிப்பு காட்டி
ஏன் என் உள்ளக் குமுறலில்
குளிர் காய நினைக்கிறாய் ?

உன்னால் மட்டும் தான்
என்னைக் காக்க முடியுமா ?

இது போலியான பாதுகாப்பென்று
உனக்குத் தெரியவில்லையா ?

உண்மை நெருப்பாக சுட
ஒரு நாள் நீ தப்பித்து
ஓடத்தான் போகிறாய்!

இனி உன் வார்த்தைகள்
என் இதயத்தில்
காயம் உண்டாக்காது

இரும்பு மனம் கொண்ட
உன் இருமாப்பு
எனை ஒன்றும் செய்யாது

அர்த்தமின்றி வரும் வார்த்தைகள்
வந்த வேகத்திலேயே
இனி சத்தமின்றி விலகிப்போகும்

தவறான புரிதல் கொண்டு
பகட்டான வார்த்தை சொல்லி
பொறி வைத்து பிடித்திட
நான் என்ன சுண்டெலியா ?

உன் தோல்வியைத் தவிர்க்க
என்னை நீ சாடினால்
நான் உணவை மறந்து
தூக்கம் இழந்து
அல்லல் படுவேன்
என நினைத்தாயோ ?

ஏ சுயநல மனித மனமே!
இதில் இருந்து தப்பிக்க
விழி திறந்து வழி தேடு

எள்ளி நகையாடும்
உன் கிண்டலை விடுத்து
எளிமையை நீ நாடு

ஆத்திரம் கொண்ட
உன் அகம்பாவத்தை விடுத்து
அமைதி வழி தேடு

பொய்யென்னும் போர்வைக்குள்
சுருண்டு படுத்து ஒளியாமல்
நேர்மையில் கரைந்து விடு

அன்பாலே ஆட்கொண்டு
மனக் கதவைத் திறந்துவிட்டு
குற்ற உணர்வை நீக்கு!

நீயும் மனிதனாகு!

No comments: