Saturday, August 15, 2009

ஊருக்கொரு தமிழா?



சென்ட்றலில் வந்து கொண்டிருக்கும் ரயில் வண்டி இன்னும் பூர்த்தியாக நிற்கவில்லை. கையில் மிகக் குறைவான சாமான்களே உள்ளவர்கள் எல்லாம் எழுந்து கதவை நோக்கி நகர்கின்றனர். திபு திபு வென்று நம்மை இடித்துக் கொண்டும் நம் கால்களை மிதித்துக் கொண்டும் உள்ளே ஏறும் சுமை தூக்கும் ஆட்கள், “யோவ் தள்ளி நில்லேன்யா சாவு கிராக்கி” என சென்னை சிங்காரத் தமிழில் நம்மை வரவேற்கின்றனர்.



ஸ்டேஷனை விட்டு வெளியே வருபோதோ பலரிடமிருந்து நல்ல மரியாதையான வரவேற்பு. “சார் நம்ம வண்டிலெ வாங்க சார். எங்கெ சார் போவணும்?” ஒருவர் கையில் இருக்கும் சிறு பெட்டியைப் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டு விரு விருவென நடக்கிறார். நாம் அவர் பின்னே ஒடுகிறோம் அவரது ஆடோ ரிக்ஷா இருக்கும் இடத்திற்கு.



“கோடம்பாக்கம் போகணும். எவ்வளவுப்பா?” என்று மரியாதையுடன் கேட்கிறோம். அவரும் பதிலுக்கு மரியாதையுடன், “நூறு ரூபா குடு சார்”, என்கிறார்.



“என்னப்பா போறச்சே அம்பது தானேப்பா கொடுத்தேன். இப்படி ஒரேயடியா அதிகமாக் கேட்டா என்னப் போல பென்ஷன் வாங்குறவங்க எல்லாம் என்னப்பா செய்யறது?” என்று கேட்கிறோம்.



பட்டென்று வருகிறது ஆடோ காரரிடமிருந்து பதில். “யோ தண்ட சோறு கேஸாய்யா நீ?. இன்னா வேலெ செஞ்சு கிளிக்கிறெ நீ மாசம் பொறந்தா சொளையா கைலெ வந்து உளுது பணம் ஒனக்கு?”



இதைத் தான் சொல்லுவார்களோ நுணலும் தன் வாயால் கெடும் என்று?



ஒரு நாள் காய்கறி வாங்க மார்கெட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு இருவர் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.



“என்னாம்மா வாத்தியாரே எப்படிக் கீரே?” எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அம்மா என்று அழைக்க இருவரில் ஒருவரும் பெண்ணல்ல. வாத்தியாரே என்றழைக்க அவர்களில் ஒருவரும் பள்ளி ஆசிரியர் போலவும் தோன்றவில்லை. கீரை விற்றுக் கொண்டிருக்கிறாரோ ஒருவர் என்றால் அதுவும் இல்லை. பின் ஏன் அவர்கள் அப்படிப் பேசினார்கள்? ‘என்ன நண்பரே எப்படி இருக்கிறீங்க?’ என்பதைத்தான் அவர் அப்படிக் கேட்டிருக்கிறார் என்று புரிந்து கொள்ள எனக்கு சில வருட சென்னை வாழ்க்கை தேவைப் பட்டது.



சென்னைக்கு நேர் எதிர் கோயமுத்தூர் மாவட்டம். பேச்சில் மரியாதை காண வேண்டும் என்றால் அந்த மாவட்டத்திற்கு தான் செல்ல வேண்டும். “வாங்க. உக்காருங்க. எப்படி இருக்கீங்க? என்ன சாப்பிடுறீங்க? காபியா டீயா மோரா?” போன்ற வார்த்தைகள் அங்கு வெகு சரளம். பேசும் போது, ‘ஆமாம்’, ‘இல்லை’ என்ற வார்த்தைகள்கூட ‘ஆமாங்க’, ‘இல்லீங்க’ என்றுதான் வரும் அங்கு. அந்த மாவட்டத்தில் கீழ் உள்ளது போன்ற ஒரு சம்பாஷணையைக் கேட்டால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை.



“ஏனுங்க ஒங்க களுத்தெ முன்னாலேந்து வெட்டலாமுங்களா? இல்லெ பின்னாலெந்து வெட்டலாமுங்களா? எப்படி வெட்டினா ஒங்களுக்கு வலி கொறவா இருக்குமுங்க?”



பேச்சிலே இதமே உன் மறு பெயர் கோயமுத்தூரா?



திருச்சியில் படித்துக் கொண்டிருந்த போது லால்குடியில் இருந்து வரும் ஒரு ஆசிரியர், “டேய் ஒரு தமிழர் தண்ணி கொண்டுவா”, என்றார். ஒரு கணம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அது என்ன தண்ணீரில் தமிழர் தண்ணீர் தெலுங்கர் தண்ணீர் என்றெல்லாம் உண்டா என நினைத்தேன். அவர் கையை நீர் நிரம்பிய ஒரு டம்பளரைப் பிடித்துக் கொண்டிருப்பது போல் வைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை ‘ஒரு தமிழர் தண்ணீர்’ கேட்டததும் புரிந்தது அவர் கேட்டாது ஒரு டம்பளர் தண்ணீர் என்பது.



சேலத்தில் இருந்து சென்னைக்கு குடும்ப சகிதம் என் சகோதரி ஒருத்தி வந்திருந்தாள். வாசலில் ஒருவன் மாம்பழம் விற்றுக் கொண்டு போனான். அவன் கூவியதைக் கேட்ட என் சகோதரியின் ஆறு வயது மகன் உள்ளே ஓடி வந்து கேட்டான், “என்னம்மா அவன் மாம்பளத்தெப் போய் மாம்பயம் மாம்பய்ங்கறான்?” என்று.



எனக்கு குமுதம் இதழில் படித்த ஒரு துணுக்கு நினைவுக்கு வந்தது. அந்தத் துணுக்கு, மலை வாழைப்பழம் திண்டுக்கல் அருகே சிறுமலையில் வெட்டப்டும் போது ‘வாள் பழம்’ என்றழைக்கப் படுகிறது. பின் லாரியில் ஏற்றப் பட்டு திருச்சி வந்தடையும் போது கனிந்து ‘வாழைப் பழம்’ ஆகிறது. அதே பழம் சென்னை வந்தடையும்போது அதிகமாகப் பழுத்து விடுவதால் ‘வாயப் பயம்’ ஆகிறது என்பதாகும் அந்தத் துணுக்கு.



மதுரையில் பொறி இயல் கல்லூரி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த ஒரு மருமகன் விக்டர் என்ற தன் சக மாணவனுடன் சென்னை வந்திருந்தான். ஒரு நாள் பஸ் ஒன்றில் இருவரும் ஏறினர், மருமகன் முன் வழியாகவும், நண்பன் பின் வழியாகவும். கண்டக்டர் பின் வழி அருகே உட்கார்ந்திருந்தார். முன் வழியே ஏறியவன் உரத்த குரலில் கத்தினான், “எலே விட்டரு ரெண்டு டிக்கட்டு வெட்டும்ப்ளே”, என்று. பஸ்ஸில் இருந்த பலர் கொல்லென சிரித்தனர்.



மதுரை சுந்தரத் தமிழே நகைச்சுவையே உன்னுள் அடக்கமோ?



பாலக்காட்டிலிருந்து வேலை தேடி கான்பூருக்கு ஒரு பையன் வந்திருந்தான். எனது நணபர் ஒருவர் அவனுக்குத் தங்க இடமும் உணவும் அளித்து வந்தார். மூன்று மாதம் தேடி அலைந்த பின் ஒன்றும் வேலை கிடைக்காமல் போகவே அவன் பாலக்காட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். வீட்டிற்கு வெளியே வந்து ரிக்ஷாவில் ஏறும்போது, “நான் போயிட்டு வறேன். பாவம் மாமிக்குதான் ரொம்ப புத்தி மொட்டு”, என்றான்.



அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்த என் நண்பரிடம் அவரது மனைவி கத்தினான், “மூணு மாசமா வடிச்சுக் கொட்டினேன் இந்தக் கட்டேல போறவனுக்கு. தண்ட சோறு தின்னூட்டு போறச்சே எனக்கு புத்தி மட்டுன்னு சொல்லீட்டுப் போறான் பாவி... பாவி”, என்று.



“ஐயையோ அவன் ‘புத்தி மட்டு’ ன்னு சொல்லலேடி. ‘புத்தி மொட்டு’ ன்னு சொன்னான். மலயாளத்துலெ புத்தி மொட்டுன்னா ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன் ரொம்ப கடமைப் பட்டு இருக்கேன்னு அர்த்தம்டி”, என்றார் என் நண்பர்.



அன்றொரு நாள் ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைத் தமிழன்பர் எங்களைப் பார்க்க வந்திருந்தார். வழக்கம் போல வீட்டிற்கு வந்த விருந்தாளியைக் காப்பி டிபனுடன் உபசரித்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். நான் ஏதோ சொல்ல அவர், “ஓமம்” என்றார். என் மனைவி அவர் சாப்பிட்ட டிபன் செரிக்கத்தான் ஓமம் கேட்கிறார் என நினைத்து ஓமம் வைத்திருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்தாள். அவர் பெரிதாகச் சிரித்து பின் சொன்னா, “நான் ஆமாம் என்று சொன்னேன். நீங்கள் அதைத் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்” என்று.



இப்படி ஊருக்கு ஊர் ஒரு தமிழ் என்று இருக்கும் நாள் மாறி உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே மாதிரிப் பேசும் நாள் என்றேனும் வருமா? வராதென்றே நினைக்கிறேன். ஏன் என்கிறீர்களா? உலகில் உள்ள அனைத்து மொழி பேசுபவர்களுமே இப்படி ஊருக்கு ஊர் ஒரு விதமாகத்தானே பேசுகிறார்கள்.



நடராஜன் கல்பட்டு

No comments: