Saturday, August 15, 2009

நிராதார மேம்பாலம்

உச்சி தாண்டித் தாவ
முட்டியதே பாலம்!
கொட்டுதே மெய்க்குள்
மேலான எழுபடிப் பாலும்!
ஒட்டுதே மனம் இருதய நேர்மையில்!
கிட்டுதே வள்ளலின் வெள்ளங்கி!
எட்டுதே மெய்ஞ்ஞானச் செம்பொருள்!
மயானத்தே இட்டும் சுட்டும் மெய்யழிக்கும்
மரணக் கடும்பிணி விட்டதே!
வள்ளலின் வாய்மை சுட்டதால்
நட்டமாகுதே மாயைத் திரையெலாம்!
நான்கு சட்டத்துக்கிடையிலே
தானடங்கா அருவக் கடவுளும்
மெய்யுருவக் கட்டுக்குள்
தானடங்கும் அதிசயம் நிகழுதே!
இரு பரிமாணசக்கரத் தட்டுகள்(ஆறாதாரச் சக்கரங்கள்)
முப்பரிமாணக் கோளத் திட்டுகளாய்ப்
பரிணாமப் பாய்ச்சலில் சுற்றுதே!
கோளத் திட்டுகளின் அதி வேகச் சுற்றலில்
மூளும் ஞானத் தீயில்
இருள்சேர் இருவினை யாவும்
பட்டுப் போகுதே!
பட்டுப் போல் மேனி ஆடை மின்னுதே!
பொருட்துட்டு மேல் மோகம் போய்
அருட்துட்டு மேல் காதல் பெருகுதே!
வள்ளலின் வாய்மை நட்ட
அருட்பெருஞ்ஜோதிக் கொடி
தலைமேல் பறக்குதே!
கொடிப் பரப்பின் சுடர்கள் யாவும்
உலக உயிர்கள் ஒவ்வொன்றையுந்
தொட்டுத் தொட்டு
வள்ளலின் தனிப்பெருங்கருணை
அள்ளி அள்ளி ஊட்டுதே!
நிராதாரப் பெரு வட்டம்
ஆறாதார விட்டத்துள்
அடங்கும் அற்புதம் நிகழுதே!
பதியவன் பட்டப் பேர் "நான்"
பாரில் யார்க்கும் பொருந்துதே!
பரஞானம் தலை மேல் குட்டி
அஞ்ஞானத் தளை வெட்டி
மெய்க்குள்ளே இறங்குதே!
தூய நோக்கத் திரு விழி
நெற்றிப் பொட்டாய்
யாவர்க்கும் வாய்க்குதே!
தொண்டைத் தேன்வழி திறந்தே
குருமொழி வெள்ளம் பொழியுதே!
இருதயத் திருபூமியெங்கும்
பாலுந் தேனும் வழியுதே!
உலக உயிர்களின் பசி நோய் கழியுதே!
நாபியில் சுகசொரூப
சத்திய தரிசனம் யாவர்க்கும்
அப்பட்டமாய்த் தெரியுதே!
ஆணவப் பொய்ப்பட்டங்கள்
யாவும் உரியுதே!
மெய்ப் பெட்டிக்குள்
பூட்டியிருந்த பொக்கிஷங்கள் யாவும்
காட்சிக்கு வந்தே
கைப்பொருள் ஆகுதே!
திரிகுண அஜீரணம் நீங்கி
சச்சிதானந்தமே பிட்டாய்
வயிற்றுக்குள் செரியுதே!
நாபியடியில் நவயுகத்தின்
பிரம்மாண்ட நிரூபணமாய்
அதிசயப் பரிமாற்றம்
யாவருங் காண நிகழுதே!
புழுவாய் நெளிந்த மனித மிருகம்
வள்ளலின் வழிநடத்துதலில்
கூட்டுப்பூச்சியாய்த் தவமிருந்து
பட்டாம் பூச்சி போல் தேவ மனிதமாய்ப்
பரிணாமப் பாய்ச்சலில் பரிமாறி
பரிபூரண முத்தியும்
முத்தேக சித்தியும்
இத்தரையில் பெற்றே
மாயா மெய்ந்நிலையைப் பறைசாற்றி
இன்பமாய்ப் பறக்குதே!
முதுகடி தொடங்கி
காலடி வரைப்
புவியடி ஈறாக
உச்சி மேல் ஜோதிக் கம்பம்
மெய்யுள் நிறைந்துக்
கீழிறங்கி நீளுதே!
மதி மருட்டும் இருள் மாளுதே!
மேலேழும் கீழேழும்
வேறின்றி ஒன்றப்
பதி"நான்"கும்
பதி "நானே" என்றே
வள்ளல் சொன்ன உண்மையெல்லாம்
புட்டுப் புட்டு உரைத்தேன்!
உம் புத்தி பட்டு
உம்மைச் சுட்டு
உம் உள் மெய் சுட்டி
உம்மை விளக்க
உதவட்டும் என்னுரையென்றே
உத்தம வள்ளலை
உளமார வேண்டுகிறேன்!
"நானே" என
ஏகார ஏகவொருமை உறுதியில்
வள்ளல் சொன்ன வாய்மை
காண்பீர் நீரே!

(எழுதிய நாள்: நவயுகம் - 7 நிராதார மேம்பாலம் - 24/01/2009)

No comments: