மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்! தமிழன் வேணு
விந்திய மலையைத் தாண்டி விட்டால், ஒருவர் மலையாளியாக இருந்தாலும் சரி, தெலுங்கராக இருந்தாலும் சரி, கன்னடராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி, ஹிந்தி கூறும் நல்லுலகம் அவர்களை "மதறாசி" என்றே விளிக்கிறது. ("மதறாசி" என்றால் கெட்ட வார்த்தை என்று மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தார்.) எது எப்படியோ, தென்னிந்தியர்களை சென்னையோடு சம்பந்தப்படுத்துகிற மூடப்பழக்கம் இன்னும் வட இந்தியாவில் புழக்கத்திலேயே இருக்கிறது.
இன்றோடு தோன்றி 369 அகவைகளைத் தாண்டி, 370-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறது சென்னை மாநகரம்! வாழ்த்துக்கள்!!
வெள்ளித்திரையில் கதாநாயகர்கள் சென்னைக்கு வருவதை எம் போன்ற பட்டிக்காட்டான்களுக்கு உணர்த்துவதற்கென்றே எல்.ஐ.சி. கட்டிடத்தையும், சென்ட்ரல் இரயில் நிலையத்தையும் காட்டுவார்கள். அடுத்த காட்சியில் அனேகமாக அவர்கள் மெரீனா கடற்கரையில் உழைப்பாளர் சிலைக்கு முன்னாலோ, அல்லது காந்தி சிலைக்கு முன்னாலோ பாட்டுப் பாடிக்கொண்டிருப்பார்கள்.
நான் பத்து வயதில் சென்னைக்கு வந்தபோது பார்த்த மூர்மார்க்கெட், ஸ்பென்ஸர்ஸ் கட்டிடம் ஆகியவை இருந்த இடத்தில் பழமையழித்து எழுந்து நிற்கிற அதிநவீனக் கட்டிடங்கள். இப்போது மத்திய சிறைச்சாலையும் பேய்வீடாகி விட்டது. ஒவ்வொரு முறையும் நேப்பியர் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம், இவ்வளவு குறுகலான பாலத்தை இந்த மாநகரத்தில் இன்னும் எத்தனை நாள் வைத்திருப்பார்களோ என்று ஒரு கிலி ஏற்படுவதுண்டு. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழைய கட்டிடங்களைப் பார்க்கிறபோதெல்லாம்..........!
சென்னை, சென்னைவாசிகளுக்கு மட்டுமின்றி, இங்கு வந்துபோகிறவர்களுக்கும் சில நினைவுகளைத் தந்து விடுகின்றது. சென்னைக்குப் போய் வந்து கிராமத்தில் சினேகிதர்களிடம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த அந்தப் பிள்ளைப்பிராயமும் நினைவுக்கு வருகிறது. தேவி பாரடைஸில் பார்த்த "தோஸ்த்" படம்! அப்பாவின் காருக்குள் உட்கார்ந்தபடியே ஐஸ்க்ரீம் விழுங்கிய டிரைவ்-இன் ஹோட்டல்! வழக்கமாக அப்பா தங்குகிற எழும்பூர் கென்னத் சந்திலுள்ள துர்கா பிரசாத் லாட்ஜ்; மீசை வைத்துக்கொண்டு பயமுறுத்திய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்;ஜெமினியில் பார்த்த குழலூதும் இரட்டையர்கள் பொம்மை; கஸ்தூரி ரங்க (ஐயங்கார்) சாலையிலிருந்த எனது உறவினர் வீட்டில் பறித்துக் கடித்த மாங்காய்கள். சென்னையென்றால் இன்னும் நிறைய நினைவுகள் இருக்கின்றன, எழுத எழுத இன்னும் இருக்கிறது என்று எச்சரிக்கிற அளவுக்கு!
எனக்குத் தெரிந்த சிலர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள், சென்னையைக் கரித்துக் கொட்டுவதில் விற்பன்னர்கள்.
"என்ன இருக்கு சென்னையிலே? இட்ஸ் ய பிக் வில்லேஜ்!"
"ஐயையோ! அந்த வெக்கையும் வியர்வையும்! மனுஷன் இருப்பானா அங்கே?"
"மை காட்! கூவம் ஒண்ணு போதாதா?"
"அப்புறம், அந்த ஊர் தமிழ்? வந்துக்கினியா..போய்க்கினியான்னு..டிஸ்கஸ்டிங்..."
இன்று அவர்கள் அனைவரும் தலைநரைத்து அல்லது வழுக்கை விழுந்து, திருவான்மியூரிலோ, வேளச்சேரியிலோ, சாலிக்கிராமத்திலோ இருந்து கொண்டு தினசரி சென்னையின் சாலைகளில் அவரவர் இரண்டு சக்கர வாகனங்களில் போய் வந்து கொண்டிருக்கிறார்கள்!
வந்தாரை வாழ வைக்கும் சென்னை வாழ்க!
No comments:
Post a Comment