எது கவிதை ? (1)
எதுகை மோனை கொண்டு
பொருள் மறைத்து
சொற் றொடர் விரித்து
வண்ண ஜாலம் தீட்டல் கவிதையா?
காதல் பற்றி எழுதலே கவிதையா?
அன்றி கண்டதே காட்சி
கொண்டதே கோலம் எனத் தான்
கண்டதைக் கண்டது போல் எழுதல் கவிதையா?
சொற் றொடரினை
சொந்தம் போல் வெட்டி
வரிகளில் வரிந்திடல் கவிதையா?
சந்தம் பார்த் தெழுதல் கவிதையா?
முற்றுப் புள்ளி கேள்விக் குறி
என வைத்தல் சரியா?
அன்றி மலை யேறி
தலை மழித்தாற் போல் விடுதலே சரியா?
கழுதை நினைத்ததாம் தன் குரல்
காதுக்கோர் தேனிசை யென்றே
நான் நினைக்கிறேன்
என் பிதற்றலும் கவிதையெனறே
கற்றோரே இயம்பிடுவீர்
கவிதை யாதென்றே
வைத்திடுவீர் முற்றுப் புள்ளி
என் கவிதைகளுக்கே.
எது கவிதை? (2)
புதுக் கவிதை என்கிறார் பலர்
ஹைகூ என்கிறார் சிலர்
நானறிந்ததொ பைக்கோ வைகோ தான்
தவிக்கின்றேன் எது கவிதை என அறியாது
கான்பூரில் ஒரு கவியரங்கு
இளசுகள் வைத்தனர் தம்
கவிதைகளை அரங்கினிலே
கவிதை யெல்லாம் காதல் பற்றி
சில சரஸம் பல விரஸம்
கைத் தட்டலோ விண்ணே அதிருமென
எழுந்தது ஒரு பெரிசு
கூனி வளைந்த உடல்
வாடிய கத்தரிக் காயென
வரிகள் விழுந்த முகமதனில்
காந்திக் கண்ணடி போல் ஒரு ஆதி நாள் கண்ணாடி
ஒரு கையில் தடி மறு கையில் காகிதத் துண்டொன்று
தட்டுத் தடுமாறி அடைந்தது மேடை தனை
அங்கிருந்தோர் கைதூக்கி மேலேற்றி
அளித்தனர் இருக்கை யொன்றை
அமர்ந்த பெரிசு எழுந்தது மெல்ல மெல்ல
துடைத்தது கண்ணாடியினைக் கைக் குட்டையால்
கனைத்தது தொண்டையினை அமர்ந்திருதோர் செவி பிளக்க
ஆரம்பித்தது தன் கவிதையியனைப் படிக்கும் பாவனையில்
“தேரா பரஸ்.......... சௌதா பரஸ்.................
பந்த்ரா பரஸ்..........................சோலா பரஸ்...............................”
நீண்டதோர் இடைவெளி இப்படியும் அப்படியும்
திரும்பியே பார்த்தது பெரிசு
ஆகா வந்து விட்டது பதினாறு வயது
வரப் போகின்றதோர் அழகிய காதல் கவிதை
என அனைவரும் ஏங்க “ஆதாப் அரஸ்”,
என்றே சொல்லி அமர்ந்தது பெரிசு தன் இருக்கை தனில்
ஹிந்தி அறியாதோர்க் கென தமிழாக்கம் இதோ
“பதிமூன்று வயது..........பதினான்கு வயது...................
பதினந்து வயது......................பதினாறு வயது...............................
வணக்கம் உங்களுக்கெ எனது”.
சொல்வீர் பெரியோரே கவிதை எது?
நடராஜன் கல்பட்டு
No comments:
Post a Comment