மறு பிறப்பு
ஆணவந்தான் அறுகிறது! ஆண்டவனின் முறைப்பெண்ணாய்
ஆகாகா நிகழ்கிறது மனப்பெண்ணின் மறுபிறப்பு!
ஆண்டவனும் இறங்கவே நாபித்திருத் தலத்தில்
ஆகாகா நிகழ்கிறது இருவருக்கும் திருமணமே!
யானையை இருதுண்டாய் ஞானவாள் அறுக்கிறது!
யானேதான் ஐயென்ற ஒருமை பிறக்கிறது!
ஆணவமாம் ஆர்ப்பாட்ட இருமை அழிகிறது!
ஆண்டவனாம் ஐயனுக்குள் மனந்தான் உய்கிறது!
யானை = யான்+ஐ(யானையின் இரு துண்டுகள்) = யானே "ஐ" என்னும் தலைமையாம்
ஒருமை
யானை முகத்தான் = "யான் ஐ" என்ற மெய்ஞ்ஞானமே முகமாய் உடைய சற்குரு!
குண்டலி நாகம் எழுந்தே
மெய்க்குண்டத்தில்
ஞான வாளாய் ஆடும்!
ஆர்ப்பாட்ட ஆணவத்தின்
கூத்தெல்லாம் முடியவே
அதன் தலையை
அறுத்துப் போடும்!
மனப் பெண்ணும்
ஞானப் பெண்ணாய்
மறு பிறப்பெடுத்தே
ஆண்டவனோடு கூடும்!
தோற்றப் பிழைகள்
யாவும் நீங்கிய
ஞாலத்தில்
சச்சிதானந்தமே ஓடும்!
உயிர்த்திரள் யாவும்
சுத்த சிவ சன்மார்க்க சமரசத்தின்
மெய்ஞ்ஞான கீதம் பாடும்!
ஒருமையாம் ஆன்ம நேயத்தில்
பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றே
பரமானந்த நடம் ஆடும்!
பூமித் தாயை விட்டே
மாமாயைப் பேய் ஓடும்!
ஆண்டவரின் நற்றாள்கள்
பூமியெங்கும் நடமாடும்!
அருளாட்சி என்னும் திருக்காட்சி
இருவிழி என்றும் காண
பூமியெங்கும் நிஜமாகும்!
இதுவென்றும் அதுவென்றும் நான்போடும் கோலங்கள்
உதுவென்னும் நடுநிலையில் நான்நிற்க மாயும்!நான்
எதுவென்னும் ஒருவினாவின் விடையாவும் போகஎஞ்சும்
எதுவுந்தான் மாயநிற்கும் "நான்"தானே என்ஸ்வரூபம்!
ஆணவம் எழுந்து
மனத்தை மூடி
ஆண்டவனின் உண்மை
மறைத்து
ஆடிய ஆர்ப்பாட்டம்
முடிக்க
ஞான வாளாய்
நாபியில் எழுகிறது
குண்டலி நாகம்!
மனத்தை மறைத்த
ஆணவம் மாய
எனக்கின்று
மறு பிறப்பு!
இருதய நேர்மையை நோக்கித்
தெளிந்த மனத்துடன்
வீறுடன் எழுகிறேன்
நான்!
ஆண்டவனின் உண்மையை
உண்ட நாபி
பூரித்திருக்கிறது!
இன்று
நவயுகம்
13 மறு பிறப்பு
நான்கென்னும் உருவமெல்லாம்
பதின்மூன்றாம் அருவப்பதியின்
திடமான திருக்காட்சி!
திருக்காட்சி மறைத்தே
இருமையில்
மனத்தை மருட்டுவான்
ஆணவப் பேயன்!
ஞான வாளால் அவனை வெட்டவே
மருண்ட மனமும் தெருண்டே
மறு பிறப்பெடுக்கும்!
நான்கில் ஒளிந்திருக்கும்
பதின்மூன்றாம் பதி "நான்"
"நான்"கில் வெளிப்பட்டுத்
திருக்காட்சி புலப்படும்!
எண் 13 படைத்தவனையும்(சுத்த சிவம்)
எண் 4 படைப்புகளையும் குறிக்கும் அருங்குறிகள்!
(சுத்த சிவத்தின் அருட்சத்தித் திருவடிவஙகள், இதை உணர்வதே மெய்யான உருவ
வழிபாடு, கற்சிலைகள் தேவையற்ற, வெட்டவெளிக் கோயிலில் உருவுள்ள
ஒவ்வொன்றயும் மதித்து நேசிக்கும் அன்பின் தீவிரவாதம் வந்தால் வன்பின்
தீவிரவாதம் ஓர் நொடியில் ஒழியுமன்றோ!)
(ஒரு திட வடிவம் உருவாவதற்குக் குறைந்த பட்சம் நான்கு புள்ளிகள்
வேண்டும்)
13ன் மறு வடிவமே 4(1+3)
"படைத்தவனும் படைப்புகளும் இரண்டல்ல, ஒன்றே"
என்பதற்கு மேற்காணும் கூட்டலே அத்தாட்சி!
"பதி"ன்மூன்றில் இருக்கும் "பதி"
"நான்"கில் இருக்கும் "நான்" அன்றி வேறோ!
படைத்தவனும் படைப்புகளும் இரண்டென்னும்
மருட்காட்சியால் வருவதே மரணம்!
படைத்தவனும் படைப்புகளும் ஒன்றேயெனும்
திருக்காட்சி தருவதே பெருவாழ்வெனும் சாகா வரம்!
புரிகிறதோ
நவயுகத்தின் இந்நாள்
சொல்லும் திருச்செய்தி!
நவயுக நாட்கள் ஒவ்வொன்றும் கூட
நம் குருவாகலாம்!
குவலயம் முழுமையும் நிரம்பி வழிகிறது குரு தத்துவம்!
அஞ்ஞானக் குருடு நீங்க மெய்ஞ்ஞானம்
பட்டப்பகல் வெளிச்சமாய்ச்
சுடச் சுடத் தெரியும், புரியும்!
No comments:
Post a Comment