Wednesday, August 5, 2009

திருடனைப் பிடிப்போம் வாங்க

ஓரு நாள் இரவு மணி 11-30 இருக்கும். உமாபதி அழைத்தார், "பக்கத்து தெரு ஏட்டு எழுமலை வீட்டுலெ திருடன் வந்திருக்கான். வாங்க போய் பார்க்கலாம்" என்று.

திருடன் என்றாலே எல்லோருக்கும் கொஞ்சம் பயம் இருக்கும். எனக்கு சற்று கூடவே பயம். திருடன் கையிலிருக்கும் தடியாலெயோ அல்லது அவனைப் பிடிக்க வந்துள்ள போலீஸ் காரன் லாட்டியாலயோ யாருக்கோ விழவேண்டிய அடி என் மண்டயில் விழுந்தால்? இருந்தாலும் பக்கத்தில் தான் உமாபதி இருக்கிறாரே. தவிர நாங்கள் அசரீரியாகத் தானே போகப் போகிறோம். யார் கண்ணிலாவது தெரியவா போகிறோம். நடந்தேன் அவருடன் நள்ளிரவில்.

ஏட்டு எழுமலை வீட்டில் அவர் சம்சாரம் பார்வதியின் சன்னக்குரல், ஏழுமலையை உலுக்கி கொண்டே, "என்னங்க, ஏந்திரிங்க. இப்படி கொரட்டை விட்டு தூங்கிகிட்டு இருக்கீங்களே. பக்கத்து ரூம்லெ திருடன் வந்திருக்கான் போல இருக்கு. கொஞ்ச நாளிக்கொரு தரமா 'கர்ர் கர்ர்..'ந்னு நம்ம முப்பாட்டன் காலத்து இரும்பு சேஃப் பொட்டியொட கீல ஏக்ஸா போட்டு அறுக்கரா மாதிரி சத்தம் கேட்குதுங்க. அதுலதானெ பிள்ளைங்க படிப்புக்காக பத்தாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கோம். அதை கொண்டு

போயிட போறாங்க."


"சரி சரி ஏந்த்ரிக்கேன்." பேச்சு நிற்கும் போதெல்லாம் பக்கத்து அறையிலிருந்து 'கர்ர் கர்ர் ' சத்தம்.

"இப்பொ இன்ன பண்லாங்க? நா வேணா போலீஸ் டேஷனுக்கு போய் ரெண்டு போலீஸ் காரங்களெ கூட்டியாரட்டுமா?"

"நா ஒரு போலீஸ் காரன் இங்க நிக்கிரது உன் கண்ணுலெ படலயா? கேட்டுப் பாரு போலீஸ் டேஷன்லே. இந்த ஏட்டு ஏழுமலெ கைலே மாட்டாத திருடனே இல்லென்னு சொல்லுவாங்க."

"சரி, இப்போ இன்னா பண்லான்னு சொல்லுங்க."



"நான் மெதுவா அந்த உள்ளுக்குள்ளாரெ போறேன். நீ கதவாண்ட ஒரு கோணிச்சாக்கோட நில்லு. திருடனெப் பிடிச்சதும் ஒரு கொரல் குடுக்கறேன். நீ உள்ரெ வந்து கோணிச்சாக்கெ அவன் தலை வழிய உட்டு அவன் மூஞ்சிய மூடிடூ. ஓனக்கு ரெண்டடி பின்னாடியே நம்ம பெரிய புள்ளெ மணி என்னொட லாட்டிய வெச்சிக்கிட்டு நிக்கட்டும். திருடன் தலையே கோணியாலெ மூடினதும் அந்த லாட்டியாலெ ரெண்டு தட்டு தட்டட்டும். நம்ம சின்னபுள்ளெ சின்னதம்பி அந்த லைய்ட் ஸ்விட்சாண்டெ நிக்கட்டும். நாம சொன்னதுன் அவன் லைட்டெ போடணும். சரியா?"







"சரிங்க. அப்படியே செஞ்சுடலாங்க. கட்டிலுக்கு அடிலெதான் கோணிச் சாக்கு இருக்கு. அதை நான் எடுத்துக்கறேன். 'டேய் மணி, சின்னத்தம்பி ஏந்திருங்கடா' என்று அவர்களை எழுப்பி அவர்கள் செய்யவேண்டியதை அவர்களுக்கும் புரியவைத்தாள் பார்வதி. தலையாணி அடியிலிருந்த ஏழுமலையின் லாட்டி மணி கைக்கு மாறியது.மெதுவாக சத்தம் ஏதுமின்றி ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கவேண்டிய இடங்களை அடைந்தனர்.



மிக மிக ஜாக்ரதையுடன் கதவைத்திறந்து கொண்டு இரும்பு சேஃப் இருக்கும் அறை உள்ளே நுழைகிரார் ஏழுமலை. அடுத்த கணம் ஒரு ஆள் வெளியே ஒடிவர கோணிச்சாக்கைப் போட்டு அவன் தலையயும், பாதி உடலையும் மறைக்கிறாள் பார்வதி. கண் இமைக்குமுன் மணியின் கையிலிருந்த லாட்டி கோணிக்குள் இருக்கும் மனிதன் தலையில் விழுகிறது.

இதெல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா? தெருவில் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் வெளிச்சம் சிறிதளவு ஜன்னல் வழியே ஏழுமலை வீட்டிற்குள் விழுகிறதே.

லாட்டி அடி விழுந்ததும், திருடன் 'ஐயோ' என்று கத்துகிறான். எங்கோ கேட்ட குரல் இது. ஏன் இருக்கக்கூடாது? இந்த உலகத்துலே தான் எழு பேர் ஒரே மாதிரி இருப்பங்கன்னு சொல்லுவாங்களே. ரெண்டு பேரோட குரல் ஒண்ணா இருக்கக் கூடாதா என்ன?

சின்ன தம்பி விளக்கை போடு என்று பார்வதி சொல்ல அவன் ஸ்விட்சைத் தட்டுகிறான். விளக்கு எரிகிறது. கோணிக்குள் இருக்கும் திருடன் தப்பி ஓடும் வழியைத் தேடாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு '' தா... தை... தக்கத்... தை என்று குதிக்கிறான், வேஷ்டியை சற்றே தூக்கி பிடித்துக்கொண்டு. திடீரென அவன் வேஷ்டிக்குள் இருந்து வெளியே வந்து கட்டிலின் மேல் தாவி பின் ஜன்னல் வழியே வெளியேறுகிறது ஒரு குண்டு எலி.

கோணியை எடுத்து திருடன் யார் என்று பார்வதி பார்க்க நினைக்க, அசடு வழிய நிற்கிறார் ஏழுமலை!

"திருடனைத்தான் பிடித்தாயிற்றே. திரும்புவோம் வாங்க", என்றேன் நான். உடனே கிளம்பினார் உமாபதியும்.





நடராஜன் கல்பட்டு

No comments: