Monday, August 3, 2009

பதில்சொல்....!

என் காதல் படிக்கட்டுகளில்
பகலவனின் ஊஞ்சல்...
சொற்ப எண்ணங்களும்
என்றும் இளமையைத் தேட
கற்பதற்கு மனமின்றி
சொற்சிதைவு கண்டு
எதைஎதையோ தேடித்
தொலைகிறது மனம்...

வீணாய் என் இதயக்கடிகாரம்
நேரத்தை வேகமாக்கித் துடிக்கிறது..
நிமிடத்திற்கு 90, 100 என்று...

சுற்றுப்புறம் என் எண்ணத்தைச்
சுதிபோட்டு
வெற்றுப்புறமாய் அடிக்க
எண்ணமெங்கிலும் ஏனோ
ஓர் அங்கலாய்ப்பு..

விபரீத எண்ணங்கள் மனதில்
வீணாய் விரலிட
தொலைந்துபோன என் இதயத்தின்
வீணை நரம்புகளை
எங்குபோய்த் தேடுவேன்...

வீட்டிற்கு ஒரு மரம்போல
வினாடிக்கொரு ஆசை..
நிமிடத்திற்கொரு கனவு...
என்னில்
கலைந்துபோன கனவுகளையும்
கனவாய்ப்போன ஆசைகளையும்
இனி எப்படிக் கொணர்வேன்...?

சித்திரத்திற்குப் பின்புலத்தில்
ஒளிந்திருக்கும் உண்மைகள்
விசித்திரமாய் வந்து தாக்க
உண்மையெனும் ஊஞ்சல்
என்றோ நின்றுபோய்விட..
என் உண்மை முகத்தை
எங்கோ தொலைத்துவிட்டேனே.....

மறந்துபோன என்
எண்ணங்கள்
சுருங்கிய பூமியாய்
விண்ணில் சிக்க...
என் எண்ணங்களைப்
பிரபஞ்சம்போல்
விஸ்தரிப்பது எப்போது...?

உலகைப்பற்றிய கனவுகளுடன்
பெரிய வட்டத்தில்
சுழன்றுகொண்டிருந்த என்
சிந்தனையை
உன்னை நோக்கி
சுழற்றிவிட்டவளே...
பதில் சொல்...
உன் வட்டத்தை விட்டொழித்து
என் வட்டத்திற்கு நான்
பயணப்படுவதெப்போது...?

சூறாவளியுடன் எழுத்துக்களால்
விளையாடிக்கொண்டிருந்த என்
மூளையை இரு
விழிகளால் விளையாடி
மந்தப்படுத்தியவளே...
நான் உன்
விழிமறந்து என்
வழி நோக்கிச்
செல்வதெப்போது...?

வளர்பிறைச்சந்திரனாய்
வளர்ந்து கொண்டிருந்த
என் சிந்தனைகளை
பாம்பாய் விழுங்கி
அமாவாசையாக்கியவளே...
பதில்சொல்..
என்று இனி நான்
பௌர்ணமியை நோக்கி
நகர்த்துவேன் என்
நாட்களை...?

என் இளமைக்காலத்தை
உனக்காக எடுத்துக்கொண்டு
என்னை
முதியவனாக்கியவளே...
இனித்
தொலைந்துபோன என்
இளமையை எப்படி மீட்பேன்..?

காதல் படிக்கட்டுக்கள்
எல்லோருக்கும் முன்னேற்றப்
பாதைவகுக்கும்...
நான்மட்டும்
படிப்படியாய்க்
கீழே இறங்கிக்கொண்டிருக்கிறேன்..
உன் நினைவு ரணத்தால்..

No comments: