Saturday, July 7, 2012

ஷாக் !

முதல் பக்கம்...
இந்த முறை மின் கட்டண அட்டைகளில் எழுதப்பம்டு தொகைகளைப் பார்க்கும் எவருக்கும் நிச்சயம் ஷாக் அடிக்கும். இதுவரை 800 ரூபாய் அளவில் கட்டணம் செலுத்தி வந்த ஒரு நண்பருக்கு மூவாயிரம் ரூபாய்க்கு பில் வந்திருக்கிறது. அதுவும் தினசரி இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்தபோதே இந்த பில்.

கடந்த ஒரு வருடமாகத் தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்கு மின்வெட்டை அனுபவித்தோம். கூடங்குளம் அணு உலை செயல்பட ஆரம்பித்துவிட்டால் மின் பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்ற பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் தலையில் திணிக்க இது வசதியாக இருந்தது.

உண்மையில் மின்வெட்டு கொஞ்சம் தணிவதற்கு உதவியது காற்றாலைகளிலிருந்து கிடைத்த மின்சாரம்தான். கூடங்குளம் சட்டத் தடைகளைக் கடந்து இயங்கத் தொடங்கவே டிசம்பர் ஆகலாம்.

ஆனால் தமிழ்நாட்டின் அசல் பிரச்சினை என்ன ?



மின் கட்டணங்களை உயர்த்தி அறிவிக்கும்போது முதலமைச்சர் ஜெயலலிதா மின்வாரியம் திவாலாகாமல் இருக்க வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை என்றார். வாரியம் ஏன் திவாலாயிற்று என்பதற்கு அவர் சில காரணங்களைப் பட்டியலிட்டார். தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படாமல் இருந்ததற்கும் முந்தைய ஆட்சி மீது சில குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். அதற்கு கருணாநிதி பதில் குற்றச்சாட்டுகளுடன் அறிக்கைகள் வெளியிட்டார்.



தி.மு.க, அ.தி.முக ஆட்சியாளர்களின் பரஸ்பர பழி சுமத்தலை ஒதுக்கிவைத்துவிட்டு அசல் உண்மை என்ன என்று தேடுவது அவசியம்.

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஆய்வை மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் சா.காந்தி வெளியிட்டிருக்கிறார். மே பதினேழு இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், ஆழி பப்ளிஷர்ஸ் சேர்ந்து வெளியிட்டுள்ள அவரது நூல் “தமிழகத்தில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும்” ஒவ்வொரு தமிழரும் படித்தாகவேண்டிய நூல். தமிழ்நாட்டின் முக்கிய சிந்தனையாளர்களான நம்மாழ்வார், எஸ்.என்.நாகராஜன், தொ.பரமசிவன், எஸ்.பி உதயகுமார் ஆகியோர் சிறப்பான முன்னுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

பொறியாளர் காந்தி 37 வருட காலம் தமிழக மின்வாரியத்தில் பணியாற்றியவர் மட்டுமல்ல. பொறியாளர் சங்கத்தின் தலைவராகவும் அரசுகள் மின்வாரியம் தொடர்பாக எடுக்கும் தவறான் முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவராகவும், நீதிமன்றம் சென்று வழக்காடி வருபவராகவும் விளங்குபவர்.



அரசு ஆவணங்கள், மின் வாரிய ஆவணங்கள் முதலியவற்றின் ஆதாரங்களுடன் காந்தி எடுத்துவைக்கும் தகவல்கள் நிஜமாகவே ஷாக் அடிக்கின்றன.

புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் எல்லாவற்றையும் தனியார்மயமாக்கும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் 1990 முதல் இன்று வரை எப்படி மின்சாரத் துறையை சீரழித்திருக்கின்றன என்று காந்தி தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அவர் தெரிவிக்கும் தகவல்களிலிருந்து சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்:



1. எண்பதுகளில் அரசுகள் எடுத்த நடவடிக்கைகளினால் அதிகரிக்கப்பட்ட மின் உற்பத்திதான் 90 முதல் 2000 வரை அதிகரித்த மின் தேவையை தாக்குப் பிடிக்க உதவியது. ஆனால் 90களில் மின் உற்பத்தியை அதிகரிக்க அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்காதன் விளைவை 2000க்குப் பிறகு சந்திக்க வேண்டி வந்தது.

2. மின்சாரம் மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசை மீறி மாநில அரசு இதில் எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது.

3.இதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் மத்திய அரசு புதிய மின் உற்பத்திக்காக மூலதன ஒதுக்கீடு செய்துவந்தது. 90களில் தாராளமயம், தனியார்மயம் தொடங்கியதும், எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் மூலதன ஒதுக்கீடு என்பதே ரத்து செய்யப்பட்டது.

4.பொதுத்துறை நிறுவனங்களும் மின்வாரியங்களும் புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. இனி தனியார் நிறுவனங்களே மின் உற்பத்தியில் ஈடுபடவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.

5. தனியார் கம்பெனிகள் தயாரிக்கும் மின்சாரத்தை எந்த விலையில் மாநில மின் வாரியங்கள் வாங்க வேண்டும் என்பதற்கான விதிகளை மத்திய அரசு தீர்மானித்தது.

6. விசித்திரமாக மின்சாரம் தயாரிப்பதற்கு ஆகும் செலவின் அடிப்படையில் மட்டும் விலை நிர்ணயிக்கப்படவில்லை. அது ஒரு அடிப்படை. இன்னொரு அடிப்படை, தனியார் கம்பெனி மின் நிலையம் தொடங்குவதற்கு போட்ட முதலீட்டுச் செலவைத் திரும்ப எடுப்பதற்காகவும் ஒரு தொகையை மின்வாரியங்கள் விலையில் சேர்த்துத் தரவேண்டும் என்று மத்திய அரசு நிர்ணயித்தது.

7. இதன்படி மின் நிலையத்துக்கு தனியார் போட்ட மூலதனத்தில் 24 சதவிகித அளவுக்கான தொகையை ஒவ்வோராண்டும் மின் வாரியம் கொடுக்கவேண்டும். நான்காண்டுகளில் முழு மூலதனத்தையும் கொடுத்துவிடவேண்டும். இது தவிர மின்சாரத்துக்கு விலைக் கட்டணமும் உண்டு.

8. ஒவ்வோராண்டும் மின்சார தேவை என்பது எட்டு சதவிகிதம் வரை அதிகரிக்கும். ஆனால் 2008ல் இது 13 சதமாகிவிட்டது. காரணம் ஏ.சி பெட்டிகளும் டி.வி.பெட்டிகளும் தமிழகத்தில் திடீரென அதிகரித்ததுதான்.

9. தனியாரிடம் எக்கச்சக்க விலையில் மின்சாரம் வாங்கவேண்டியிருந்ததால், தானே சில மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதற்காக நிதிக்கடன் வாங்கியிருந்த மின்வாரியம் அதையும் தனியாருக்கு தருவதில் செலவழித்தது.

10. தமிழக அரசு 1996-98ல் ஆறு தனியார் கம்பெனிகளுடன் மின்சார தயாரிப்புக்கு ஒப்பந்தம் போட்டது. இதில் விடியோகான் நிறுவனம் மட்டும் எந்த வேலையையும் தொடங்கவில்லை என்பதால் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ரத்து செய்ததால் தனக்கு நஷ்டம் என்று வீடியோகான் வழக்கு தொடுத்து 150 கோடி ரூபாயை அரசிடம் நஷ்ட ஈடாகப் பெற்றது. (வீடியோ கானுக்காக வாதாடியவர் ப.சிதம்பரம் !)

11. மின் தயாரிப்புக்கு தமிழ்நாட்டில் பெரிதும் பயன்படுவது நிலக்கரிதான். டன்னுக்கு 900 ரூபாய் விலையில் வாங்கும் நிலக்கரியை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ரயிலில் எடுத்துச் செல்ல டன்னுக்கு 1600 ரூபாய் கட்ட வேண்டும். இந்த நிலையில் நெய்வேலி நிலக்கரி சுரங்ககத்தின் வாயிலிலேயே அமைக்கப்பட இருந்த புதிய மின் உற்பத்தி நிலையத்தை மத்திய அரசு தமிழக மின்வாரியத்துக்குத் தராமல் தனியார் கம்பெனிக்குத் தந்தது. இதனால் மின்வாரியத்துக்கு 600 கோடி ரூபாய்கள் இழப்பு.

12.கிழக்கு மாவட்டங்களில் கிடைத்த இயற்கை எரிவாயுவைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய மின்வாரியத்துக்கு 396 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது ஆனால் மத்திய அரசு ஒன்பது தனியார் நிறுவனங்களுக்கு 430 மெகாவாட் உற்பத்திக்கு அனுமதி கொடுத்தது.

13. மத்திய அரசின் தவறான கொள்கையால், தமிழகத்தில் ஐந்து தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் மின்வாரியம் ஒவ்வொரு வருடமும் 1006 கோடி ரூபாயை மூலதன திருப்பலாகச் செலுத்தியது. மின் உற்பத்தி அளவோ மொத்தம் 988 மெகாவாட்தான். இந்தத் தொகையை மின்வாரியம் தானே முதலீடு செய்திருந்தால், வருடத்துக்கு 750 மெகாவாட் தரும் மின் நிலையங்களை நிறுவியிருக்கலாம். பத்தாண்டுகளில் 7500 மெகாவாட் உற்பத்தித்திறன் ஏற்பட்டிருக்கும்.

14. தனியாருக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு மின்வாரியம் கொடுத்த விலைகள் அபத்தமானவை. ஒரே நேரத்தில் , ஒவ்வொரு கம்பெனியிடம் ஒரு விலை. ஐந்து கம்பெனிகளிடம் ரூ3.52 முதல் ரூ 17/78 வரை கொடுத்த மின்வாரியம் அதே சமயம் வேறு இரு கம்பெனிகளிடம் ரூ2.31, ரூ2.58 என்று வாங்கியிருக்கிறது.

15. 2011 மார்ச் முதல் மே வரை மின்வாரியம் தனியாரிடம் தினசரி ஒரு கோடி யூனிட்டுகளை யூனிட் தலா 12 முதல் 14 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. யூனிட் ரூ4.50க்கு மேல் வாங்கினாலே மின்வாரியம் திவாலாகிவிடும் என்பதே நிஜம். மின்வாரியத்தின் எல்லா நஷ்டமும் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்த மின்சாரத்தினால்தான்.



இந்த 15 தகவல்களே பெரும் ஷாக் அடிப்பவை. காந்தி எழுதியிருக்கும் நூலில் இன்னும் எண்ணற்ற ஷாக்குகள் காத்திருக்கின்றன. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பதே எப்படி மக்கள் விரோதமான அமைப்பாகவும் மின்வாரியத்தையே குழி தோண்டி புதைக்கும் கருவியாகவும் இருக்கிறது என்பதை பல சான்றுகளுடன் நிரூபித்திருக்கிறார். ஆணையம் தொடர்பான பல வழக்குகளில் எப்படி தனியாருக்கு சாதகமாகவும் மக்களுக்கு விரோதமாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டன என்று விவரித்திருக்கிறார்.

இந்த சீரழிவிலிருந்து மின் வாரியத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்ற வழி என்ன என்றும் காந்தி நூலில் தெரிவித்திருக்கிறார். சிக்கலான விஷயமானாலும் எதையும் ஆழ்ந்து படிப்பவர், உடனே கிரகித்துக் கொள்ளும் திறமையுடையவர் என்று புகழப்படும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்த நூலை நான் பரிந்துரைக்கிறேன். படித்து முடித்தபின் இதில் கூறப்பட்டிருக்கும் நியாயங்கள் தொடர்பாக அவர் அரசு என்ன செய்யப்போகிறது என்று அவர் அறிவிப்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.




--


ALAVUDEEN

No comments: