இறுதிப் பத்தில் இஃதிகாப் எனும் ஸுன்னாவை உயிர்ப்பித்து நரக விடுதலையை அடைந்து கொள்வோம்!
மகத்துவம் பொருந்திய ரமழானின் ரஹ்மத்தையும் மஃபிரத்தையும் பெற்றுக் கொண்ட ஒரு முஃமின் ஆசை வைக்கும் அடுத்த அம்சம் “இத்கு மினன் நார்” எனப்படும் நரக விடுதலையாகும்.
“எனவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு, சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்” (ஆல இம்ரான் : 185)
நரக விடுதலை என்பது இறை வழிபாடுகளில் ஈடுபடுவது,அவற்றில் விடாப்பிடியாக இருப்பது, வல்ல அல்லாஹ்விடம திக்ருகள் ஊடாகவும் பிரார்த்தனைகள் ஊடாகவும் ஏனைய வணக்க வழிபாடுகள் ஊடாகவும் அதிகமதிகம் அழுது கெஞ்சிக் கேட்பது போன்ற விடயங்கள் ஊடாக அடையப் பெறுவதே. அதற்கு சிறந்த சாதனமாக இருப்பது “இஃதிகாப்” என்ற வணக்கமாகும். தனது அன்றாட சோலிகளை விட்டும் தன்னை துண்டித்துக் கொண்டு தனது இரட்சகனின் வாயிலில் நின்று அவனது மன்னிப்பையும் அருளையும் அவனது தண்டனையிலிருந்து விடுதலையையும் வேண்டுவதற்கு இத்தினங்களில் இஃதிகாப் இருப்பது சாலப் பொருத்தமாக அமையும்.
நபி (ஸல்) அவர்கள் இறுதிப் பத்தில் மிக மிக உற்சாகமாகக் காணப்படுவார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் நபிமொழி இமாம் புகாரியின் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. “இறுதிப் பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு அதன் இரவுகளை (வணக்க வழிபாடுகளால்) உயிர்ப்பிப்பார்கள். தனது மனைவியரையும் எழுப்பி விடுவார்கள்.”
ஆயிஷா (ரழி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பும் இத்தினங்களில் நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு உற்சாகமாகவும் சுறு சுறுப்பாகவும் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை தௌிவுபடுத்துகிறது. “நபி (ஸல்) அவர்கள் வேறு தினங்களில் சிரமம் எடுத்துக் கொள்ளாத அளவுக்கு இத்தினங்களில் (வணக்க வழிபாடுகளுக்காக) சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறாாகள்” (முஸ்லிம்)
அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது. “நபி (ஸல்) அவர்கள் அனைத்து ரமழானிலுமே பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். நபியவர்கள் வபாத்தான ஆண்டு மட்டும் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.”
இந்த ஹதீஸ் குறித்து இப்னு ஹஜர் அல் அஸ்கலானி தனது பத்ஹுல் பாரி எனும் கிரந்தத்தில் குறிப்பிடும்போது, நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி வருடத்தில் இஃதிகாபின் கால அளவை இரட்டிப்பாக்கியமைக்கான காரணம் அன்னார் தமது இறுதி முடிவு நெருங்கி விட்டதை அறிந்திருந்தமையாகும். எனவே நபியவர்கள் தமது நல்லமல்களை அதிகாித்துக் கொள்ள விரும்பினார்கள். அதனூடாக தமது உம்மத்திற்கு நல்லமல் புரிவதில் மிகுந்த சிரமமெடுத்துக் கொள்ள வேண்டும். அந்நிலையிலேயே அவர்கள் தமது இரட்சகனை சந்திக்க வேண்டும் என்ற செய்தியை உணர்த்த விரும்பினார்கள் என்கிறார்.
உண்மையில் மனிதன் தனக்காகவும் உலக விவகாரங்களுக்காகவும் நீண்ட நேரங்களை செலவிடுகிறான். அவ்வாறிருக்கும் போது தனது இரட்சகனுக்காக வருடத்தில் பத்து நாட்களை ஒதுக்கி தனது அன்றாட உலக சோலிகளை விட்டொதுங்கி தனது இரட்சகனோடு தனித்திருப்பதற்காக அந்த நாட்களைப் பயன்படுத்திக் கொள்வது எவ்விதத்திலும் அவனுக்கு குறைந்து போக மாட்டாது. அதனூடாக அவன் மிகப் பெரும் சிறப்பையும் பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறான். மட்டுமல்லாது நரக விடுதலையையும் பெற்றுக் கொள்கிறான்.
யாரெல்லாம் “இஃதிகாப்” எனும் அந்த ஸுன்னாவை உயிர்ப்பிக்கின்றார்களோ அவர்கள் தமது வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எனக் கூறின் அது மிகையாகாது. வெற்றி பெறக்கூடிய மனிதன் தனது அனைத்து விடயங்களிலும் வெற்றி பெறுகிறான். தனது வாழ்க்கை சார்ந்த விடயங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதில் வெற்றி பெறுகிறான். தனது இரட்சகனுடனான சிறந்த உறவைப் பேணுவதில் வெற்றி பெறுகிறான்.
நோய் போன்ற எத்தனை எத்தனை விடயங்களுக்காக மனிதன் தனது அன்றாட செயற்பாடுகளைத் துண்டித்துக் கொண்டு ஓய்வெடுக்கிறான். சிலவேளை அற்பமான காரணங்களுக்காக கூட அவ்வாறு செய்கிறான். அப்படியிருக்கும்போது தனது இரட்சகனுடன் தனித்திருப்பதற்கும் அவனுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும் நேரம் செலவிடுவது எவ்வளவு அவசியமானது. இது குறித்து நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இஃதிகாப் குறித்து அல்-குர்ஆனில் பல இடங்களில் வந்துள்ளது. “நீங்கள் பள்ளிவாயில்களிலே இஃதிகாப் இருக்கும் நிலையில் பெண்களோடு உறவு கொள்ளாதீர்கள்” (பகரா : 187) போன்ற வசனங்களை இங்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இஃதிகாபுக்காக வேண்டி எமது நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதிலும் முடியுமானளவு எமது அன்றாட சோலிகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதிலும் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். பத்து நாட்களும் தொடராக இஃதிகாப் இருப்பது சிரமமானது எனக் கருதுவோர் அதனை விட குறைந்த நாட்கள் இருக்க முயற்சிக்கலாம். சில ஆலிம்கள் சொல்வது போன்று கூடுதல் நேரமோ குறைந்த நேரமோ இஃதிகாப் நிய்யத்துடன் பள்ளிவாயிலில் ஒரு மணித்தியாலம் அல்லது சில நிமிடங்கள் தான் தாித்திருந்தாலும் அதன் கூலியை பெற்றுக் கொள்ள முடியும்.
பெண்களது இஃதிகாப்
பெண்களும் இஃதிகாப் இருக்கலாம். தனது கணவனின் அனுமதியோடு பொருத்தமான சூழலும் ஆண்களை விட்டும் மறைவாக இருக்கக் கூடிய பொருத்தமான இடமும் பொருத்தமான பள்ளிவாசலும் காணப்படின் அவளுக்கு இஃதிகாப் இருக்க முடியும். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) மற்றும் ஹப்ஸா (ரழி) ஆகியோருக்கு இஃதிகாப் இருக்க அனுமதியளித்திருக்கிறார்கள். இது பெண்களும் இஃதிகாப் இருக்கலாம் என்பதற்கு ஆதாரமாக அமைகிறது.
இமாம் புகாரி தனது ஹதீஸ் கிரந்தத்தில் “பெண்களது இஃதிகாப்” எனும் தலைப்பில் ஓர் அத்தியாயத்தை இணைத்திருப்பதும், இமாம் மாலிக் தனது கிரந்தமான “முவத்தா”வில் ஒரு பெண் இஃதிகாப் இருந்து பின்னர் “ஹைழ்” ஏற்பட்டு விட்டால் தனது வீட்டிற்கு அவள் மீண்டு,எந்த கணத்தில் சுத்தமாகின்றாளோ அக்கணமே பள்ளிக்கு மீண்டு விடலாம் எனக் குறிப்பிடுவதும் பெண்களது இஃதிகாபுக்கு மேலும் வலு சேர்க்கும் ஆதாரங்களாகும்.
பொருத்தமான பள்ளிவாயில் காணப்படாதவிடத்து பெண்கள் தத்தமது வீடுகளில் ஓர் இடத்தை ஒதுக்கி – தொழுகையறையாக இருப்பது வரவேற்கத்தக்கது – அங்கு இஃதிகாபின் ஒழுங்குகளைப் பேணி அந்த ஸுன்னாவை நடைமுறைப்படுத்தலாம். எனவே எமது பெண்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும். அருள்பாலிக்கப்பட்ட இந்நாட்களை அல்லாஹ்வை வழிபடுவதில் அவர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பெண்களில் கணிசமான தொகையினர் பெருநாளைக்குரிய தீன் பண்டங்கள் செய்வதிலும் அத்தினத்திற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதிலும் தமக்கும் தமது குழந்தைகளுக்குமான ஆடைகளைக் கொள்வனவு செய்வதிலும் இந்த மகத்தான நாட்களைக் கழித்து விடுகின்றனர். இது மிகவும் கவலையான விடயம். இதனால் கடைசிப் பத்தின் பேறுகளையும், லைலதுல் கத்ருடைய சிறப்புக்களையும் தவற விடுவதோடு நரக விடுதலையும் கூட தவறிவிடக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. வல்ல அல்லாஹ் எம்மைக் காப்பாற்ற வேண்டும். பெண்கள் இவ்விடயத்தில் கூடுதல் கரிசனைக் காட்டுவார்களாக.
லைலதுல் கத்ர்
இந்த மகத்தான பத்து நாட்களில் ஒரு மனிதன் அடைந்து கொள்ளும் மிகவும் அரிய பொக்கிஷமே லைலதுல் கத்ர் ஆகும். ஆயிரம் மாதங்களின் பேறுகளைப் பெற்றுத் தருகின்ற இம்மகத்தான இரவு எண்பத்து மூன்று வருட நன்மைகளை நமக்குப் பெற்றுத் தருகின்றது. இந்த இரவைக் கூட நபி (ஸல்) அவர்கள் கடைசிப் பத்திலேயே தேடிப் பெற்றுக் கொள்ளுமாறு தூண்டியுள்ளார்கள். “ரமழானின் கடைசிப் பத்தில் அதனைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றும் இன்னொரு அறிவிப்பில் “ரமழானின் கடைசிப் பத்தில் வரும் ஒற்றை நாட்களில் அதனைப் தேடிக் கொள்ளுங்கள்” என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.
அன்பானவர்களே! வாழ்க்கையில் கிடைக்கின்ற மிகவும் அரிதான இந்த நாட்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள இப்பொழுதில் இருந்தே திட்டமிட்டுக் கொள்வோம். எம்மை ஒழுங்குபடுத்திக் கொள்வோம். “கைலூலா” எனும் பகல் பொழுதில் தூங்கும் சிறு தூக்கம் மூலம் இரவு வணக்கத்திற்குத் தயாராகுவோம். வீண் வாதாட்டங்களையும் சண்டை சச்சரவுகளையும் விட்டுத் தூரமாவதோடு கோபமுற்றிருப்பவர்களை சமாதானம் செய்து வைப்போம். வீண் வாதாட்டமும் சண்டை சச்சரவும் இந்த நாட்களின் மகத்துவத்தை இழக்கச் செய்து விடும் என்பதைக் கவனத்திற் கொள்வோம்.
இந்த நாட்களின் ஒவ்வொரு இரவையும் கியாமுல் லைல் (நின்று வணங்குதல்), அல்குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற இபாதத்களால் உயிர்ப்பிப்போம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யார் லைலதுல் கத்ருடைய இரவில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.” (புகாரி)
எனவே இந்த பத்து நாட்களிலும் உத்வேகத்தோடு சிரமப்பட்டு இபாதத்களில் ஈடுபடுவோம். இஃதிகாப் அதற்கான சிறந்த சாதனமாக அமையும். இந்நாட்களில் வரும் லைலதுல் கத்ர் எமது முழு வாழ்வையும் விட மேலானது என்பதை எமது சிந்தைக்கெடுப்போம். அந்நாளில் நரக விடுதலையைப் பெற முயற்சிப்போம். வல்ல அல்லாஹ் எமமனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
அஷ்ஷேய்க் ஸீயெம்மெம் ஸுபைர் (நளீமி)
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.
--
with peace,
Shahjahan Mohamed Umer
md.shahjahan2001@gmail.com
+91 81972 81300
Banglore
"Help People"
No comments:
Post a Comment