Monday, July 23, 2012

விண்ணில் உலவும் உளவுக் `கண்கள்’!



இது தொழில்நுட்ப யுகம். தொழில்நுட்ப வளர்ச்சியானது நமது வாழ்க்கையை வசதியானதாகவும், எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றிவிட்டதாக நினைக்கிறோம்.
இது சரிதானா? அமெரிக்காவின் இரு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், விண்ணிலிருந்து நம்மை `உளவு பார்க்க’ப் போகின்றன. இவை தாங்கள் உருவாக் கும் `பறவைப் பார்வை மேப்’களுக் காக சக்திவாய்ந்த காமிராக்களைக் கொண்டு விண்ணிலிருந்து படம் பிடிக்கப் போகின்றன. ராணுவத்தில் பயன்படுத்தக்கூடிய இந்த காமிராக்கள், பூமியில் உள்ள வெறும் நான்கு அங்குலம் அளவுள்ள பொருளைக் கூட வானில் இருந்தே படம்பிடிக்கக் கூடியவை.
கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள், அதிநவீன `மேப்பிங்’ விமானங்களைப் பயன்படுத்தி இவ்வாறு படம்பிடிக்கத் திட்டமிட்டிருக்கின்றன. சாதாரண வெளிச்சத்திலேயே படம் பிடிக்கக்கூடிய இந்த காமிராக்கள், உங்கள் படுக்கையறை ஜன்னல் வழியாகக் கூட ஊடுருவக்கூடியவை. எனவே தனிமனிதர்களின் தனிமைக்கு இவை பெரும் ஆபத்து என்று எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.
கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைக்கப் பயன்பட்ட அதே மாதிரியானவை. இந்தத் தொழில்நுட்பம் மூலம் சுமார் ஆயிரத்து 600 அடி உயரத்தில் இருந்தே படம் பிடிக்கலாம் என்பதால், தான் கண்காணிக்கப்படுகிறோம் என்பதே பூமியில் இருக்கும் ஒரு மனிதருக்குத் தெரியாது.
இந்த காமிராக்களை விமானங்கள், ஹெலிகாப்டர்கள்… ஏன், ஆளில்லாத விமானங்களில் கூட பொருத்தலாம்.
பெருநகரங்கள் மீது சுற்றி இவ்வாறு படம் எடுப்பதற்காக தாங்கள் விமானங்களை அனுப்பியிருப்பதாக கூகுள் நிறுவனம் கூறியிருக்கிறது. அதேநேரம் ஆப்பிள் நிறுவனம், வேறொரு நிறுவனத்தை அமர்த்தி, லண்டன் உள்ளிட்ட நகரங்களை சோதனை ரீதியாகப் படம் பிடித்திருக்கிறது.
இவ்வாறு படம் பிடித்து தாங்கள் 3டி மேப்களை வெளியிட்டாலும், அதில் தனிநபர் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இருக்கும் என்று இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. பொறுத்திருந்து பார்க்கலாம்.
நன்றி:செந்தில்வயல்.wordpress
Engr.Sulthan

No comments: