அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-2)
நூலாசிரியர் கூறுகின்றார்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
அல்குர்ஆனில் ஸூரதுல் பராஆ தவிர்ந்த ஏனைய அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிஸ்மில் வந்திருப்பதையும் நபியவர்கள் பிஸ்மிலை முற்படுத்தி தனது மடல்களை எழுதுவதையும் கருத்தில் கொண்டும் இந்நூலாசிரியர் தனது நூலையும் இவ்வாசகத்தைக் கொண்டே ஆரம்பித்துள்ளார் எனக் கருதமுடியும்.
இவ்வார்த்தையில் இடம்பெற்றிருக்கக்கூடிய ‘ب’ வானது ‘உதவிதேடல்’ என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாசகத்தின் பொருளானது ‘ அல்லாஹ்வின் துணையுடன் எனது இந்தக் காரியத்தைத் துவங்குகின்றேன்’ என்று அமையும்.
மேலும், பிஸ்மிலில் இடம்பெற்றிருக்கும் ‘الله’ என்ற வார்த்தையானது பரிசுத்தமான, ஒருவனான எமது இறைவனைக் குறிக்கின்றது. இவ்வார்த்தை ‘أله’ என்ற வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இவ்வார்த்தைக்கு ‘வணங்கப்பட்டான்’ என்று பொருள் கொள்ளப்படும். இதனடிப்படையில் ‘اله’ என்ற சொல்லின் பொருள் ‘வணங்கப்படுபவன்’ என்றாகும். எனவே, அல்லாஹ் வணங்கப்படுபவனாக உள்ளான்.
‘الرحيم’ இ ‘الرحمن’ என்பன அல்லாஹ்வின் திருநாமங்களில் உள்ளனவாகும். இவ்விருசொற்களும், ‘அவனது அந்தஸ்துக்குத்தக்கவிதத்தில் அவன் விசாலமான கிருபையுள்ளவனாக இருக்கின்றான்,’ என்ற கருத்தை உணர்த்துகின்றது. ஆயினும், இவ்விருவார்த்தைகளும் ஒரே கருத்தைக் கொண்டது போன்று விளங்கினாலும் இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. ‘الرحمن’ என்பது, ‘அனைத்துப்படைப்பினங்கள் மீதும் கிருபையுள்ளவன்’ என்றும் ‘الرحيم’ என்பது, ‘முஃமீன்களுடன் மாத்திரம் கிருபையுள்ளவன்’ என்றும் வேறுபட்ட இரு விளக்கங்களைக் கொடுக்கின்றன. அதிலும் ‘الرحيم’ என்ற வார்த்தை முஃமின்களுடனான தனியான அன்பைப் பிரதிபளிக்கின்றது. இது குறித்து அல்லாஹூத்தஆலா கூறுகையில்:
‘மேலும், அல்லாஹ் விசுவாசி(களாகிய உங்)கள் மீது மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான்.’ (அஹ்ஜாப்: 43)
இமாமவர்கள் தனது நூலின் துவக்கத்தை அல்லாஹ்வைத் துதி செய்து, இரு சாட்சிகளையும் கூறி, நபியவர்கள் மீது ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கி அமைத்துள்ளார்கள். அதன் தமிழ் வடிவம் பின்வருமாறு:
எல்லாப் புகழும் அல்லாஹூத்தஆலாவுக்கே! அவன் எத்தகையவனென்றால் தன்னுடைய தூதரை நேர்வழியைக்கொண்டும், சத்திய மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான், சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (தன் தூதரை அனுப்பி வைத்தான்); இன்னும், (இதற்கு) சாட்சியாக இருக்க அல்லாஹ்; போதுமானவன். –அல்பத்ஹ்:28 – நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள் இல்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு எவ்வித இணையுமில்லை என்பதை உறுதிப்படுத்தியவனாகவும் ஒருமைப்படுத்தியவனாகவும் நான் சாட்சி கூறுகின்றேன். மேலும், நிச்சயமாக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவனுடைய அடியானும் திருத்தூதருமாவார் என்றும் சாட்சி சொல்கின்றேன். அல்லாஹ் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மென்மேலும் ஸலாத்தையும் ஸலாமையும் சொல்வானாக.
‘ஹிதாயத்’ என்ற வார்த்தை இரு கருத்துக்களில் பயன்படுத்தப்படும்:
1. ‘அத்தலாலா வல்பயான்’
2. ‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’
‘அத்தலாலா வல்பயான்’ என்பது, நேர்வழியை தெளிவுபடுத்தும் பணியாகும். இப்பணியை நபியவர்கள் மேற்கொள்வார்கள். இதனை அல்லாஹூத்தஆலா பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தில் பிரஸ்தாபிக்கின்றான்.
(நபியே!) நிச்சயமாக நீர் (மனிதர்களுக்கு) நேரான வழியின் பால் வழிகாட்டுவீர். (அஷ்ஷூரா:52)
‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’ என்பது, நேர்வழியை வழங்கும் பணியாகும். இப்பணியை அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியாது. இது குறித்து அல்லாஹூத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.
(நபியே!) நிச்சயமாக நீர் விரும்பியோரை நேர் வழியில் செலுத்திவிடமாட்டீர், எனினும் அல்லாஹ் தான் நாடியோரையே நேர் வழியில் செலுத்துகின்றான். மேலும், நேர்வழி பெறுகிறவர்களை அவனே மிக அறிந்தவன். (அல்கஸஸ்: 56)
(1) பொருள்: அடுத்து, இது மறுமை நாள்வரை வெற்றி மற்றும் உதவி பெறக்கூடிய கூட்டத்தின் கொள்கையாகும்.
(2) விளக்கம்:
(أما بعد) இவ்வாசகமானது ஒரு விடயத்திலிருந்து மற்றொரு விடயத்திற்கு நகரும் போது உபயோகிக்கப்படும்;. நபியவர்களின் வழிமுறை என்ற அடிப்படையில் இவ்வாசகத்தை அழைப்புப் பணியில் ஈடுபடக்கூடிய அனைவரும் உபயோகிப்பது கடமையாகும்.
(فهذا) இவ்வாசகத்தின் மூலம், இந்நூலில் இடம்பெற்றிருக்கக்கூடிய அனைத்து அகீதா சார்ந்த அம்சங்களும் நாடப்படுகின்றன.
(اعتقاد) இச்சொல் اعتقد என்ற மூலச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். اعتقد என்பது ஒரு விடயத்தை கொள்கையாக – அகீதா – எடுத்துக் கொள்வதாகும். எனவே, அகீதா என்பது, ‘ஒருவர் ஒரு விடயத்தை மனதால் ஏற்றுக் கொள்ளல்’ என்ற மையக்கருத்தை உணர்த்துகின்றது. இவ்வார்த்தையின் மூலச் சொல் கயிற்றால் ஒரு பொருளை பிணைத்துக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. பின்பு இதே வாசகம் ஒரு விடயத்தை உள்ளத்தால் உறுதியாக நம்புவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
(الفرقة) கூட்டம், அமைப்பு என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(الناجية) இப்பண்பானது இன்பங்கள் பல பெற்று இன்மையிலும் மறுமையிலும் அழிவு, மற்றும் தீங்குகளை விட்டும் ஈடேற்றம் பெற்ற ஒரு கூட்டத்தைக் குறிக்கின்றது. மேலும், இப்பண்பானது புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள ஒரு ஹதீஸில் இருந்து பெறப்பட்டதாகும். அந்த செய்தியின் தமிழ் வடிவமானது, ‘என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் உதவி பெறும் நிலையில் உண்மையில் நிலைத்திருப்பார்கள். அல்லாஹூத்தஆலாவின் (மறுமை தொடர்பான) கட்டளை அவர்களுக்கு மத்தியில் வரும் வரை உதவி புரியாது விட்டுவிட்டவர்களினால் எவ்விதத் தீங்கும் இழைக்க முடியாது.
(المنصورة) அதாவது, இக்கூட்டத்தினருக்கு மாறு செய்பவர்களைவிட்டும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு கூட்டமாக இருக்கும் என்ற கருத்தைக் கொடுக்கின்றது. இத்தகைய பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்ட கூட்டம் எது? என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பலவாறான கருத்துக்கள் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் பின்வரும் கூற்றுக்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.
- அக்கூட்டமானது அஹ்லுல் ஹதீஸினரைக் குறிக்கின்றது : இக்கருத்தை அறிஞர்களான யஸீத் இப்னு ஹாரூன், அஹ்மத் இப்னு ஹன்பல், இப்னுல் முபாரக், அலீ இப்னு மதீனி, அஹ்மத் இப்னு ஸினான், புகாரி (ரஹ்) போன்றோர் கூறுகின்றனர்.
- அக்கூட்டமானது அரேபியர்களைக் குறிக்கின்றது : இக்கருத்தை இப்னு மதீனி (ரஹ்) அவர்கள் பிறிதோர் அறிவிப்பில் கூறியுள்ளார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.. .
No comments:
Post a Comment