மது விலக்கா....? மது விளக்கா?
Article written by: கே.எம்.சரீப்
அரசுகளுக்கோ அது அட்சய பாத்திரம். பயன்படுத்துவோருக்கோ அது பிச்சா பாத்திரம். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டு வருமானம் 15 ஆயிரம் கோடி. கடைகள் 6696. மேற்பார்வையாளர்கள் எண்ணிக்கை 8,200. விற்பனையாளர்கள் 16 ஆயிரம். உதவியாளர்கள் 6 ஆயிரம். இதை நம்பி வாழும் குடும்பங்கள் 1 லட்சம். நம்பிக் கெட்ட குடும்பங்களோ பல கோடி.
என்ன அந்தக் காலத்து குடும்பக் கட்டுப்பாடு ரேடியோ விளம்பரம் போல் இருக்கிறதா?
இதை நம்பி சிலர் அல்ல அரசே .... இல்லை இல்லை அரசின் இலவச திட்டங்களின் உயிரே உள்ளது. ரொம்ப பேரின் உயிரையும் வாங்குகிறது. அது மது. அதுவும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மது. அதாவது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சீமைச் சாராயம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கப்பல்களில் வந்த யவனர்களின் மதுக் குப்பிக்கு மயங்கி கிடந்த மன்னர்களின் கதையை சோழமண்டல கடற்கரை வரலாறு சொல்கிறது. பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என மதுவைக் காட்டி மயக்காத படையயடுப்பாளர்கள் எவரும் இல்லை.
பண்டைய ஆரிய இலக்கியங்களே சோமபானம் - சுராபானம் என சுவையோடு மதுவை தரம் பிரித்தன. ஆனால் அகநானூறு தொடங்கி திருக்குறள் வரை போதை தரும் கள்ளை தொடாதே என்று சொன்ன தமிழ் இலக்கியங்கள் அதிகம்.
ஆங்கிலேயன் இந்தியாவை அரசாண்ட காலங்களில் மேல்தட்டு மக்களின் உற்சாக பானமாக இருந்த சீமைச் சாராயத்தை 1937ல் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரிமியர் அதாவது முதலமைச்சர் ராஜாஜி காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கேற்ப தடை செய்தார். அதாவது மதுவிலக்கை கொண்டுவந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மதுக்கடை மறியலை காங்கிரஸ் நடத்தியது. சென்னை மாகாணத்தில் கள்ளுக்கடை மறியல். தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாவும் கள்ளுக்கடை மறியலில் முன் நின்றனர். தந்தை பெரியாரோ தனது தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை கள் இறக்க பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்லி வெட்டிச் சாய்த்தார். இதன் எதிரொலியாகவே இரட்டை ஆட்சி முறையில் ஆட்சிக்கு வந்த ராஜாஜி மது விலக்கை கொண்டுவந்தார். அதற்கும் முன்னர் இந்திய வரலாற்றில் தனது ஆட்சி பகுதி முழுவதும் மதுவை தடைசெய்த ஒரே மன்னன் மாவீரன் திப்புசுல்தான் மட்டுமே.
இலைமறை காய்மறையாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைந்து வாழ்ந்த கள்ளச் சாராயம் 1974ல் அன்றைய முதல்வர் கலைஞர் புண்ணியத்தால் நல்ல சாராயமாக மாறியது. அரசே மக்கள் நலன் கருதி சாராயக் கடைகளை திறந்து ஏலம் விட்டது. அதுவே பின்னர் பரிணாம வளர்ச்சி பெற்று 1983ல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் டாஸ்மாக் என்ற அரசின் விற்பனை மையமாக அது மாறிப் போனது. பின்னர் மலிவு விலைமது வந்தது.
2003ல் அ(இ)ன்றைய முதல்வர் ‘ஜெ’ மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானம் தனியாருக்கு போய்விடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் இனிமேல் மதுவிற்பனையை அரசே முன்நின்று நடத்தும் என அரசாணை பிறப்பித்தார். அதுமுதல் கல்விக்கூடங்களை நடத்தி வந்த அரசு மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்தது. மதுக்கடைகளை நடத்திவந்த தனியார் கல்விக்கூடங்களை நடத்த ஆரம்பித்தனர்.
பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் இவற்றின் அருகாமையில் எல்லாம் அரசு மதுக்கைடகள் தாராளமாக திறக்கப்பட்டன. எந்த சட்டமும் அரசை கட்டுப்படுத்தவில்லை. எந்த நியாயமும் இங்கு செல்லுபடியாகவில்லை.
குடித்தால் சமூக மரியாதை இல்லை என்ற காலம் போய் குடித்தால்தான் சமூகத்தில் மரியாதை என்றாகிவிட்டது.
சமீபத்தில் வந்த பத்திரிக்கை செய்தி ஒன்றை பார்த்து யாரும் அதிர்ச்சியடைந்திருக்கமாட்டார்கள். திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் இருவர் குடிபோதையில் பள்ளிக்கூடம் வந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற செய்திதான் அது. நான் படித்த காலங்களில் கல்லூரி பேர்வெல் பார்ட்டிகளில் அதுவும் கல்லூரிக்கு வெளியே மது தலைகாட்டும். ஆனால் இன்று பள்ளிக்கூட பேர்வெல் பார்ட்டிகளில் கூட மது விளையாடுகிறது. நட்புக்கு தேநீர் வாங்கி கொடுத்தால் போதும் என்ற நிலை மாறி அது இன்று குவார்ட்டர் ஆக மாறியுள்ளது. அரசியல் கட்சிகளும் தாங்கள் நடத்தும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் கால கூத்துக்கள் எல்லாவற்றிலும் ஆறாக ஓடும் மதுவை கண்டுகொள்வதில்லை.
உலகிலேயே மது விற்பனை அதிகம் ஆகும் இடம் இந்தியா. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக விற்பனையாகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக குடிகாரர்களின் தேசமாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் மது உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.தமிழ்நாட்டிலோ அதிகமாகிக் கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் 15லிருந்து 20 வயது வரை 10 சதவிகிதம்பேரும் 30- 30 வயது வரை 35 சதவிகிதம் பேரும் 30-35 வயது வரை 37 சதவிகிதம் பேரும் 35- 50 வயது வரை 18 சதவிகிதம் பேரும் மொடாக் குடியர்களாக மாறியிள்ளனர் என சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் உள்ள மதுபான தொழிற்சாலைகளில் எவ்வித தரக்கட்டுப்பாடும் இல்லை. உலகில் 100 ஆண்டுகள் புளிக்க வைத்து தயாரிக்கப்படும் மதுபான வகைகள் இங்கு 24 மணி நேரத்தில் தயாராகின்றன. அத்தனையும் ரசாயனம்.
இரைப்பை நோய்கள், குடல் புற்று நோய்கள், மனநல பாதிப்புகள், சிறுநீரக செயலிழப்புகள், கணைய பாதிப்பு, பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, மரபணு பாதிப்பு, ஆண்மைக்குறைவு என தமிழ்நாட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் சரிபாதிப்பேர் குடியினாலேயே இந்நிலைக்கு ஆளாகின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.
இதைவிடக் கொடுமை மதுவின் தாக்கத்தால் பெண்களில் பலர் மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளையாட்டாய் நட்புக்காக குடிக்க ஆரம்பித்து பின்னர் வருமானம் முழுவதையும் குடி விழுங்க ஆரம்பிக்கிறது. விளைவு வருமானம் இல்லாமல் பேய் குடும்பத்தில் குழப்பம் மிகுந்து கடைசியில் அது விவாகரத்தில் போய் முடிகிறது. பல வீடுகளில் ஆண்கள் மட்டுமே குடிபோதைக்கு அடிமையானாலும் கடைசியில் அது பெண்கள் தலையிலேயே விடிகிறது.
பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்கள் மதுவோடு சங்கமிப்பதால் வேலையின் கால அளவும், தரமும் குறைந்து போய்விட்டது.
இந்தியாவில் மதுவிலக்கு மூன்று வகையாக அமுல்படுத்தப்படுகிறது. முதலாவது முழுமையாக உள்நாட்டு - அயல்நாட்டு அனைத்து மது வகைகளையும் தடை செய்வது.இன்று மகாத்மா காந்தி பிறந்த குஜராத்தில் மட்டும் பூரண மதுவிலக்கு பெயரளவில் அமுலில் உள்ளது. கள்ளச் சாராயமோ அங்கு ஆறாக ஓடுகிறது.
இரண்டாவதாக சாராயம் தடைசெய்யப்பட்டு வெளிநாட்டு மது மட்டும் விற்பது. இது மிசோராம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் அமுலில் உள்ளது.
மூன்றாவதாக வருடத்தில் ஒரு நாளில் மட்டும் அதாவது காந்தி ஜெயந்தி, புத்த ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை கொடுப்பது.(ஆனாலும் பிளாக்கில் விற்பனை உண்டு) இப்படி கேலிக்கூத்தான மதுவிலக்குகள் இங்கே அமுல்படுத்தப்படுகின்றன.
ஆந்திர மாநிலத்தில் வேளான் அமைச்சர் டி.கி.வெங்கடேஷ் மது குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்கும் கணவரை பொது இடத்திற்கு அழைத்து வந்து உதைக்கும் பெண்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு என அறிவித்திருக்கிறார். நல்லவேளை தமிழ்நாட்டில் அப்படியாரும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் மக்கள் தொகையில் பாதிப்பேர் அடிவாங்கியிருப்பார்கள்.
இங்கேதான் அரசே மதுபாட்டில்களிலேயே மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு. குடி குடியை கெடுக்கும் என்ற அதி அற்புத வாசகங்களை பொறித்து விட்டதே. அதுவே போதாதா?
இங்கே மதுவிலக்கு காவல்துறை என்று ஒன்று உள்ளது. அதற்கு காவலராக பணியாற்ற கடும் போட்டி. மதுவை ஒழிக்க அல்ல- வருமானத்திற்கு. காவல்துறை பிரிவுகளிலேயே வருமானம் கொழிக்கும் பிரிவாக அது விளங்குவதால்.
இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை, வருவாய்துறை என அரசுத் துறைகளில் பெரும்பான்மையானவற்றில் பெரும்பான்மையினர் குடிக்கு அடிமையாகியுள்ளனர். அரசாங்கம் நடக்காமல் தள்ளாடுவது இதனால்தான். தமிழ்நாட்டில் மக்களுக்கான மருத்துவம் -பாதுகாக்கப்பட்ட குடிநீர் -தரமான சாலைவசதி -தடையில்லா மின்சார வசதி - இலவச கல்வி என அடிப்படை வசதிகள் எதைப்பற்றியும் கவலைப்படாத அரசு தரமான மதுவகை வேண்டும் என்று மட்டும் கவலைப்படுகிறது. மேட்டுக்குடி மக்கள் சாதாரண மதுவகைகளை பயன்படுத்தி உடல் நலம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அக்கறையுடன் அரசு புதிதாக எலைட் ஷாப் எனப்படும் உயர்தர மதுபானக் கடைகளை திறந்துள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் இனி புதிதாக எந்த ஒரு மதுக்கடைகளையும் திறப்பதில்லை என 2008ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. தி.மு.க. ஆட்சி காலத்தில் இது வெளியிடப்பட்டதால் அதற்கு எதிராக தற்போதைய தமிழக அரசு அதை மாற்ற முடிவு செய்து புதிய கடைகளை திறந்துள்ளத. நாட்டு மக்களின் சுகாதாரத்தை காப்பாற்ற வேண்டிய அரசு மதுக்கடைகளை திறப்பதன் மூலம் அதை நாசப்படுத்துகிறது.
குடிப்பழக்கத்தின் காரணமாக வழிப்பறி, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, சாலை விபத்துக்கள் என குற்றச் செயல்கள்அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசிற்கு அதைப்பற்றி எல்லாம் என்ன கவலை?
அரசின் ஆண்டு வருமானத்தில் (59கோடி) நான்கில் ஒரு பங்கு (15 கோடி) மதுவின் மூலம் கிடைக்கும் போது மதுவை விலக்காமல் ஒளி விளக்காக அரசு கருதுகிறது. இரண்டு திராவிட இயக்கங்களும் எதிரெதிர் துருவமாக அரசியலில் இருந்தாலும் மது விசயத்தில் ஒரு கொடியில் பூத்த இருமலர்களாகவே இருக்கின்றன.
உலகில் பெரும்பான்மை மதங்களும் - மார்க்கங்களும் மதுவிற்கு எதிராக இருக்கின்றன. இஸ்லாம் மதுவை விலக்கப்பட்ட ஒன்றாகவே அறிவிக்கிறது. பெருமானார் (ஸல்) ஆட்சியாராக வுடன் செய்த முதல் வேலை மதுபானங்களை தடை செய்ததுதான்.
இந்து மதமோ 5 மிகப் பெரிய தீமைகளில் ஒன்றாக மதுவை குறிப்பிடுகிறது.
திருக்குறள் கள்ளுண்ணாமைக்காக ஒரு அதிகாரத்தையே கொடுத்திருக்கிறது.
தீமைகளின் தாயகம் மது என்றார் காந்தி.
இங்கோ மக்களுக்கு சுகாதாரத்தை கொடுக்க வேண்டிய அரசு மதுவை விற்றுக் கொண்டிருக்கிறது.
படிக்க கற்றுக் கொடுக்க வேண்டிய அரசு- குடிக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
சீனாவில் அபின் சாப்பிட கற்றுக் கொண்ட மக்கள் அதற்காக போரே பின்னர் நடத்தினார்கள் என்று வரலாறு. அதே போல் எதிர்காலத்தில் அறிவு மழுங்கடிக்கப்பட்ட மக்களாக தமிழ்மக்கள் மாறி மதுவுக்காக போர் நடத்திக் கொள்ளட்டும் என அரசு விரும்புகிறதோ என்னவோ?
தள்ளாடும் குடிமகன்கள் - அவர்களை தாங்கி பிடிக்கும் அரசு.
வெட்கங்கெட்ட இந்த தேசத்தில் வாழ்வது விபரீதம் என அறிவார்ந்த மக்கள் முடிவு செய்யுமுன் விழித்துக் கொள்ளுமா அரசு?
Thanks for reading. If you like this article please forward to others. Thanks
-Basheer Ahamed
No comments:
Post a Comment