Wednesday, July 25, 2012

ரமலான் பதிவுகள்:5 (மீள் பதிவு)



குர்ஆனில் விஞ்ஞானம்

விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.

ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.

கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி

மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்-) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்- பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம் உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்- பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்- (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்- இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்- அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. அல்குர்ஆன் 22:5

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்- பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்- பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்- பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்- பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். அல்குர்ஆன் 23:14

இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது 'பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் இரண்டு மூன்று மாதங்கள் அவற்றுக்கான வடிவத்தை பெருவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.

இதைத் தான் 'பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது- அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகிறன்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்னபிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.

இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உறுமாகிறது.

அதாவது அறைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அதே வார்த்தைகளைச் சுற்றி வளைக்காமல் நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்- ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது- மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர்ஆன் 25:53

இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்- அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா- ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது- மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்- மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது- அதை அவை மீறமாட்டா. அல்குர்ஆன் 55:19-20.

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியருப்பதாகக் கூறுகிறது.

இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி தெரியும்?.

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

அனைத்திலும் ஜோடி

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்- இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்- அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3

'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்- இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்- மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்- இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்' (என்று இறைவன் கூறுகிறான்). அல்குர்ஆன் 20:53

பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். அல்குர்ஆன் 36:36

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். அல்குர்ஆன் 51:49

திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்.

தூவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.

அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்த சொல் இல்லை, இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பெருவெடிப்பு கொள்கை

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்து என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.

சூரியனும் கோள்களும்

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்- நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள் பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான் இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான் (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2

'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான்- இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்' என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன- அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29

அவனே இரவைப் பகலில் புகு�

No comments: