Sunday, April 15, 2012

அதிரை-நிருபர்-குழு | Tuesday, April 03, 2012 | MSM , ஆதங்கம் , இந்தியா , இராணுவம் ,கடற்படை , பாதுகாப்பு
நமது அண்டை / பண்டைய நாடான இலங்கை நமக்கு நட்புறவுள்ள நாடாக இருந்த போதிலும் அல்லது அண்மையில் ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை உள்நாட்டுப்போர் காலத்தில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இலங்கைக்கு எதிராக வாக்களித்து அதன் மூலம் இரு நாடுகளுக்கான நட்புறவு வலுவிழந்தது போல் காணப்பட்டாலும் நம் இந்தியா, நாட்டின் தீபகற்ப தென்கோடியான தமிழக கடல் எல்லையில் தினசரி ரோந்து செல்லும் வகையில் நவீன ஆயுதங்கள் தாங்கிய ஒரு அதிவேக போர்க்கப்பலை நிரந்தரமாக நிறுத்தி வைக்க கடமைப்பட்டுள்ளது.

இது நம் நாட்டின் முக்கிய எல்லையான தென்கோடியை அந்நிய நாட்டின் அத்துமீறல்கள் அல்லது அந்நிய சக்திகள் எதிர்பாராமல் எப்பொழுதேனும் நம் நாட்டின் மீது படை எடுத்து வருதல் போன்ற அச்சங்களிலிருந்து நம் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவும், காலங்காலமாக கடல்சார் தொழில் செய்து வரும் மீனவ சமுதாயத்தையும், மீன்பிடி தொழிலையும் பாதுகாத்து அவர்களின் தொழில் எவ்வித அச்சமின்றியும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்களின்றியும் அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் தடைபடாமால் தொடரவும், மீன் பிடி தொழில் மேம்படவும் தக்க நடவடிக்கைகளை கட்சிகள் தாண்டி நாட்டின் பாதுகாப்பிற்காக எடுக்க வேண்டியுள்ளது.

எதோ மும்பைக்கு அருகில் உள்ள கடல் எல்லை மற்றும் கஷ்மீர் எல்லை தான் நம் நாட்டிற்கு முக்கியமான எல்லைகள் என்று அதை மட்டும் கவனித்துக்கொண்டு இருந்து விடாமல் நாட்டின் தென்கோடியில் கச்சத்தீவில் இலங்கை உதவியுடன் தன் ராணுவ தளத்தை அமைத்து இந்தியாவிற்கு ஒரு அச்சமான சூழ்நிலையை நாலாப்புறமும் ஏற்படுத்தி அதற்கு எதிரான மும்முனை தாக்குதலுக்கு திட்டமிட்டு தயாராகி வரும் சீனாவின் அச்சத்திலிருந்து நம் நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அக்கறையும் அரசுக்கு இருந்தாக வேண்டும்.

எல்லை தாண்டி மீன் பிடித்தான் என்பதற்காக மீனவர்கள் மீது மனிதாபிமானமற்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி அராஜகம் புரிவது அவர்களுக்கும் அதை கண்டும் காணாதது போல் இருக்கும் நம் நாட்டின் அரசுக்கும் நல்லதல்ல. பிறகு இந்த நாட்டில் பிறந்தோம் என்பதற்கு எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் போய் விடும்.

பிறந்த மண்ணில் வணிகம் செய்யவோ அல்லது பணி செய்யவோ யாருக்குத்தான் ஆசை இல்லை? அதற்கு அரசும், சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக அமைந்து உதவ வேண்டும். சாதி, மத, இன துவேசங்கள் நமக்கு முன்னே நம் தொழிற்கூடத்திற்குள் ரிப்பன் வெட்டி குடியேறி ஆணவத்துடன் கால் மேல் கால்போட்டுக்கொண்டு இருக்கையில் அமர்ந்து கொள்கின்றன.

சிறிய, சிறிய நாடுகளெல்லாம் தன் நாட்டுப்பிரஜைகளை உலகில் எங்கேனும் அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பொழுது அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அங்கு ஓடோடிச்சென்று ஆபத்தில் சிக்குண்டவர்களை மீட்க எல்லாவித முயற்சிகளையும், முனைப்புகளையும் காட்டி அதற்காக இருநாட்டு ராஜ்ய உறவுகளே சீர்குலைந்து முறிந்து போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு தயாராகி விடும் சூழ்நிலையில் நாம் மட்டும் நம் மக்களின் உயிரை ஒரு பொருட்டாகவோ அல்லது பொட்டுக்கடலைக்கு சமமாகவோ கூட எண்ணுவதில்லையே ஏன்? (அண்மையில் நம் நாட்டு அப்பாவி மீனவர்களை குருவி போல் சுட்டுக்கொன்று பின் கேரள அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இரு இத்தாலிய கப்பல் சிப்பந்திகளை மீட்க இத்தாலி அரசு செய்து வரும் முயற்சிகளே நமக்கு ஒரு நல்ல உதாரணம்)


இதில் தன் பிறந்த தேதி பிரச்சினையை கிழப்பிய மத்திய அரசை பழிவாங்க நம் ராணுவ தலைமை தளபதி கே.பி. சிங்கின் அண்மைக்கால செயல்பாடுகளும், அவர் பிரதமருக்கு எழுதிய ரகசிய கடிதம் ஊடகத்தில் வெளியானதும், அதற்கு சப்பைக்கட்டும் முயற்சிகளும் நம் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சத்தையும், கேள்விக்குறியை ஏற்படுத்தி என்றோ சொல்லப்பட்ட "வேலியே பயிரை மேய்வது போல்" என்ற பழமொழி இவர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.

அப்பாவி கோழிக்குஞ்சுகளை அது ஓடியாடி விளையாடி வரும் வழித்தடத்தில் உள்ள ஆபத்துக்களிலிருந்து மட்டும் தாய் கோழி அவற்றை பாதுகாத்துக்கொள்ளாமல் தலைக்கு மேலே வானில் தொலை தூரத்தில் வட்டமிட்டு நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் பருந்துகளிடமிருந்தும் தன் குஞ்சுகளை காத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளது. நம் நாட்டின் நிலைமையும் கிட்டத்தட்ட இது போல் தான் உள்ளது. உள்நாட்டு தீவிரவாதம், பிரிவினை வாதம், நக்ஸலைட் என்று சொல்லி அதில் அக்கறை செலுத்துவதில் தவறில்லை தான். அதே சமயம் நம்மை தொலை தூரத்திலிருந்து பல வழிகளில் குழிதோண்டி புதைக்க துடித்துக்கொண்டிருக்கும் அந்நிய சக்திகளையும் இனம் கண்டு அதன் சதித்திட்டங்களை தன் வலிமையையும், திறமையையும் கொண்டு பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.

உலகில் சிறிய நாடுகளெல்லாம் பொருளாதார முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் எங்கோ சென்று கொண்டிருக்கும் பொழுது எல்லா வளங்களையும் பெற்று உலகின் பெரும் ஜனநாயக நாடாக திகழும் நம் நாடு மட்டும் எல்லாவற்றிற்கும் அல்லோலப்பட்டு அவதிப்படுவது ஏன்? (அண்மைச்செய்தி : அமெரிக்கா உதவியுடன் வங்காளதேசம் சொந்தமாக செயற்கை கோள் தயாரித்து வருகிறது.)

நம் உடல் உழைப்பில் வாங்கும் சொத்து பத்துகளுக்கும், ஆபரண அணிகலன்களுக்கும் அரசு வரி விதிக்கிறதோ? இல்லையோ? கொள்ளையர்கள் அவற்றிற்கு 100% வரி விதித்து வீட்டின் பூட்டை உடைத்து வாசலில் சரக்கு லாரியை நிறுத்தி வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் கொள்ளையடித்து அள்ளிச்செல்லும் காலமாகி விட்டது இது. அதில் வீடும் கழட்டி மாட்டும் வசதியை பெற்றிருந்தால் அதையும் கழட்டிக்கொண்டு கையோடு அள்ளிச்சென்று விடுவர் போலும். பணத்தை வங்கியில் போட்டால் அங்கும் கொள்ளை, நிலம் வாங்கிப்போட்டால் அங்கு நிலஅபகரிப்பு/ஆக்கிரமிப்பு, வீட்டில் வைத்தால் கொலை செய்து கொள்ளை, சட்டைப்பாக்கெட்டில் வைத்திருந்தால் வழிப்பறி கொள்ளை......பிறகு எது தான் திருட முடியாத பாதுகாப்பான இடம் என்று நாளடைவில் கொள்ளையர்களிடம் தான் ஆலோசனை கேட்க வேண்டும் போல் தெரிகிறது.

விஐபியா நீங்கள்? தினமும் காலையில் வாக்கிங் செல்பவரா நீங்கள்? அப்படியானால் கடத்தப்பட்டு போட்டு தள்ளப்பட வேண்டியவர் தான் நீங்கள் என்றாகி விட்டது நம் நாட்டின் தனி நபர் பாதுகாப்பு. (இப்பொழுதெல்லாம் விஐபி என்றால் நல்ல விசயத்திலா? அல்லது தீய விசயத்திலா? என மக்கள் தெரியாமல் குழம்பி உள்ளனர்)

அதனால் தான் சொந்த நாட்டில் செத்து சுண்ணாம்பாய் ஆகி கர்ஜிக்க வலுவில்லாத மெலிந்த சிங்கங்களாக வாழ்வதை விட அயல்தேசங்களில் பொதி சுமக்கும் கழுதையாக கொஞ்ச காலம் சந்தோசமாக வாழ்ந்து விட்டு போய் விடலாம் என துணிந்து விமானம் ஏறி வந்து விடுகிறார்கள் போலும் நம் மக்கள்.

-மு.செ.மு. நெய்னா முஹம்மது
--
http://adirainirubar.blogspot.in/2012/04/blog-post_03.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+adirainirubar1+(%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D)

ALAVUDEEN

No comments: