Wednesday, April 25, 2012

இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரத்தில் பௌத்தக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றை அகற்ற வேண்டும் என கோசமிட்டார்கள்.

முன்னதாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிளவில் பெற்றோல் குண்டைப் போன்ற ஒன்று அந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது. அதில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை


இருந்தாலும் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்துவதற்கு பொலிஸ் தரப்பிலிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தாக பள்ளிவாசல் நிர்வாகி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

இதன்படி தாங்களும் தொழுகையில் ஈடுபட தயாராகியிருந்த போது, சுமார் 50 பிக்குகள் அடங்கலாக 500க்கும் அதிகமானவர்கள் அங்கு வந்து கலகத்தில் ஈடுபட்டதாகவும், பள்ளிவாசலை இடிக்க வேண்டுமென்று கோசம் போட்டு, கற்களை வீசியெறிந்ததாகவும் பள்ளிவாசல் தரப்பினர் கூறுகின்றனர்.

அந்த இடத்துக்கு அருகில் ஊடகவியலாளர்கள் எவரும் சென்று படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை என்று உள்ளூர் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'இது எங்கள் சிங்கள நாடு, எங்கள் நாடு பௌத்த நாடு, அதனை காப்பாற்றுங்கள்' என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமி்ட்டிருக்கிறார்கள்.

'பௌத்த பூமியை பாதுகாப்பதற்காக உயிரைக்கொடுக்கவும் தயார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.


வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து

தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற பட்சத்தில் தம்மை அங்கிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தியதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் மற்ற பகுதிகளிலிருந்து பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறினர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரான, கடும் போக்கு தேசியவாதக் கட்சியான ஹெல உறுமயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர், 'இது பௌத்த பூமி, இங்கிருந்து பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும்' என்று கூறினார்.

இதே பகுதியில் உள்ள இந்துக் கோவிலொன்றும் அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பு உள்ளது.

வரும் திங்களன்று இந்தப் பிரச்சனை பற்றி சம்பந்தப்பட்ட தரப்புக்கிடையில் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. அதிகாரபூர்வமாக முடிவு எதுவும் அப்போது எடுக்கப்படாவிட்டால், தாங்களே முன்னின்று பள்ளிவாசலை இடிக்கப்போவதாக பிக்குமார் கூறியுள்ளனர்.

இலங்கையில் மூன்றாவது பெரிய சமூகமாக மூஸ்லிம்கள் உள்ளனர். அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்த போது, அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பெரும்பாலான முஸ்லிம்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஆனால் அண்மைக்காலமாக, அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை சில கடும்போக்கு பெளத்தர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

தம்புள்ளையில் போராட்டத்தை முன்னின்று நடத்திய தம்புள்ளை -ரங்கிரி பௌத்த பீடத்தின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர், 1982 இல் குறித்த பகுதி வணக்கஸ்தல புண்ணிய பிரதேசம் என்று திட்டவரைபடத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இவ்வாறான புனித பிரதேசம் என்ற காரணத்தைக் காட்டியே அனுராதபுரத்திலும் சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் தர்காவொன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்றால் தகர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

http://ping.fm/43Jal


--
'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" ஸ_ரது ஆல இம்றான் 193,
Visit our Web
http://ping.fm/BSSdM

No comments: