Wednesday, April 25, 2012

புத்தக பாதுகாப்பு முறைகள்:
புத்தகங்களை அதிக வெப்பம், ஈரப்பதம், தூசி இல்லாத அறையில் அல்லது அலமாரியில் பாதுகாக்கவும்
ஈரப்பதம் மற்றும் செல்லரித்ததால் பாதிக்கப்பட்ட புத்தகங்களை பிற புத்தகங்களுக்கு அருகில் வைத்திட வேண்டாம், முடிந்தால் தனியே பாதுகாக்கவும்
புத்தகங்களை அட்டாளையில் அல்லது வீட்டின் கிடங்கில் (Store room) ஒருபோதும் வைத்திட வேண்டாம். அதிகபட்ச ஈரப்பதமும், பூச்சிகளும் உங்கள் புத்தகங்களை பதம் பார்த்திடும்!
புத்தகங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்ககூடாது, மாறாக அவைகளை நிற்பாட்டிய நிலையில் வைக்கவும்
புத்தகங்களை அடுக்கும் முறை:
ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் அளவை விட சற்றே பெரிதானதொரு "Mylar" பிளாஸ்டிக் உறையில் வைத்திட வேண்டும். புத்தகத்தை நுழைப்பதற்கு முதல் அதற்கு சாய்மானமாக, Mailaar உறை அளவிலான ஒரு அட்டையை வைத்திடவும் (கடின அட்டை கிடைக்கவில்லையெனில், இரண்டடுக்கு கார்ட்போர்ட் அட்டையை உபயோகித்திடலாம்). சாதாரண PVC பிளாஸ்டிக் உறையை பயன்படுத்துவது நல்லதல்ல!
இவ்வாறு பலப்படுத்தப்பட்ட புத்தகத்தை ஒன்றன் மீது ஒன்றாக சாய்வாக நிற்பாட்டி வைக்கலாம்!
முடிந்த வரை ஒரே அளவிலான புத்தகங்களாக பிரித்து அடுக்கவும்
பத்து அல்லது பதினைந்துக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக இவ்வாறு அடுக்கிட வேண்டாம்
மூடியுடன் கூடிய அட்டைப்பெட்டிகளில் மேற்கண்டவாறு சிறிது சிறிதாய் புத்தகங்களை பிரித்து வைக்கலாம். இவ்வாறு அட்டை பெட்டிகளில் மூடி வைப்பது பூச்சிகளையும், ஈரப்பததையும் கட்டுப்படுத்தும்
சில மாதங்களுக்கு ஒரு முறை பெட்டிகளை திறந்து புத்தகங்களை கண்காணியுங்கள்!
செய்தித்தாள் அல்லது மட்ட ரக தாள்கள் மூலம் புத்தகங்களுக்கு அட்டை போட வேண்டாம், இது புத்தக அட்டையை பழுப்பேற செய்யும்!
கிழித்த புத்தகங்களை பின் அடிப்பது, கிளிப் செய்வது, ரப்பர்பேண்ட் மூலம் கட்டுவது போன்ற முறைகளை தவிர்க்கவும் - இவைகள் துருப்பிடித்தோ அல்லது ரப்பர் ஒட்டியோ புத்தக அட்டை மற்றும் உள்பக்கங்களை பாழ் செய்திடும்
கிழிந்த பக்கங்களை சாதாரண பிளாஸ்டிக் பசைநாடா (Cellotape!) மூலம் ஒட்டக்கூடாது! முடிந்தால் உயர்தர நிறம், வழுவழுப்பில்லாத, மின்னாத நாடாக்களை பயன்படுத்தவும்! (உ.ம். Scotch Magic Tape)
மடங்கிய பக்கங்களை சீராக்குவதாய் நினைத்து புத்தகத்தின் மேல் அதிக எடை உடைய பொருட்களை பல மணி நேரம் வைப்பது தவறு
சுருண்ட பக்கங்களை நேராக்க இஸ்திரி பெட்டியை கட்டாயமாக உபயோகிக்க கூடாது! இது தாளை பழுப்பேற்றி விரைவில் பொடித்துப்போக செய்யும்!
அளவுக்கதிகமாக அந்துருண்டைகளை உபயோகிக்க வேண்டாம், புத்தகத்தில் உள்ள மீன் போன்ற புழுக்களை இது ஏதும் செய்வதில்லை (நான் அறிந்த வரையில்)! மாறாக நாப்தலின் உருண்டைகளின் அதீத வேதித்தன்மை தீங்கையே விளைவிக்கும்!
கரப்பான் பூச்சிகளும் மிக ஆபத்தானவை, அவற்றை கட்டுக்குள் வைத்திடுங்கள்! அதற்காக கொல்லி மருந்து தெளிப்பான்களை பயன்படுத்தி புத்தகங்களை குளிப்பாட்டிட வேண்டாம்!
உணவுப்பொருட்களை புத்தகங்களுக்கு அருகில் வைக்கவேண்டாம்
புத்தகங்களை கணக்கெடுப்பதாக நினைத்துக்கொண்டு அதன் மேல் வெளியீடு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத வேண்டாம்!
மாறாக ஒரு சிறிய காகிததில் தேவையான விவரங்களை எழுதி புத்தக மேற்பரப்பில் தெரியுமாறு வைத்துக்கொள்ளுங்கள்!
சில புத்தகங்களில் முன் மற்றும் பின்னட்டை மேல் ஒட்டி இருக்கும் பிளாஸ்டிக் மேலுறையை தனியே பிரிக்க வேண்டாம் (உ.ம். ஆரம்ப கால ராணி காமிக்ஸ்). அவ்வாறு பிரிக்கும் போது அந்த அட்டை பளபளவென்று புதிது போல மின்னி உங்களை மகிழ செய்யலாம், ஆனால் விரைவிலேயே தூசு மற்றும் அழுக்கு ஒட்டி அதிகமாக சேதமடைந்து விடும்!
படிக்கும் / கையாளும் முறை:
பழைய புத்தகங்களை படிக்க நினைத்தால் அதை இன்னொரு புத்தகத்தின் உள்ளே வைத்து, சமதளத்தில் கிடத்தி அதிகம் கை படாமல் படிக்கவும்
பக்கங்களை எச்சில் அல்லது பசை தொட்டு திருப்பக்கூடாது!
புத்தகங்களை (பக்கங்களை) மடிக்கவோ, வளைக்கவோ கூடாது!
புத்தகங்களின் அருமை அறியாதவர்களிடம், குறைந்த பட்சம் பார்க்க கூட கொடுக்க வேண்டாம்! அவர்களுக்கு நிச்சயமாக புத்தகத்தை எப்படி கையாளுவது என்று தெரிந்திருக்காது!
முடிந்த வரை உள்பக்கங்களை ஸ்கேன் செய்வதை தவிருங்கள்!

No comments: