Sunday, April 15, 2012

மலேஷியாவில் புதிய தீவரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10.4.12) அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இனி அங்கு யாரையும் வழக்கு பதிவு செய்யாமல் 28 நாட்களுக்கு மேல் தடுத்து வைத்திருக்க முடியாது. மலேஷிய மக்களுக்கு கூடுதலான சுதந்திரம் அளிக்க பிரதமர் நஜீப் ரஜாக் எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க அரசு கடுமையான பாதுகாப்பு சட்டங்களை பயன்படுத்துகிறது என்று நீண்டகாலமாகவே சிலர் குற்றஞ்சாட்டிவந்தனர். மலேஷியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்துக்கு பதிலாக இந்த புதிய சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது நடைமுறையில் உள்ள உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தீவிரவாத சந்தேக நபர்களை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் காலவரையின்றி காவல்துறையினரால் தடுத்து வைக்க முடியும். இனி 28 நாட்கள் மட்டுமே காவல் :- இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய சட்டமூலத்தின்படி, சந்தேக நபர் ஒருவரை அதிகபட்சமாக 28 நாட்கள் மட்டுமே அரசால் தடுத்து வைக்க முடியும். மேலும் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டில் யாரையும் இனி தடுத்து வைக்க முடியாது எனவும் புதிய சட்டமூலம் கூறுகிறது. மலேஷியாவில் 1960 ஆம் ஆண்டில் கம்யூனிஸ கிளர்ச்சி ஏற்பட்ட போது, பிரிட்டிஷார் கொண்டுவந்த சட்டத்தை முன்மாதிரியாக வைத்து உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தீவிரவாத்தை எதிர்த்து போராட அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. காலனித்துவ ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட, நடைமுறைக்கு ஒத்துவராத சட்டங்களை ஒழிக்க பிரதமர் நஜீப் ரஜாக் உறுதிபூண்டுள்ளார்.


http://ping.fm/RH2SN

No comments: