بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அஸ்ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹி வ பறகாத்துஹூ
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது மேலும் நமது உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹுவின் சாந்தியும் சமாதானாமும் உண்டாவதாக....
தொடர் -1 மரணத்திற்கு முன்னர் .....
“நன்மையை ஏவி தீமையை தடுக்கவும் “ (3:104) என்கிற இறை கட்டளையின் அடிப்படையில் எல்லாம் வல்ல அல்லாஹுவின் கிருபையால் அழைப்பு பணியினை முதன்மையாக கொண்டு அல்லாஹுவிடத்தில் மட்டுமே நன்மைகளை எதிர்பார்த்து நான் இதுவரை படித்த, கேட்ட , அறிந்த பல நன்மை, தீமையான இஸ்லாமிய விஷயங்களை என்னுடைய கருத்துக்களோடும், ஆதாரங்களோடும் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் இத்தொடரை ஆரம்பித்துள்ளேன் ...
இதனை எழுத உதவிய பல நண்பர்களுக்கும் , ஆதாரங்கள் மற்றும் நல்லபலகருத்துக்களை,செய்திகளை தந்துதவிய சகோதரர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியினை மிக்க அன்புடன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் அவர்கள் இந்த நல்ல காரியத்திற்கு உதவுவார்கள் என்றும் எதிர்பார்கிறேன் ...இன்ஷா அல்லாஹ் ,,, நம் எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமைய அல்லாஹ்வை வேண்டிக் கொள்கிறேன்
அன்பான சகோதரர்களே !... முஸ்லிம்களாக வாழ்ந்து வழிதவறிய எத்தனையோ கூட்டத்தார்களைப் பற்றி திருமறையின் வாயிலாகவும், ஹதீஸ்கள் மூலமாகவும் படித்திருக்கிறோம். நாம் அதிலிருந்து வழிதவறிவிடாமல் இருக்கவும், மேலும் முஸ்லிம்களாகவே மரணிப்பதற்கும் இறைவனிடம் பிரார்த்திக்க திருமறையின் வசனங்கள் நமக்கு வலியுறுத்துகிறது.
இன்றைய காலசூழ்நிலையில் நமது சமுதாய மக்களுக்கு இஸ்லாமிய அறிவுரைகளை, எச்சரிக்கைகளை மற்றும் சிந்தனைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் தெளிவான அடிப்படைகளில் தெரிவித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தக்வாவை (இறைஅச்சத்தை) அதிகரிக்க ஒரு முயற்ச்சியாகவும் , ஈமானை மென்மேலும் உறுதிப்படுத்தி கொள்ளவும் பல முக்கியமான செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரப்புல் ஆலமீன் நம்முடைய நல்லெண்ணங்களை இந்த தூய அழைப்பு பணி மூலம் நிறைவேற்றித்தர ...படிக்கிற நீங்களும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி முறையாக தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் ஆகும்! ஏனெனில் இது நம்முடைய மறுமை வெற்றிக்கான மார்க்கமாகும்! யார் இந்த இஸ்லாமைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லையோ அவர்களுக்கு அது பேரிழப்பாகும்! எனவே இந்த தொடரில் இஸ்லாம் பற்றிய சில அடிப்படைச் செய்திகளைப் பார்ப்போம்!
மனிதன் படைக்கப்பட்டதன் இலட்சியம்:
இஸ்லாமின் மிக முக்கிய அடிப்படை மனிதன் தன்னைப் படைத்த ரப்பைப் பற்றி அறிவதாகும். மனிதனை அல்லாஹ் படைத்ததன் நோக்கம் அவனை மட்டும் வணங்கி வழிபடுவதற்காகும். எப்படி இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இயற்கையாகவே அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்திருக்கின்றதோ அது போல மனிதனும் இந்த இயற்கை மார்க்கத்தின் அடிப்படையில் தனது ரப்பை அறிந்து கொண்டு அவனை வணங்கி வழிபடுதல் அவசியம்! இதில்தான் மனிதனின் நிரந்தரமான ஈடேற்றம் அமைந்திருக்கிறது. உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: ''ஜின்களையம் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை''( அல்குர்ஆன் 51:56 )
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: " உங்களில் மிகத் தூய்மையான செயல் உலகில் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான் அவன்தான் (அனைவரையும்) மிகைப்பவன் , மிக மன்னிப்புடையவன் ( அல்குர்ஆன் 67:2 ) எனவே அல்லாஹுவின் கட்டளைப்படி அல்லது விருப்பப்படி இந்த உலக வாழ்க்கை நமக்கு ஒரு சோதனை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அதற்கேற்றபடி நமது செயல்களை அமைத்துக் கொள்ளவேண்டும்.
முதல் மனிதனின் மார்க்கமும் இஸ்லாம் தான் : பூமியில் முதன் முதலாக படைக்கப்பட்ட ஆதமுக்கு(அலை) இறைவன் வழங்கியது இஸ்லாமிய மார்க்கத்தைத்தான். ஆதம் மற்றும் அவர் மனைவி ஹவ்வா (அலை) அவர்களிடமிருந்து பிறந்த நம் ஆதி கால முன்னோர்கள் அனைவரும் முஸ்லிம்களே ! (பார்க்க 2:213, 2:38 )
தொடர் 2 ல்.......இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்
வஸ்ஸலாம்
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் ............
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்
Visit My Blog : தக்கலை கவுஸ் முஹம்மத்
* குறைகள் என்னை சாரும், நிறைகள் ஏக இறைவனை சாரும் ........
* படைக்கப்பட்டவர்களை விட்டு, படைத்தவனை மட்டுமே நாம் வணங்குவோம் !
* அல்லாஹ்வும் ரசூல் (ஸல்) அவர்களும் கட்டி தந்த நேர்வழியை பின்பற்றுவோம் !
--
ALAVUDEEN
No comments:
Post a Comment