டிப்ஸ்:கோடையை விரட்ட...
கோடை காலத்தில் வியர்வை நாற்றம் வராமல் தவிர்க்க குளிக்கும் நீரில் சிறிது யூடிகோலோன் அல்லது பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம். வியர்வை நாற்றம் வருகிறதே என்று அளவுக்கு அதிகமாக பவுடர் உபயோகிப்பது நல்லதல்ல. கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு பவுடர் உபயோகிப்பதைக் குறைக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. கோடையில் அதிகம் வியர்ப்பதால் பவுடர் போடும் போது சரும துவாரங்களில் பவுடர் அடைத்துக் கொள்வதுடன் வியர்வை அழுக்குகள் சேர்வதால் முகப்பரு மற்றும் உஷ்ணக் கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகமாகிறது.
வெயில் நேரத்தில் செல்லும் போது கூடுமானவரை சூரிய ஒளி நேராக உடம்பைத் தாக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
கோடை காலத்தில் அணிய ஏற்றவை பருத்தி ஆடைகளே. பருத்தி ஆடைகள் வியர்வையை உறிஞ்சிக் கொள்வதோடு வெப்பம் உடலை அதிகம் தாக்காமல் பாதுகாக்கிறது.
கோடையில் உட்கொள்ளும் உணவு வகைகளில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். நாள் ஒன்றுக்கு பத்து டம்ளருக்கு குறையாமல் தண்ணீர் அருந்துவது நல்லது. நன்கு கனிந்த பழங்களாக வாங்கி வீட்டிலேயே பழச்சாறு தயாரித்து அருந்துவது நல்லது. இளநீர், நீர்மோர், தர்பூசணி, முலாம் பழம் போன்றவைகள் கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க ஏற்றவை.
மாலை நேரத்தில் சூடாக காபி, டீ அருந்துவதற்குப் பதிலாக பழச்சாறு அல்லது ப்ரூட் சாலட் செய்து சாப்பிடலாம். மதியம் உணவின் போது வாரத்திற்கு மூன்று முறையாவது வெள்ளரிக்காயை சாலட்டாகவோ கூட்டு தயாரித்தோ தயிர்ப்பச்சடி செய்தோ சாப்பிடலாம்.
பொதுவாக கோடையில் வெப்பத்தைத் தணிக்க வீட்டைச் சுற்றிலும் குளிர்ந்த தண்ணீர் தெளித்து வைக்கலாம். வீட்டிற்கு மேல் மொட்டை மாடியானால் தளத்தில் குளிர்ந்த தண்ணீர் தெளிப்பது கோடையின் கடுமையைச் சிறிது தணிக்கும்.
கோடையையும் குளுகுளுவென்று ஆக்க இதுபோல் நம்மால் முடிந்ததைச் செய்யலாமே!
சுகாதாரமாகவும், சுத்தமாகவும் உணவை உண்ணுவதைப் போல் அந்த உணவை தயாரிப்பதிலும், பாதுகாப்பதிலும் சுகாதாரத்தை கடைபிடிக்கவேண்டும். இதில் அதிக அக்கறை செலுத்தவேண்டியது, அந்த வீட்டின் குடும்பத்தலைவிதான். அவர் சின்னச் சின்ன விஷயங்களிலும் அக்கறை செலுத்தினால் அது குடும்பத்திற்கு பெரிய அளவில் ஆரோக்கியத்தை அளிக்கும்.
காய்கறிகளை எடுத்துக்கொண்டால், முதலில் அதை கழுவுவதில் கவனம் செலுத்தவேண்டும். பின்பு அவைகளை பிரிஜ்ஜில் வைத்தால் எந்த அளவு டெம்பரேச்சரில் வைக்கவேண்டும்? போன்றவைகளில் கூட கவனம் செலுத்தப்பட வேண்டும். மளிகை சாமான்களாக இருந்தாலும், காய்கறி, பழங்களாக இருந்தாலும் அவைகளை எந்த கடையில் இருந்து வாங்குகிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏன் என்றால் சுத்தமான, சுகாதாரமான கடைகளில் வாங்கும் பொருட்களே சுத்தமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
கீரை மற்றும் கிழங்கு வகைகளில் மண் இருக்கும். தக்காளி போன்றவைகளில் மண் இருக்காது. அதனால் இவைகளை சேர்த்து வைக்காமல் தனித்தனியாக வைக்க வேண்டும். வாங்கும் போதும் ஒன்றாக ஒரே கவரில் போட்டு வாங்கக்கூடாது. கீரை, மல்லி இலை போன்றவைகளை வாங்கும் போதே வேர் பகுதியை அப்புறப்படுத்தி விடவேண்டும். வாங்கும் போது அப்புறப்படுத்த முடியாவிட்டாலும், வாங்கியதும் அப்புறப் படுத்திவிட்டுத்தான் பிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
கேரட்டை பச்சையாக கடித்து சாப்பிடும் பழக்கம் பலரிடமும் உள்ளது. அப்படி சாப்பிடுபவர்கள் கேரட்டை அழுத்தி தேய்த்து கழுவினால் மட்டும் போதாது. அவைகளின் மேல் தோலை கத்தியால் சுரண்டி எடுத்து விட்டே சாப்பிடவேண்டும். அப்புறப் படுத்தப்படும் தோல் பகுதியில் ஓரளவு சத்துக்கள் வீண் ஆனாலும் அதில் இருக்கும் கிருமிநாசினி தன்மை நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் கிழங்கு வகைகளில் இருக்கும் மண்ணை நீக்குவதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
காய்கறிகளை நறுக்கி அதிக நேரம் வைத்து சமைத்து சாப்பிடுவதில் எந்த பலனும் இல்லை. காலை 10-மணிக்கு நறுக்கிவைக்கும் காய்கறியை மாலை நேரம் வரை வைத்திருந்து சாப்பிடுவது தவிர்க்கப்படவேண்டும். நறுக்காத காய்கறிகளை 10-15 நிமிடங்கள் வரை தண்ணீரில் முக்கி வைக்கவேண்டும். பின்பு அழுத்தி தேய்த்துவிட்டு அவைகளை பைப்பின் அடியில் பிடித்து மீண்டும் ஒரு முறை கழுவி பயன்படுத்துவது மிக அவசியம்.
காய்கறிகளை நறுக்குவதற்கென்றும், மீன், இறைச்சியை நறுக்குவதற்கும் தனித்தனி கட்டிங் போர்டுகளை வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் ஒரே போர்டில் வைத்து நறுக்குவது ஆரோக்கியமானதல்ல. இவைகளை சமைப்பதற்கும் தனித்தனி பாத்திரங்கள் அவசியம். கத்திகளும் தனித்தனியாக இருக்கவேண்டும். காய்கறி நறுக்கிய கத்தியை கேக் வெட்டக்கூட பயன்படுத்தக்கூடாது.
உணவுப் பொருட்களை வேக வைக்கும் போது கூட கவனிக்க வேண்டிய விஷயங்கள் உண்டு. தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், தீயை குறைத்துவிடவேண்டும். பெருமளவு தீயில் தொடர்ந்து உணவுப் பொருட்கள் வேகுவதும் நல்லதல்ல. பச்சைக் காய்கறிகளை வேகவைக்கும் நீரை வீணாக்காமல் அதை சாம்பார் அல்லது ரசத்தில் சேர்க்கவேண்டும். கீரை வகைகளை வேக வைக்க தண்ணீர் விடக்கூடாது. தண்ணீரை தெளிக்க மட்டுமே வேண்டும். நேந்திரன் பழத்தை வேகவைக்க தண்ணீரை பயன்படுத்தாமல், அதனை ஆவியில் தான் வேகவைக்க வேண்டும்.
No comments:
Post a Comment