Wednesday, April 25, 2012

அறிவோம் அரிச்சுவடி “உ”
உ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "உகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஊனா" என வழங்குவர்.
"உ" வின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் உ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
தமிழில் உள்ள சுட்டெழுத்துக்கள் மூன்றில் இதுவும் ஒன்று. இது சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப்பட்டவற்றைக் குறிக்கப் பயன்படுகின்றது[2]. எடுத்துக்காட்டாக உவன், உது, உங்கே போன்ற சேய்மைச் சுட்டுச் சொற்களில் உ முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் உ சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. உ புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும்[3]. உவ்விடம் (உ + இடம்) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
இனவெழுத்துக்கள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.
இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது உ, ஊ வுக்கு இன எழுத்தாக அமையும்.
பொருள் அடிப்படையிலும், வடிவ அடிப்படையிலும்கூட ஊ, உ வுக்கு இன எழுத்தாக அமையும்.[4].
சொல்லில் உகரம் வரும் இடங்கள்



'உ' எழுதும் முறை
தனி உ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் உ சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்[5]. இதிலிருந்து ஙு, ஞு, டு, ணு, ரு, லு, வு, ழு, ளு று, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களை எழுதுவோர் சிலர் டு, ரு, லு போன்ற எழுத்துக்களும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். டுவிட்டர், ருக்குமணி, லுக்மன் போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உகரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
"உ" வும் மெய்யெழுத்துக்களும்

உ உடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து உகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன[6]. உகர உயிர்மெய்களைக் குறிப்பிடுவதற்கு அகரமேறிய மெய்கல் மூன்று வகையாகத் திரிபு அடைகின்றன. சில எழுத்துக்களுக்குக் கீழ் நிலைக்குத்தான சிறு கோடு ஒன்று இடப்படுகிறது. பு, சு, பு, யு, வு என்னும் எழுத்துக்கள் இவ்வகையின. எழுத்தின் கீழ்ப்பகுதியைச் சுற்றி வளைவாகக் கோடு வரைவது இன்னொரு வகை. கு, டு, மு, ரு, ழு, ளு என்பன இவ்விரண்டாம் வகையைச் சேர்ந்தவை. ஞு, ணு, து, நு, லு, று, னு ஆகியவை மூன்றாவது வகையைச் சேர்ந்த எழுத்துக்கள்.

18 மெய்யெழுத்துக்களோடும் உகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துக்கள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + உ கு கூனா
ங் இங்ஙன்னா ங் + உ ஙு ஙூனா
ச் இச்சன்னா ச் + உ சு சூனா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + உ ஞு ஞூனா
ட் இட்டன்னா ட் + உ டு டூனா
ண் இண்ணன்னா ண் + உ ணு ணூனா
த் இத்தன்னா த் + உ து தூனா
ந் இந்தன்னா ந் + உ நு நூனா
ப் இப்பன்னா ப் + உ பு பூனா
ம் இம்மன்னா ம் + உ மு மூனா
ய் இய்யன்னா ய் + உ யு யூனா
ர் இர்ரன்னா ர் + உ ரு ரூனா
ல் இல்லன்னா ல் + உ லு லூனா
வ் இவ்வன்னா வ் + உ வு வூனா
ழ் இழ்ழன்னா ழ் + உ ழு ழூனா
ள் இள்ளன்னா ள் + உ ளு ளூனா
ற் இற்றன்னா ற் + உ று றூனா
ன் இன்னன்னா ன் + உ னு னூனா
வரிவடிவம்

தமிழில் உகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போது இருப்பது போலவே எப்போதும் இருந்தது என்பதில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் உகரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்களில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.


உகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் உகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் உகரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.


விக்கிப்பீடியாவில் இருந்து.
Engr.Sulthan

No comments: