அறிவோம் அரிச்சுவடி!
தமிழால் வளர்ந்தவன். தமிழாய் வாழ்பவன். தமிழ் ஆய்ந்தவன். அறிந்தவன், நான். ஆனால் வெளிநாட்டில் வாழும் என் பேத்திக்கு தமிழ் எழுத,படிக்கத் தெரியாது. இது கொடுமையிலும் கொடுமை தான். உண்மையில் வெட்கப் படுகிறேன். வேதனைக் கொள்கிறேன்.
அன்பு வெளி நாட்டு வாழ் நண்பர்களே! மொழி கசடறக் கற்போம். நம் பிள்ளைகளுக்கு அதைக் கற்றுக் கொடுப்போம்.அந்த வகையில் தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் பற்றி இங்கு பார்ப்போம். தயவு செய்து உங்களின் குழந்தைகளுக்காக மொழி கற்பிக்க சிறிது நேரத்தை செலவிடுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.
இ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாவது எழுத்தும் இதுவே. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "இகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஈனா" என்பது வழக்கம்.
"இ" யின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் இ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
தமிழில் சுட்டெழுத்துக்கள் மூன்று. அவற்றுள் இகரமும் ஒன்று. இது அண்மைச் சுட்டைக் குறிக்கப் பயன்படுகின்றது[2]. எடுத்துக்காட்டாக இவன், இது, இங்கே போன்ற அண்மைச் சுட்டுச் சொற்களில் இ முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் இ சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. இ புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும்[3]. இச்சிறுவன் (இ + சிறுவன்), இக்கோயில் (இ + கோயில்) போன்ற சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
இனவெழுத்துக்கள்
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.
இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது இ, ஈ வுக்கு இன எழுத்தாக அமையும்.
பொருள் அடிப்படையில் அ, ஆ. ஈ என்பவை இ இன் இன எழுத்தாக அமைவன.
வடிவ அடிப்படையில், அ, உ, ஊ என்பன இ வுக்கு இன எழுத்துக்கள் எனவும் கூறப்படுகின்றது[4].
சொல்லில் இகரம் வரும் இடங்கள்
'இ' எழுதும் முறை
தனி இ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் இ சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்[5]. இதிலிருந்து ஙி, டி, ணி, ரி, லி, ழி, ளி றி, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களை எழுதுவோர் சிலர் டி, ரி, லி போன்ற எழுத்துக்களும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். டிக்கட், ரிக்சா, லிவர்பூல் போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இகரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
"இ" யும் மெய்யெழுத்துக்களும்
இ உடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து இகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன[6]. இகரமேறிய மெய்களை எழுதும்போது அகரமேறிய மெய்யெழுத்துடனேயே "விசிறி" எனப்படும் துணைக்குறியையும் சேர்த்து எழுதுவது மரபு.
18 மெய்யெழுத்துக்களோடும் அகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துக்கள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + இ கி கீனா
ங் இங்ஙன்னா ங் + இ கி ஙீனா
ச் இச்சன்னா ச் + இ சி சீனா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + இ ஞி ஞீனா
ட் இட்டன்னா ட் + இ டி டீனா
ண் இண்ணன்னா ண் + இ ணி ணீனா
த் இத்தன்னா த் + அ தி தீனா
ந் இந்தன்னா ந் + இ நி நீனா
ப் இப்பன்னா ப் + இ பி பீனா
ம் இம்மன்னா ம் + இ மி மீனா
ய் இய்யன்னா ய் + இ யி யீனா
ர் இர்ரன்னா ர் + இ ரி ரீனா
ல் இல்லன்னா ல் + இ லி லீனா
வ் இவ்வன்னா வ் + இ வி வீனா
ழ் இழ்ழன்னா ழ் + இ ழி ழீனா
ள் இள்ளன்னா ள் + இ ளி ளீனா
ற் இற்றன்னா ற் + இ றி றீனா
ன் இன்னன்னா ன் + இ னி னீனா
வரிவடிவம்
தமிழில் இகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் ஒன்றுபோலவே இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் இகரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.
இகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் இகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் இகரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.
(வாசகர் கருத்து:நன்று. ஆனால், கல்வெ ட்டு வடிவ வளர்ச்சியைக் கொண்டு வரி வடிவ வளர்ச்சியைக் கூறுவது தவறு.
ஏனெனில், ஓலைச் சுவடிகளில் இப் போதைய எழுத்து முறையே (மிகச் சிறு வேறுபாடுகளுடன்
இருந்தமையால் தான் காலங் காலமாகப் படி யெடுத்து வந்தனர். எனவேதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல் காப்பியம் முதலான இலக்கிய நூல்களை நம்மால் இன்றும் படிக்க முடிகின்றது. பல இடங்களில் இவ்வாறு தவறான வரி வடிவ வளர்ச்சியைக் குறிப்பிடுவதால் பிறர் இதனை மேற்கோளாகக் குறிப்பிட்டுத் தவறான எண்ணத்தையே பரப்புகின்றனர்.-திருவள்ளுவன் இலக்குவனார்)
(விக்கிப்பீடியாவில் இருந்து
Engr.Sulthan
No comments:
Post a Comment