இந்தக் கொள்ளையை யார் தடுப்பது?
- கே.எம்.சந்திரசேகரன் -
First Published : 18 Jan 2012 03:38:36 AM IST
சென்னை, ஜன. 17: ""விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு'' என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு, மக்களின் வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிவதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில், லாட்டரி சீட்டு விற்பனையைத் தடை செய்தார். இன்றளவும் இந்தத் தடை அமலில் இருக்கிறது. ஆனால் மக்களின் ""ஆசை'' என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை. கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. திரைப்படம் பார்க்க, திரையரங்கம் போகும் அவசியமில்லாமல் போய், தொலைக்காட்சிகளிலேயே பல முறை பாடல் காட்சிகளைப் பார்க்க முடிவதால், இந்தக் கேள்விக்கு எந்தவொரு நபரும் மிக எளிதாக பதிலைக் கூறிவிட முடியும். இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர். எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.'' திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும். மூணு சீட்டு குலுக்குபவர்களை சிறு நகரங்களில் திரையரங்குகளின் வெளியே பார்த்திருக்கலாம். அதைப் போலவே, இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள். நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.' ஒரு கோடி ரூபாய் வென்றிடலாம் என்ற புதிய அறிவிப்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் இப்போது வந்து கொண்டிருக்கிறது. இதற்குப் பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம். ஆக, ஏழு நாள்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் மட்டும் வருமானம் ரூ.7 கோடி. 10 லட்சம் பேர் என்றால்தான் மேற்படி கணக்கு. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தினம் ஒரு கோடி எஸ்.எம்.எஸ். வரை வரும் என்கிறார்கள் தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன அலுவலர்கள். அப்படியானால் கோடிகள் இன்னும் அதிகமாகும். இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள். இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நடிகருக்கு பெரிய அளவில் சம்பளம் தருகிறார்களாம். இப்படி தமிழர்களின் பணம் சுரண்டப்படுவதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. சொந்த வருமானம் வந்தால் போதும் என்றாகிவிட்டது. டி.வி. சேனல்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எம்.எஸ். மூலம் நடத்தப்படும் இந்தப் பல கோடி ரூபாய் மோசடியை அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது? அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் "கட்டணம் இல்லாத எஸ்.எம்.எஸ்.' சேவை மூலம் நேயர்களை பங்கேற்கச் செய்யலாமே எனும் கேள்விக்குப் பதில் சொல்வார் இல்லை. காகித லாட்டரியை ஒழித்தபோது லாட்டரி முதலாளிகள் கவலைப்பட்டார்கள். குடும்பத் தலைவிகள் மகிழ்ந்தார்கள். இந்த 'காட்சிக் கொள்ளையைத்' தடுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
http://ping.fm/moga5
--
Indeed in theMessenger of Allah you have an excellent example to follow for who ever hopes in Allah and the Last Day and remembers Allah much.
Al Quran (33:21)
இன்னும் வரப் போகும் அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அன்று ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து அதன் பாவங்களுக்காக பரிகாரமாக எந்த நஷ்ட ஈடும் பெறப்படாது. யாருடைய பரிந்துரையும் அதற்கு பலனளிக்காது. அவர்கள் எவர் மூலமாகவும் எந்த உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
அல் குர்ஆன் (02-123
But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment.
Al Quran (20:124)
மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)
Yusuf, Trichy
No comments:
Post a Comment