Saturday, April 28, 2012

காலம் போன்றதொரு காலம்

-வி.எஸ்.முஹம்மது அமீன்

காலம் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.மரணத்திடம் மிகப் பத்திரமாய் நம்மை ஒப்படைத்து விட்டு அது நகர்ந்து

சென்றுகொண்டே இருக்கிறது.கால ஓட்டத்தின் பயணத்தில் நமக்கு அனுதினமும் அனுபவங்களை அது சொல்லித்தருகிறது.

காலம் கடந்தும் காலம்தான் பலவற்றை நமக்கு உணர்த்துகிறது.

விரல்பிடித்து நடைபயின்று விளையாட்டுக்காட்டும் காலம் கடைசி காலத்தில் கைத்தடியாய் நம் நடை தாங்குகிறது.

காலம் காட்டித்தரும் கோலங்கள் எத்தனை எத்தனை..!
அதே சூரியன்; அதே காற்றுஅதே விடியல்; ஆனால் எல்லா நாட்களும் வெவ்வேறானவை.

ஒரு நாள் நம்மை அழவைக்கும்; மறு நாள் நம்மை சிரிப்பூட்டும்.
ஒரு பொழுது பட்டாம்பூச்சியாய் பறக்கவைக்கும்; மறு பொழுது நொடித்துப்போட்டு முடக்கிவைக்கும்.
சில நேரங்களில் வசந்தக் காற்றாய் நெஞ்சை வருடும் தென்றல்; சில நேரங்களில் சுழற்றியடிக்கும் சூறாவளி.
பூக்களின் ஸ்பரிசம் சில கணங்களில்; முட்களின் வாசம் சில கணங்களில்.
முத்தங்கள் சிலபோது; எச்சில் உமிழும் சிலபோது.
நறுமணம் நாசிக்காற்றில் குடியிருக்கும்; முடை நாற்றம் சில நேரம் மூக்கடைக்கும்.

காலக் கண்ணாடியின் வண்ணங்கள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டேயிருக்கின்றன.ஆனால் காலம் கருப்பா, சிவப்பா என்று நாம்
விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.

காலத்தை யாரும் நின்று பார்ப்பதில்லை. ‘முன்பொரு காலத்தில்..’என்று எப்போதுமே திரும்பித் திரும்பி பழைய காலத்திலேயே பாடம்
தேடிக்கொண்டிருக்கின்றோம்.

அதே காலம்; அதே மனிதன்.ஆனால் நேற்று மிகப்பிரியாமான அதே விசயம் இன்று மிக அருவருப்பாய் தோன்றுகிறது.
நேற்றைய தேவதைகள், இன்று ராட்சசிகள். நேற்று வெல்லப்பாகாய் இனித்துக் கிடந்ததெல்லாம் இன்று வேப்பங்காயாய் கசந்து
போகிறது.ஒட்டி உயிராடிய உறவுகள் இன்று வெட்டி உறவறுந்து நிற்கும். நேற்றைய அழகுகள்; இன்றைய அசிங்கங்கள்.

காலத்தின் கோமாளிகளைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது காலம்.அரசியல்வாதிகளைப் போல் காலக்கோமாளிகள் வேறவரும்
இலர்.

‘உங்கள் பொன்னான வாக்குகளை உதய சூரியன் சின்னத்தில்’ என்று கை கூப்பி உச்சி வெயிலில் திறந்த வெளி வேனில் வியர்வை
துடைத்து வந்த அதே மனிதர் அதிக பட்சம் அடுத்த ஐந்து வருடங்களில் நமது பொன்னான வாக்கை இரட்டை இலை சின்னத்தில்’என்று
கைகூப்பி அதே வெயிலில் அதே வேனில் அதேபோல் வியர்வை துடைத்து, அதேபோல் இளித்துக்கொண்டு...
மீண்டும் சூரியனுக்கு,மீண்டும் இரட்டை இலைக்கு... பின்னே காலம் கை கொட்டிச் சிரிக்காதா இந்தக் கோமாளிகளைப் பார்த்து...!!

நேற்று நடுவீதியில் பழக்கடை முதியவரிடம் முதுகு வளைந்து ஓட்டுப் பொறுக்கிய அதே மனிதன் அடுத்த ஓரிரு தினங்களில்
மாண்புமிகு அமைச்சர் அவர்களாய்..ஒளிப்படங்களுக்கு புன்னகைத்துக் கொண்டிருப்பார்.

காலம் சிலரை உயரத்தில் வைத்து உச்சி முகர்கிறது.சிலரை காலடியில் போட்டுச் சவட்டுகிறது.கால உறையை பிரித்துப் பார்க்கும்போது
வேதனையை அல்லது மகிழ்வைத் தரும்.அது எப்போது வேதனையைத் தரும்? எப்போது மகிழ்வைத் தரும்? யாருக்கும் தெரியாத
மர்மங்களாய் காலம் சுவாரஸ்யப்பட்டுக் கிடக்கிறது.

அடுத்த வினாடிக்கு உத்தரவாதம் இல்லாத சுவாரஸ்யம்.அடுத்த அடி பூந்தோட்டத்திலா, தீக்குன்றத்திலா..? தெரியவே தெரியாத
நடைப்பயணம். பொசுக்கென்று நொடிப்பொழுதில் பிணமாய்க் கிடத்திப் போட்டுவிடும்.

ஒரு நாளின் எல்லா அலைப்பேசி அழைப்புகளும் ஒன்றாய் இருப்பதில்லை.
அதிகாலையில் எழுந்தவுடன் மனைவியிடமிருந்துதான் அழைப்புவர வேண்டும்’என கையெழுத்திடப்படாத ஒப்பந்தம் என்றும்
ஒன்றுபோல் இருப்பதில்லை.காரணங்களைச் சொல்லி நிற்கிறது நிறைய நாட்களில்..

முதல் அழைப்பில் ‘வாப்பா...எப்ப வருவீங்க..? உங்கள தேடுது வாப்பா! அமீரா என்னப் பாத்து சிரிக்கிறாப்பா..!எனக்கு... எனக்கு.....
சாக்லேட் வாங்கிட்டு வருவீங்களா...?’என்ற செல்லக் குரலில் உயிர் நனைப்பாள் என் முர்ஷிக்குட்டி.

அடுத்த அழைப்பு நண்பனிடமிருந்து ‘பணம் இன்னிக்கு ரொம்பத் தேவைப்படுது.கண்டிப்பாய் வேணும்’ என்று பணப்பாரம் ஏற்றும்.
செல்லக் குரல் மறந்து பணம் தேடியலையும் மனசு.

அடுத்த சில மணித்துளிகளில் வரும் அழைப்போசையில் சொந்தக்காரரின் மரணச் செய்தி வரும்.அந்த உறவினரின் முகம்.அவருடனான
நெருக்கம். அவரின் குண நலன்கள். மலக்குல் மெளத் வந்தபோது அவர் என்ன செய்திருப்பார்? இப்போது கபர் குழியில் மண்மூடிப் போக
அவருடைய நிலை என்ன?’ என்று அவரையே சுற்றிக் கொண்டிருக்கும் மனசு.

அடுத்த அலைப்பேசி அழைப்பில் அலுவலக வேலையொன்று வரும்.எல்லாமும், எல்லாரும் மறந்து போக, மண்டைக்குள் ஏறி
உட்கார்ந்துகொள்ளும் அலுவலகப் பணி.

பணிமூழ்கிக் கிடக்கையிலே ‘ஊரின் ஒழுக்கச் சீர்கேட்டைச் சொல்லி ரெளத்திரம் ஏற்றிப் போகும் மற்றொரு அலைப்பேசி அழைப்பு.

அடுத்தடுத்து வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு செய்திகளாய்...!
மீண்டும் நண்பன் ‘காலைல போன் பண்ணேனே பணம் என்னாச்சுடே?!’என்பான்.

காலச் சுழற்சியை நின்று அவதானிக்கும் போதுதான் அதன் பரிணாமங்கள் தெரியத்தொடங்கும்.

நேற்றுகளில் படிப்பினை பெறுவதன் மூலம், இன்றுகளைப் பயன்படுத்துவதன் மூலம், நாளைகளைத் திட்டமிடுவதன் மூலம் காலப்
பயன்பாடு நம்மில் பெரும் பலன் நல்கிப்போகும்.

காலம் பொன் போன்றது என்று யார் சொன்னது?
காலம் காலம் போன்றதுதான்.அதனை எதனுடன் ஒப்பிட்டாலும் அந்த ஒப்புமையை காலம் தோலுரித்துப் போட்டுவிடும்.

எத்தனை அழகாய், ஆழமாய், அறிவாய், செறிவாய், நபி(ஸல்) அவர்கள் உபதேசித்திருக்கின்றார்கள்.

ஐந்து விஷயங்களுக்கு முன் ஐந்து விஷயங்களை அரிதாய்க் கருதுங்கள்
1. முதுமைக்கு முன் இளமையையும்
2. நோய்க்கு முன் உடல் நலத்தையும்
3. வறுமைக்கு முன் செல்வத்தையும்
4. வேலையில் ஈடுபடும் முன் ஓய்வையும்
5. மரணம் வரும் முன் வாழ்வையும்
அரிதாகக் கருதி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்வியல் சூத்திரத்தைப் படிப்பவன் மனிதன்; சிந்திப்பவன் அறிஞன்; செயல்படுத்துபவன் மகான் ஆகின்றான்.

மெழுகுவர்த்தியாய் உருகிக் கரைகிறது நம் ஆயுசுக் காலம்.
நம் காலத்தவணை சுருங்கிக்கொண்டே வருகிறது.

இறந்தகாலம் என்றெல்லாம் ஒன்றில்லை.காலம் இறந்தால் நாம் ஏது? நாம்தான் இறக்கின்றோம்.
காலம் நம்மில் வாழவில்லை. காலத்தில்தான் நாம் வாழ்கிறோம்.

நமது வாழ்காலத்தில் நாளையும் வரும் நாளை.
அந்த நாளையில் நீங்களும் நானும் இருப்போமா என்ன?

மற்றவை பிற பின்...
தொடப்புக்கு: 8012066681

(சிந்தனைச் சரம்)

No comments: