அறிவோம் அரிச்சுவடி-எ
எ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இவ்வெழுத்து தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவதாக உள்ளது. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "எகரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஏனா" என்பது வழக்கம்.
"எ" யின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் எ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
தமிழில் உள்ள வினாவெழுத்துக்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இது சொல்லுக்கு முதலில் வந்து வினாப்பொருளைக் காட்டி நிற்கும்.[2]. எடுத்துக்காட்டாக எவன், எது, எங்கே போன்ற வினாச் சொற்களில் எ முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் எ சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகவினா எழுத்து எனப்படுகின்றது. எ புற வினா எழுத்தாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும்[3]. எப்பெண் (எ + பெண்), எவ்விடம் (எ + இடம்) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
இனவெழுத்துக்கள்
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், எ என்பது ஏ க்கு இன எழுத்தாக அமையும்[4].
"எ" யும் மெய்யெழுத்துக்களும்
எ யுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து எகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. எகர உயிர் மெய்களில் எகரத்தைக் குறிக்க ஒற்றைக் கொம்புக்குறி அகரம் ஏறிய மெய்களுடன் சேர்த்தே எழுதப்படுகிறது.
18 மெய்யெழுத்துக்களோடும் அகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துக்கள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + எ கெ கேனா
ங் இங்ஙன்னா ங் + எ ஙெ ஙேனா
ச் இச்சன்னா ச் + எ செ சேனா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + எ ஞெ ஞேனா
ட் இட்டன்னா ட் + எ டெ டேனா
ண் இண்ணன்னா ண் + எ ணெ ணேனா
த் இத்தன்னா த் + எ தெ தேனா
ந் இந்தன்னா ந் + எ நெ நேனா
ப் இப்பன்னா ப் + எ பெ பேனா
ம் இம்மன்னா ம் + எ மெ மேனா
ய் இய்யன்னா ய் + எ யெ யேனா
ர் இர்ரன்னா ர் + எ ரெ ரேனா
ல் இல்லன்னா ல் + எ லெ லேனா
வ் இவ்வன்னா வ் + எ வெ வேனா
ழ் இழ்ழன்னா ழ் + எ ழெ ழேனா
ள் இள்ளன்னா ள் + எ ளெ ளேனா
ற் இற்றன்னா ற் + எ றெ றேனா
ன் இன்னன்னா ன் + எ னெ னேனா
சொல்லில் எகரம் வரும் இடங்கள்
'எ' எழுதும் முறை
தனி எ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் எ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[5]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙெ, டெ, ணெ, யெ, ரெ, லெ, ழெ, ளெ றெ, னெ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டெ, யெ, ரெ, லெ போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டென்மார்க், யெமென், ரெட்டி, லெபனான் என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
எகரம் தனித்து நின்று சொல்லுக்கு இறுதியாக வருவதில்லை. இது மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வருவதில்லை. உயிரளபடைகளில் சொல்லுக்கு இறுதியில் எ இட்டு எழுதுவது வழக்கு ஆயினும், அது நெட்டுயிர்களின் மாத்திரை மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கான ஒரு குறியீடாக எழுதப்படுகிறதே அன்றி அது தனி எகரமாக நிற்பதில்லை. எகரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்[6].
வரிவடிவம்
தமிழில் எகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் ஒன்றுபோலவே தொடக்க காலத்தில் இருந்தே இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் எகரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.
தொல்காப்பியம் எகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், எகரத்துக்கும் ஏகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் எகர எழுத்தின் வடிவம் ஏகாரக் குறியீட்டுடன் புள்ளியும் சேர்ந்ததாக அமைந்தது தெளிவு. இவ்வேறுபாடு கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்திய தமிழ்ப் பிராமி எழுத்துக்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழ் கல்வெட்டுக்களில் எகரமும், ஏகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவர் ஏகாரத்திற்கு அடியில் சிறிய சரிவான கோடொன்றைச் சேர்த்து அதனை எகரத்திலிருந்து வேறுபடுத்தியபோது ஏகாரத்துக்கான பழைய குறியீடு எகரத்துக்கு ஆகியது.
எகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் எகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் எகரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன. பிராமி, கிரந்தம் ஆகிய எழுத்து முறைகளிலும், வட இந்திய மொழிகளின் எழுத்து முறைகளிலும் எகரம் கிடையாது. ஆனால் இந்திய-ஆரிய மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கள மொழியில் எகரம் உள்ளது.
பிரெய்லியில் எகரம்
கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் இரண்டாவது வரிசையில் இடது பக்கப் புள்ளியும் மூன்றாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது எ யைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.
பாரதி பிரெய்லியில் எகரம்
விக்கிப்பீடியாவில் இருந்து
Engr.Sulthan
No comments:
Post a Comment