ource: http://ping.fm/MK2bZ
வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவம்
ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.
ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.
மருத்துவ குணம் கொண்ட ஒமம்
இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது. கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது. கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு தக்க மருந்தாகும். சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய், போன்றவற்றுக்கு மருந்தாக உதவுகிறது.
வயிற்றுப் பொருமல் நீங்க
சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.
இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.
பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
ஓமத்திரவகம்
ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
உடல் பலம் பெற
உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
பசியைத் தூண்ட
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது
No comments:
Post a Comment