Friday, February 17, 2012

PDF Version attached
பேப்பர் பை, கவரில் சூப்பர் லாபம்




ஏ.கருணாகரன் : சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காரணமாக பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பேப்பர் கவர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் பேப் பேக்ஸ் எனும் நிறுவனம் நடத்தி வரும் தனராஜ். அவர் கூறியதாவது: பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன்.

பொள்ளாச்சி அடுத்த கேரள பகுதிகளில், பாலிதீன் கவர்களுக்கு பதில், பேப்பர் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையால், பேப்பர் கவர் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. என் அப்பா பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை துவங்கினார். அதன் பிறகு நானும் பேப்பர் கவர் தயாரிக்க துவங்கினேன். பொள்ளாச்சியில் இது போல 13 நிறுவனங்கள் உள்ளன. கோவையில்கூட இந்தளவு இல்லை. பொள்ளாச்சியில் இயங்கும் பெரும்பாலான பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளாவை சந்தை இடமாக கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நான் கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களை குறி வைத்து உற்பத்தியை துவக்கினேன். பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்று வருகிறேன். படிப்படியாக உற்பத்தி அதிகரித்துள்ளது.

பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் பிற மாவட்டங்களில் குறைவாக உள்ளது. புதிய தொழில் முனைவோர் பேப்பர் கவர் உற்பத்தியை துவக்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். படிப்படியாக இத்தொழிலை மேம்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பெண்களும் இத்தொழிலில் ஈடுபடலாம்.


செலவு, வருவாய்

ஒரு நாளில் 200 கிலோ பேப்பர் வீதம் மாதத்தில் 25 நாளில் 5 டன் பேப்பரில் கவர்கள் தயாரிக்கலாம். ஒரு கிலோ பேப்பர் ரூ.29 வீதம் 5 டன்னுக்கு ரூ.1.45 லட்சம், வாடகை ரூ.2500, மின்கட்டணம் ரூ.1000, 3 தொழிலாளர்கள் சம்பளம் ரூ.15 ஆயிரம். இதர செலவுகள் ரூ.5 ஆயிரம் என மாதத்துக்கு ரூ.1.68 லட்சம். கவர்கள் 100 எண்ணிக்கை வீதம் சராசரி விலை: 6 செமீ அகலம், 10 செமீ நீளமுள்ளவை ரூ.30, 7ஜ்12 ரூ.36, 9ஜ்13ரூ.46, 10ஜ்16ரூ.65, 12ஜ்19 ரூ.85, 14ஜ்18ரூ.100, 14ஜ்22ரூ.115, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33 ஆகியவை ரூ.150, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37 ஆகியவை ரூ.230, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39 ரூ.250, 31ஜ்44ரூ.480, 36ஜ்48 ரூ.570க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை விலையோடு, உற்பத்தி செலவை ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 10 சதவீத லாபம் அல்லது மாதம் சராசரியாக ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். கடைகளில் நேரில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்தால் கூடுதல் விலைக்கு விற்கலாம். லாபமும் அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.


கட்டமைப்பு : 20 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட ஷெட். இதை 3 பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் இயந்திரம், மற்ற பகுதிகளில் அலுவலகம், ஸ்டோர் ரூம் என பயன்படுத்தலாம். வாடகை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். ஒரு எச்பி மின் இணைப்பு (ரூ.2 ஆயிரம்) வேண்டும்.

முதலீடு: பேப்பர் கவர் இயந்திரம் ரூ.2.5 லட்சம், 2 டேபிள் ரூ.8 ஆயிரம், 4 அலுவலக சேர்கள் ரூ.1,000, பசை காய்ச்ச இரும்பு அடுப்பு, அலுமினிய பாத்திரம், பிளாஸ்டிக் வாளி , 2 மக் உள் ளிட்ட இதர பொருட்கள் ரூ.1000.

முதலீட்டுக்கு ரூ.2.82 லட்சம் தேவை. (முதல் மாத உற்பத்தி செலவு ரூ.1.68 லட்சம் தனி)

தேவையான பொருட்கள் : பேப்பர் கவருக்கென பிரவுன் நிற கிராப் பேப்பர் (கிலோ ரூ.29), ரப்பர் பேண்ட் (கிலோ ரூ.350), பசை காய்ச்ச மரவள்ளிக்கிழங்கு மாவு, துத்தம், பிளாஸ்டிக் கட்டு கயிறு.
கிடைக்கும் இடங்கள்: பேப்பர் கவர் இயந்திரங்கள் பொள்ளாச்சி, கோவை நகரங்களிலும், கிராப் பேப்பர் உடுமலை உள்ளிட்ட பேப்பர் மில்களிலும் கிடைக்கிறது.

விற்பனை வாய்ப்பு: மருந்து கடையில் சிறிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. பேக்கரி, பேன்சி ஸ்டோர், டெக்ஸ்டைல், லாண்டரி, டெய்லரிங் ஆகியவற்றில் பெரிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படு கின்றன. இதனால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. கடைகளுக்கு நேரடியாகவோ, பேப்பர் கவர் மொத்த விற்பனை கடைகளுக்கோ வாடிக்கையாக சப்ளை செய்யலாம்.


தயாரிப்பு முறை

பேப்பர் ரோல் 13.5 செமீ, 15.5, 19.5, 21.5, 25.5, 29.5, 37.5, 45.5, 53.5, 63.5, 73.5 செமீ என பல்வேறு அகலங்களில் கிடைக்கிறது. அதன் மூலம் 10 செமீ நீளம், 6 செமீ அகல கவர் முதல் 7ஜ்12, 9ஜ்13, 10ஜ்16, 12ஜ்19, 14ஜ்18, 14ஜ்22, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39, 31ஜ்44, 36ஜ்48 ஆகிய அளவுள்ள கவர்கள் தயாரிக்கலாம்.
வெவ்வேறு அளவு கவர்களை தயாரிக்க அதற்குரிய பிளேட், பேப்பர் ரோலை இயந்திரத்தில் பொருத்த வேண்டும். கவரின் மத்திய பகுதி மற்றும் கீழ் பகுதியை ஒட்ட தேவையான பசையை இயந்திரத்தில் உள்ள டேங்க்கில் நிரப்ப வேண்டும்.

பின்னர் இயந்திரத்தை இயக்கினால் பிளேட்டின் கீழ்பகுதி வழியாக பேப்பர் ஓடும். அதன் மேல் பகுதியில் பேப்பர் மடித்து, கவரின் மத்திய பகுதியில் பசை ஒட்டும். அங்கிருந்து நகரும் பேப்பர் குறிப்பிட்ட அளவில் துண்டிக்கப்பட்டு அடுத்த பகுதிக்கு செல்லும். அங்கு கீழ் பகுதி ஒட்டப்பட்டு கவர் தயாராகும். உற்பத்தியான கவர் 50 எண்ணிக்கை சேர்ந்தவுடன் ஒரு முறை விளக்கு எரியும். கவர்களை 50 அல்லது 100 எண்ணிக்கையில் அடுக்கி ரப்பர் பேண்ட் போட்டால் விற்பனைக்கு தயார். இயந்திரம் துவக்கத்தில் ஓடும்போது பசை சீராக செல்கிறதா, ஒட்டப்படுகிறதா, சரியான அளவுகளில் வெட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஓட்டம் சீரானவுடன் ஒரு இயந்திரம் மூலம் நாள்தோறும் 8 மணி நேரத்தில் 200 கிலோ பேப்பரில் கவர் தயாரிக்கலாம். அளவுகளுக்கேற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும்.


லாபம் தரும் காகித பை தயாரிப்பு

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம் என்கிறார்



காகிதப் பை வகைகள்

ஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என விதவிதமான வகைகள் உள்ளன.

தேவைப்படும் பொருட்கள்: பழைய அல்லது புதிய பேப்பர்கள். பேப்பரின் வகைகளான டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன்ஷீட், சார்ட் ஆகியவை.

இயந்திரம்: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின்.

உற்பத்தி பொருட்கள்: மெட்டல் வளையம், பசை, கைப்பிடிக்குத் தேவையான கயிறு.

கிடைக்கும் இடங்கள்: பேப்பர்கள் பழைய பேப்பர் கடைகளிலும், கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் சென்னை, பெங்களூர், கோவை, ஐதராபாத் நகரங்களிலும், இதர வகை பேப்பர்கள் மற்றும் பொருள்கள் சிறு மற்றும் பெரு நகர ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

எந்த வகை பேப்பர் ஆனாலும், தயாரிப்பு முறை ஒன்றுதான். முதலில் தயாரிக்கப்படவுள்ள அளவை பேப்பரில் ஸ்கேல் வைத்து அளந்து மார்க் செய்ய வேண்டும். அதை கையால் இயக்கக்கூடிய கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும், கீழ்பகுதியில் மடக்கியும் கொள்ளலாம். அடிப்பாகத்தை வலுப்படுத்த, அட்டை ஒட்ட வேண்டும்.

கைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் 2 துளைகளை போட வேண்டும். துளை போட அந்த மெஷினையே பயன்படுத்த வேண்டும். ஓட்டைகள் கிழியாமல் இருக்க, மெட்டல் வளையத்தை பிரேம் செய்ய வேண்டும். கடைசியாக துளையில் கயிறு கோர்த்து முடிச்சுபோட்டால் பேப்பர் பை தயார்.

விற்பனை வாய்ப்பு

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மற்றும் சுற்றுச் சூழல் அக்கறை ஆகிய காரணங்களால் பெரும்பாலான கடைகளில் காகித பைகளில் பொருள் வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஜவுளி, டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர்பிடிக்கலாம். காகிதப் பைகளில் நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் பைகளுக்கு மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும்.

லாபம்

மீடியம் அளவான 11க்கு 9 செ.மீ. பையில், தாங்கு திறனுக்கேற்ப 200 கிராம் முதல் 6 கிலோ எடையுள்ள பொருள்களை வைக்கலாம். செய்தித்தாள் பைகளில் குறைந்த எடை, பெரிய தோற்றமுள்ள பொருட்களை வைக்கலாம். ஒரு மீடியம் சைஸ் காகிதப் பை தயாரிக்க ரூ.3, டியூப்ளக்ஸ் பை தயாரிக்க ரூ.4, கோல்டன் யெல்லோ ஷீட் பை தயாரிக்க ரூ.3.25, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தயாரிக்க ரூ.3.25 செலவாகிறது. இதில் காகிதப் பை, கோல்டன் ஷீட் பை, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தலா ரூ.5க்கும், டியூப்ளக்ஸ் பைகள் ரூ.7க்கு விற்கிறது.

இதன் மூலம் பைக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை லாபம். இதன் மூலம் மாதம் குறைந்தபட்ச லாபம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும். ஒரு மெஷினில் ஒருவர் கட்டிங் செய்து, மற்றொருவர் கிரீசிங் செய்து, இன்னொருவர் துளையிட்டு கயிறு கோர்த்தால் மாதம் 6 ஆயிரம் பை தயாரிக்கலாம். லாபமும் அதற்கேற்ப அதிகரிக்கும்.

பயிற்சி: பேப்பர் பை தயாரிப்பு தொடர்பான பயிற்சியை வேளாண் பல்கலைக்கழகம், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் பயிற்சியாளர்கள் மூலம் கட்டண முறையில் ஒரு நாள் முதல் ஒரு வாரம் கால அளவில் அளித்து வருகின்றன.

முதலீடு

கட்டமைப்பு: மெஷின் நிறுவ, பணியாற்ற 10க்கு 10 அடி அறை போதும். பைகளை இருப்பு வைக்கவும், அலுவலக பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு அறை தேவை.

நிரந்தர முதலீடு: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் ரூ.25 ஆயிரம்.

உற்பத்தி செலவு

ஒரு மெஷினில் ஒரு நாளில் ஒருவர் 11க்கு 9 செ.மீ அளவிலான 75 பைகளை வெட்டி, கிரீசிங் செய்து, துளையிட்டு, கயிறு கோர்த்து தயார் செய்யலாம். இதற்கு எந்த வகை பை தயாரிக்கிறோமோ அந்த வகை காகிதம் ஒரு கிலோ போதுமானது. அதன்படி மாதத்துக்கு 26 கிலோவில் 2 ஆயிரம் பைகள் தயாரிக்கலாம். சாதாரண காகிதம் 26 கிலோ ரூ.260, டியூப்ளக்ஸ் போர்டு ரூ.1690, கோல்டன் யெல்லோ ஷீட் ரூ.910, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் ரூ.750. பசை 26 கிலோ ரூ.260, கைப்பிடி கயறு 5 மீட்டர் ரூ.130, மெட்டல் வளையம் ரூ.20, பென்சில் 2க்கு ரூ.10. உற்பத்தியாளர் சம்பளம் மாதம் ரூ.5200.

சாதாரண பை தயாரிக்க மாதத்துக்கு மொத்தம் ரூ.5,880, டியூப்ளக்ஸ் போர்டு பைகள் தயாரிக்க ரூ.7990, கோல்டன் யெல்லோ ஷீட் தயாரிக்க ரூ.6530, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் தயாரிக்க ரூ.6370 செலவாகிறது. இதில் கூலியாள் இல்லாமல் நாமே உற்பத்தியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் ரூ.680, அதிகபட்சம் ரூ.1690 உற்பத்தி செலவுக்கு போதும்.

காகிதப் பொருள்கள் செய்முறை பயிற்சி முகாம்



சென்னை, ஜன. 28: காகிதப் பொருள்கள் செய்முறை பயிற்சி முகாமை சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) பிப்ரவரி 27-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடத்துகிறது.பேப்பர் கோப்பைகள், பேப்பர் தட்டுகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை தயாரிப்பது குறித்த பயிற்சிகள் இந்த முகாமில் அளிக்கப்படும்.பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர் என். சிவலிங்கத்தை 9940318891 , 9940693588 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை உங்கள் இதயதோடு இணைப்பவர்

Engr.Sulthan

No comments: