மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!
இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)“மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)
முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.
அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
“நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)
இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். “குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே’ என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின் அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல “குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.” அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி
ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.
(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் “எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது’ என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் “விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் “உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு” என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)
இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.
No comments:
Post a Comment