Saturday, February 11, 2012

திருநெல்வேலியைப் பற்றி பதிவு போட்டதும் கொஞ்சம் டல் ஆயிட்ட ராம்நாட் சகோதரர்களே! உங்களின் ஏக்கம் தணிக்க உங்க ஊரைப் பற்றிய ஒரு பதிவு இதோ! சகோதரி ஆமினா அவர்கள் தருகிறார்கள்....

Engr.Sulthan

எங்க பூமி ராம்நாட்

பொதுவாவே ஊர் பெருமைலாம் ஊர்ல இருக்கும் போது தெரியாது. மாமியார் வீட்டுக்கு போனப்பொறவு தான் பட்டிக்காடா இருந்தாலும் அத அமெரிக்கா ரேன்ச்க்கு பில்டப் பண்ணி பேசுவோம். பட் என்ற வூட்டுக்காரரும் என்ற வூர்க்காரர் என்பதால் இந்த அடிபிடி சண்ட நடக்கல. லக்னோக்கு வந்த பிறகு தான் சொர்க்கமே சென்றாலும் அது நம்மூர போல வருமான்னு பாட்டு படிச்சுட்டு இருக்கேன். இல்லல்ல தனியா கிச்சன்ல நின்னு அழுதுட்டே புலம்பிட்டு இருக்கேன்:(( (இருப்பதன் அருமை இல்லாத போது தான் தெரியும்:)

இராமநாதபுரம் மாவட்டம்னாலே வறட்சியான மாவட்டம்னு தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். மிஞ்சி,மிஞ்சி போனா இராமேஷ்வரம், கமல்ஹாசன், அப்துல் கலாம் தெரியும். ஆனா இன்னும் நல்ல சுவாரசியமான இடங்களும் பழமையை இன்றும் தன்னகத்தே கொண்டு புதுமையாய் ஜொலிக்குது (தங்க சுரங்கம் இருக்குன்னு நம்பி வரவங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது மக்காஸ்)

இராமநாதபுரம்
ப்ரிட்டீஷ்காரங்க கொள்கையை இன்னும் கடைபிடிக்கிற கூட்டம் எங்க மாவட்டத்துல இருக்காங்க. ஆமா நா கூட தான். எந்த ஊர்ன்னு கேட்டா ராம்நாட்’னு தான் சொல்லுவேன் :) இடையில நிறையபேர் ஆட்சி செய்தாலும் ராம்நா என்று சொல்லும் போதே சேதுபதி ராஜாக்கள் தான் நினைவுக்கு வருவாங்க. சேதுகரையை ஆண்ட மன்னர்கள் என்பதால் சேதுபதி மன்னர்கள் என்ற பெயர் வந்தது. இன்னைக்கும் அவங்க வாரிசுகள் வாழ்ந்துட்டு இருக்காங்க. புகழ்பெற்ற பல அவை நிகழ்ச்சிகள் நடந்த இராமலிங்க விலாசத்தில் ஓவியங்கள் வியக்க வைக்கும் தன்மையுடையது. அரண்மனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மறக்காம பாருங்க. இராமநாதபுரம் ஜமின் அரண்மனை பற்றிய அதிக விளக்கத்துக்கு இங்கே கிளீக்குங்கோ விவேகானந்தர் சிகாகோக்கு போனதே எங்க ராஜானால தானுங்கோ :)

இராமேஷ்வரம்
புண்ணியம் தேடி காசிக்கு போவார். அதுக்கப்பறம் இங்கே தான் வருவார்.... இராமநாதபுரத்துக்கே பெருமையும்,வருமானமும் சேர்க்கும் பல சுற்றுலா இடங்கள் அடங்கிய இடம்,இங்குள்ள கோயில் ரொம்ப பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. இராமேஷ்வர கடற்கரையில் இருந்து தான் கலாம் சார் தன் விஞ்ஞான பயணத்த தொடங்குனதா அத்தா வாங்கி கொடுத்த அக்னி சிறகுகள்ல படிச்சுட்டு அடிக்கடி அங்கே சுத்துவேன். பட் பியூஸ் போன பல்ப் கழட்டி மாட்ட கூட தெரியல :(
இராமேஷ்வரத்த சுத்தியுள்ள இடங்களில் சில…..
பாம்பன் பாலம்


பாம்பன் பாலத்தை அடையும் முன்பே நடுவில் நெடுஞ்சாலையும் இருபக்கமும் கடலும் என பிரம்மிப்பை ஏற்படுத்தும். தனியா ஒரு ஓரமா இருக்குற ராமேஷ்வரத்த இந்தியாவுடன் இணைக்கும் பெருமை கொண்ட பாலம் இது. இந்தியாவிலேயே கடல் மேல கட்டிருக்குற நீளமான முதல் பாலம் இது தான். ரயில் செல்ல வாகனங்கள் செல்ல என தனிதனியா பாலம் இருக்கு. கிட்டதட்ட 2 ½ கிலோ மீட்டர் நீளம். வேகமாக மண்டபம் பகுதி வரை செல்லும் ரயில் பாம்பன் பாலத்தை தொட்டதும் மெதுவாக ஊரும் காட்சியை மேலே உள்ள பாலம் வழியாக பாக்க அவ்வளவு அழகா வியப்பா ப்ரம்மிப்பா இருக்கும். அதுவே அந்த ட்ரைன்குள்ள நான் உக்காந்திருந்தா……. (கண்மூடியிருக்கும் ஆனா கண்ணீர் வரும், வாய் பூட்டு போட்டுருக்கும். ஆனா உள்ள ஏகபட்ட பயம் ஒப்பாரி வைக்கும். அதுனால திருச்சிலேயே துக்க மாத்திர போட்டாவது தூங்கிடுவேன்:))

கப்பல் வரும் போது பாலம் இரண்டாக பிளந்து மேலே தூக்கி கப்பலுக்கு வழிவிடும் காட்சி இன்னும் அழகு.

பாலத்துக்கு மேல இருந்து நாம்ம பக்கத்துல உள்ளவங்ககிட்ட பேசுறது கூட கேக்காது. ஓவர் காத்து+பேரலைகளின் சத்தம். இவ்வளவு பிரம்மாண்ட பாலத்த கட்டி முடிக்குறதுக்குள்ள எத்தன உயிரை இப்பாலம் காவு வாங்கியிருக்கும்னு நினைக்க வைக்கும். அந்த நெனைப்பே என்னைய சீக்கிரம் இடத்த காலி பண்ண வைக்கும் (பேய்,பிசாசு, ஆவின்னா கொஞ்சூண்டு பயம்)

தனுஷ்கோடி
ஆள் நடமாட்டமே இல்லாத தனிமையை விரும்புபவரா நீங்க? ஒடனே தனுஷ்கோடிக்கு வாங்க. செல்போன் சிக்னல் கூட கிடைக்காது. இயற்கை அன்னை தன் கோபத்தை வெளிபடுத்தியதால் 1964 ஆம் ஆண்டு பேரலையால் முழுவதுமாக அழிக்கப்பட்டது. பேரலைக்கு முன்பு வரை மக்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்த கிராமம். அதிகாலையில் ஏற்பட்ட கொடூரத்தால் எத்தன பேர் இறந்தாங்கன்னு கூட கண்கிட்டு சொல்ல முடியல. ராமேஷ்வரத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் தனுஷ்கோடிக்கு வரலாம். ஆனா வர முடியாது : ) வாடகைக்கு ஜீப் பிடிச்சு தான் கடல் கரையை அடைய முடியும்..

ஊர் இருந்துச்சுங்குறதுக்கானா அடையாளம் எதுவுமே மிச்சம் இல்ல. அந்த காலத்துல கட்டுன மாதா கோயில் சுவர் மட்டும் கொஞ்சமா இருக்கு. ஒரே ஒரு பொட்டிகட இருக்கு. இப்ப மக்கள் அதிகமா வர ஆரம்பிச்சதுனால கொஞ்சமா களை கட்ட ஆரம்பிச்சாலும் மக்கள் வாழ தகுதியற்ற ஊர்ன்னு அரசாங்கம் முடிவெடுத்துட்டாங்க போல. மேம்பாட்டு பணிகள் எதுவும் செய்யப்படலங்குற ஒரே ஒரு வருத்தம் தான். ஆனாலும் இப்படி கஷ்ட்டபட்டு வரதும், பயந்துட்டே தனியா அங்கே நிக்கிறதும் நல்ல அனுபவமா அமையும்.


நந்தா பீச்
இராமநாதபுரம் டூ மண்டபம் நெடுஞ்சாலையில் பயணித்தால் இடப்புறமாக பிரியும் சாலையில் போனா பீச் வந்துடும். (குஷி பீச்ன்னு போர்ட் போட்டுருக்கும். அது வச்சு கண்டுபிடிக்கலாம். வேற யார்கிட்டையும் கேட்டுட்டு வர முடியாது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி) ஒத்தையடி பாதையில காட்டுக்குள்ள போற மாதிரி இருக்கும். 2 பக்கமும் உயர்ந்த மரங்களும் மூங்கில் மரங்களும் என பாதையில் 3 கிலோ மீட்டர் பயணித்தால் திரையை விலக்கி பார்த்தது போல கடற்கரை இருக்கும் (நெடுஞ்சாலையிலேயே வண்டியிலிருந்து இறங்கி பீச் வரைக்கும் குடும்பத்துடன் நடந்துக்கொண்டே கடற்கரையை அடைவது அலாதி பிரியம்).
யாருக்கும் இப்படியொரு கடற்கரை இருப்பதாக தெரியாது நந்தா படம் படபிடிப்பு நடத்தப்படும் வரை. அவங்க தான் வழிகாட்டி. அதனால தான் உச்சபுளி கரையோர பகுதி நந்தா பீச்ன்னு பேரு வாங்கியிருக்கு. கடல்ல அலை யேதும் வராது. ஆண்கடலாம் (அடப்பாவிகளா? பொண்ணுங்களாம் கொடுமையானவங்கன்னே முடிவு பண்ணிட்டாங்களா?) அமாவாச அன்னைக்கு ஏதோ கொஞ்சமா அலைகள் கரைய தொட்டு தொட்டு போகும். மத்த நாள்ல ஏரி மாதிரி தான். இங்கே குளிக்க கூடாதுன்னு தான் சொல்லுவாங்க. பட் அதையும் மீறி நீங்க குளிக்கலாம். உங்க நேரம் துரஷ்திஷ்ட்டமா இருந்தா ஜெல்லி மீன் கடிச்சு ஒடம்பெல்லாம் தழும்பும்,அரிப்பும் வரலாம்:(
சமீப காலமா மக்களின் வருகை அதிகரிப்பால் குறைந்த கட்டண போட்டிங் சேவை ஆரம்பிச்சுருக்காங்க. சிறுவர் பூங்காவும், ஆண்கள் பெண்கள் குழந்தைகளுக்கு தனிதனியாகநீச்சல் குளமும் அமச்சுருக்காங்க. இதுவும் தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற இடம்.

மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட பல தீவுகள் இருக்கு. அது ஆராய்ச்சி பகுதியாகவோ அல்லது ஆபத்தான பகுதியாகவோ இருக்கும். ஆனா திருட்டு தனமா போறவங்களும் இன்னும் போய்ட்டு தான் இருக்காங்க. அது தவிர வைகை ஆறும், சித்திரா பௌர்ணமி திருவிழாவும் இங்கே ரொம்ப பிரபலம். சாதி,மத வேறுபாடு இல்லாம ஏப்பேற்பாடுபட்டாவது திருவிழால கலந்துக்க வந்துடுவாங்க. பௌர்ணமி அன்று மாலையே கட்டுச்சோறு கட்டிக்கொண்டு ஆற்றில் நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் இருந்துச்சு நா சின்ன புள்ளைல. என் மகன் சின்னபுள்ளையா இருக்குறதுனால இல்ல போல. நாகரிக வளர்ச்சியால் இப்போது மறுக்கப்படும் நாளை மறக்கடிக்கப்படும் நாளை மறுநாள் அழிக்கப்படும் வழக்கத்தில் இதுவும் ஒன்று. (அவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில நிக்க இடம் கெடைக்குறதே பெருசுன்னு காரணம் சொல்லுவாங்க)

விவசாயம், மீன்பிடித்தல், நெசவு என முக்கிய தொழில்கள் கொண்ட மாவட்டம். சென்னையில் இருந்து நாளொன்றுக்கு இரு முறை ரயில் வசதி செய்துதரப்பட்டுள்ளது. காசி டூ ராமேஷ்வரம் ரயில் சேவையும் வாரம் ஒரு முறை உண்டு. இன்னும் சொல்ல நிறையா இருக்குன்னாலும் நான் போன அல்லது ரசித்த இடத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளேன் (இதையே படிக்க முடியல.சீக்கிரம் முடிச்சுடு தாயே..!!!- உங்கள் மனசாட்சி: ). இதுக்கு மேல சொல்றதுக்கும் என் கிட்ட சரக்கு இல்ல.



நன்றி:ஆமினா
குட்டி சுவர்க்கம்.blogs
Engr.Sulthan

No comments: