உடலுக்கு பலம் தரும் கைக்குத்தல் அரிசி!
பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியையே உணவிற்காக பயன்படுத்திவந்தனர். கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஸ் செய்யப்படாத அரிசியில் நார்ச்சத்தும் எண்ணற்ற வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்தும் அடங்கியுள்ளன. ஆனால் இன்றைக்கு அரிசியை பலமுறை பாலீஸ் செய்து எந்த சத்தும் இல்லாத வெறும் மாவுப்பொருளை மட்டுமே கொண்ட அரிசியை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலானது நோய்களின் கூடாரமாகிறது. பாலீஸ் செய்யப்படாத அரிசியை உணவாக உட்கொண்டால் நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
வைட்டமின் சத்துக்கள்
உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநில மக்களின் மிக முக்கிய உணவுப்பொருள் அரிசி. இது ஒரு மாவுப் பொருளாகும். பாலீஸ் செய்யப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
முற்காலத்தில் உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை. இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.
நீரிழிவு வராது
தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது. இந்த அரிசியை உண்பதால் உணவு எளிதில் சீரணமடையும். மலச்சிக்கலைப் போக்கும், சிறுநீரை நன்கு பிரிக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது. இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். பித்த அதிகரிப்பை குறைக்கும். உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும். சருமத்தைப் பாதுகாக்கும். வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்
இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.
சத்து நீக்கப்பட்ட அரிசி
தமிழ்நாட்டில் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான அரிசியையே விரும்புகிறோம். இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது. இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.
நோய்கள் அதிகரிப்பு
இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. எனவே அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்பதே ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
நன்றி:http://ping.fm/hWxyT
Engr.Sulthan
No comments:
Post a Comment