To: Kaniyur Abdulrahman
காட்சிகளாலும் கருத்துகளாலும் மக்கள் மனதில் ஊடுறுவிச்சென்று சொல்லவரும் விசயத்தை பதிய வைக்கும் சாதனங்களை ஊடகம் என்கிறோம்.பத்திரிக்கை,தொலைக்காட்சி, நாடகம்,சினிமா,இணையம் என்று இதன் வடிவம் மாறிக்கொண்டிருந்தாலும் செயல்பாடுகள் என்னவோ சிலரின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவே உள்ளது. அந்த வகையில் நவீன ஊடகங்களில் ஒன்றான சினிமா குறித்த கருத்துப்பரிமாறும் முயற்சியே இப்பதிவு.
ஒழுக்கம் உடைமை, பிறனில் விழையாமை, பயனில சொல்லாமை, கூடா ஒழுக்கம், இன்னா செய்யாமை,தீ நட்பு, கூடா நட்பு, கள்ளுண்ணாமை போன்ற திருக்குறள் அதிகாரங்களுக்கு எதிராகச் செயல்பட்டபோதிலும் அவர்களின் மானாட மயிலாட ஒயிலாட்டங்களில் மயங்கி திரைத்துறையை ஓர் தொழிலாக அங்கீகரித்து பல சலுகைகளை வழங்கி வருகிறது. குடிகெடுக்கும் மதுவையும் எயிட்ஸ் பரப்பும் சிகப்பு விளக்கு பகுதிகளையும் அங்கீகரிக்கும் அரசுகள் திரைத்துறையை அங்கீகரிப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்களும் அந்த துறையின் கரை படிந்தவர்களே!
முஸ்லிம்களால் தீண்டத்தாத ஒன்றாக திரைத்துறை உள்ளது.காரணம் சினிமாவின் உலகலாவிய செயல்பாடுகள் இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதே.இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராக மட்டுமின்றி பெரும்பாலான நாகரிக சமுதாய,சமூக கோட்பாட்டுக்கும் எதிராகவே திரைத்துறை உள்ளது. நஜீஸ் என்று நாம் ஒதுங்கினாலும்கூட தீவிரவாத,பழமைவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி உலக முஸ்லிம்களை உலகரங்கில் தவறாகச் சித்தரிப்பதில் திரைத்துறையின் பங்களிப்பும் உள்ளது.
'உன்னைப்போல் ஒருவன்' என்ற சினிமாவிலும் இப்படியே காட்டினார்கள்.அதற்குமுன்பாக வேறொரு படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகக் காட்டியதை சமுதாய அமைப்புகள் எதிர்ப்புக் காட்டினர். சமீபத்தில் வேலாயுதம் என்று, பெயரிலேயே 'வேலையும் ஆயுதத்தையும்' கொண்டுள்ள ஓர் படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள் என்றால் சினிமாக்களில் முஸ்லிம்கள் எவ்வாறு முன்னிறுத்தப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்!
சிலமாதங்களுக்குமுன் வெளியான கேரள/தமிழக மக்களை ரணகளப்படுத்தியதன் பின்னணியில் ஓர் சினிமாவும் இருந்துள்ளதை பலர் அறிந்திருப்போம்.DAM-999 என்ற திரைப்படத்தின்மூலம் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உடைவது போல் கற்பனையாகக் காட்சிகளை வடிவமைத்து இந்தியாவிலேயே அதிகம் படிப்பறிவுள்ள மக்களாகச் சொல்லும் மலையாளிகளை மூடர்களாக்கியதில் இந்த திரைப்படத்திற்கு பெரும்பங்குண்டு.முன்னதாக,மலையாள மனோரமா தொலைக்காட்சியும் இதுபோன்ற கற்பனையை செய்தியாக்கி முல்லைப் பெரியாறு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.இவையன்றி அவ்வப்போது வெளியான மலையாள படங்களிலும் முல்லைப் பெரியாறு அணையை முன்வைத்து தமிழர்களுக்கு எதிரான விஷக்கருத்தை மக்கள் மனதில் விதைத்தனர்.
அதுவரை,கேரளாவின் அச்சம் நியாயம்தானே என்பதாக நம்பிவந்தவர்களின் நிலைப்பாட்டையும் மாற்றியதற்குப் பின்னணியிலும் இன்னொரு குறும்படம் உள்ளது. அதாவது,தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் சீனியர் பொறியாளர் சங்கம் வெளியிட்ட குறும்படம் கேரளாவின் ஊடக மோசடிகளையும் புரட்டுகளையும் அம்பலப்படுத்தியதோடு, தமிழகத்தின் நியாயத்தையும் ஒலித்தது.
ஆக, பெரும்பாலான மக்களின் மனதை மாற்றும் வல்லமைகொண்ட திரைத்துறையில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும். கத்தியினால் ஆபத்து இருக்கிறது என்றாலும் எப்படி நமக்குத் தேவையானபோது கவனமாகப் பயன்படுத்துவதுபோல் மக்கள் மனதைத் துளைக்கவல்ல திரைப்படங்களையும் கவனமாக இஸ்லாமிய அறநெறி விலகாது பயன்படுத்தலாம்.
புனிதப்பள்ளிகளான கஅபாவிலும் மதீனா முனவ்வராவிலும் ஒலிபெருக்கிகளை (Microphone/Speaker) பொருத்த அதன் நிர்வாகியான சவூதி மன்னர் முடிவு செய்தபோது"ஒருபக்கம் ஒலிக்கும் குரலை மறுபக்கம் பெருக்கி அச்சம் ஏற்படுத்துவது சைத்தானின் செயல்" என்பதால் ஒலிபெருக்கிகள் ஹராம் என்று அந்நாட்டு முத்தவாக்கள் என்று சொல்லப்படும் 'மார்க்க செயல்பாட்டு கண்காணிப்பாளர்கள்' எதிர்ப்பு தெரிவித்தபோது, ஒருப்பக்கம் 'லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று ஒலிபெருக்கியில் சொன்னால் மறுபக்கம் எதிரொலிப்பது நிச்சயம் சைத்தானின் செயலல்ல.ஏனெனில்,சைத்தான் இதைச் சொல்லவே மாட்டான்! என்று அறிவுப்பூர்வமாக அன்றைய சவூதி மன்னர் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாகச் சொல்லப்பட்டது!
சினிமா குறித்த முஸ்லிம்களின் கண்ணோட்டத்தையும் நாம் இத்தகைய தர்க்க ரீதியான அறிவார்ந்த வாதங்கள் மூலம் தெளிவுபடுத்தினால் நம்மீதான பல தவறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்க அதே சினிமாவைப் பயன்படுத்தலாம். சாக்கடையைச் சுத்தப்படுத்த சாக்கடையில்தான் இறங்க வேண்டுமா? என்பதைவிட முள்ளை முள்ளால் எடுக்கும் யுக்தியாக சினிமாவையும் முஸ்லிம்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். சாடிலைட் சேனல்களில் பரஸ்பரம் வசைபாடுவதை விடுத்து முஸ்லிம்களின் சமூக,வாழ்வியல் பிரச்சினைகளை மையமாக வைத்து குறும்படங்களை,நாடகங்களை எடுத்தால் நம்மீதான மாற்றாரின் கண்ணோட்டம் மாறாவிட்டாலும் சற்று குறையும் என்று கருதுகிறேன்.
No comments:
Post a Comment