Sunday, November 25, 2012

இதுவல்ல நீதி!

By தினமணி
First Published : 22 November 2012 12:47 AM IST
"சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்' என்று சொல்வதை விடப் போலித்தனமான ஒன்று இருக்க முடியாது. பணக்காரர்கள், அரசியல் தொடர்புடையவர்கள், அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானவர்கள் ஆகியோருக்கெல்லாம் சட்டத்தின் அணுகுமுறையே வித்தியாசமானது. சராசரிக் குடிமகனிடம் தனது கடமையைச் செய்யும் சட்டம், அவர்களுக்குச் சில விதிவிலக்குகளை வழங்குவதை பல உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த இருபது நாள்களில் நடந்திருக்கும் இருவேறு நிகழ்வுகள், சட்டம் எப்படி அப்பாவிகளின் மீது மட்டுமே பாய்கிறது அல்லது ஏவி விடப்படுகிறது என்பதையும், அதே சட்டம் அரசியல்வாதிகளையும், உயர் பதவிகளில் இருப்பவர்களையும் நெருங்கவே பயப்படுகிறது என்பதையும் வெளிச்சம் போடுகிறது.
புதுவையில் சிறு தொழில் நடத்தும் ரவி என்பவர் "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பைச் சேர்ந்தவர். இவர் இணையதளத்திலுள்ள தனது "ட்விட்டர்' பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவைவிடப் பல மடங்கு சொத்து சேர்த்து விட்டிருப்பவர் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் என்று குறிப்பிட்டிருந்தார். இதுவொன்றும் புதிய குற்றச்சாட்டு அல்ல. கடந்த ஏப்ரல் மாதம் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில ஆவணங்களை இணைத்து கார்த்தி சிதம்பரத்திற்கு ஏர்செல் - மாக்சிஸ் முறைகேட்டில் தொடர்பு உண்டு என்பதுவரை குறிப்பிட்டுப் பிரதமருக்கு ஒரு கடிதமே எழுதியிருந்தார்.
சுப்பிரமணியன் சுவாமியின்மீது மானநஷ்ட வழக்குப் போடவோ, அவரைக் கைது செய்யச் சொல்லியோ கேட்க கார்த்தி சிதம்பரத்திற்குத் துணிவு இல்லை. ஆனால் பாவம், ரவி என்பவர் அவரும் நண்பர்களும் மட்டுமே பகிர்ந்துகொள்ளும் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்தவுடன் கொதித்தெழுந்து, புதுவைக் காவல்துறையிடம் புகார் கொடுக்க அவர்களும் நன்றி விசுவாசத்துடன் ரவியைக் கைது செய்திருக்கிறார்கள். தனி மனிதரைப் பற்றிய அவதூறைப் பரப்பிய குற்றத்துக்காகத் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு "66 ஏ'யின் கீழ் ரவி கைது செய்யப்பட்டு, பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
2008-இல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டப்பிரிவு செல்லுமா செல்லாதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதைத் தொடர அனுமதித்தால் இணையதளத்தில் எதுவுமே பதிவு செய்ய முடியாது, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியாது என்கிற நிலைமையல்லவா ஏற்பட்டுவிடும்? கார்த்தியின் பெற்றோர்கள் இருவரும் சட்டம் படித்தவர்களாக இருந்தும், குறைந்தபட்சம் சம்பந்தப்பட்டவருக்கு இது தொடர்பாக ஏன் வழக்குத் தொடரக்கூடாது என்று கேட்டுத் தாக்கீது அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா? ஆட்சியும் அதிகாரமும் கையிலிருக்கும் தைரியத்தில், காவல்துறையைத் தனது கைப்பாவையாக்கி ஓர் அப்பாவிக் குடிமகனைக் கைது செய்வது என்ன நியாயம்? சட்டம் அனைவருக்கும் சமமாகவா இருக்கிறது?
மும்பையில் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இறந்தது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்தியப் பிரஸ் கௌன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு தனது சமூக வலைதளத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். "நான் ஏன் தாக்கரேவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை?' என்கிற தலைப்பிலான அந்தக் கருத்துப் பதிவில், பால் தாக்கரே முன்வைத்த "மண்ணின் மைந்தர் கொள்கை' அரசியல் சட்டத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானது என்கிறார் அவர்.
அதே பிரச்னையில் ஷஹீன்ததா என்கிற 21 வயதுப் பெண், "பால் தாக்கரேயின் மரணத்துக்காக மும்பை ஸ்தம்பித்ததன் காரணம் அச்சமே தவிர அவர்மீதான மரியாதை அல்ல. இந்த நிலை நம் மீதான திணிப்பு, நமது தேர்வு அல்ல என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்' என்று தனது முகநூலில் கருத்து வெளியிடுகிறார். தனக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு என்று ரேணு சீனிவாசன் என்கிற பெண் ஆமோதித்துப் பதிவு செய்கிறார்.
சட்டப்பிரிவு 505(2)ன் கீழ் இரு தரப்பினருக்கிடையே பகையையும் வெறுப்பையும் வளர்க்கும் விதத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி மும்பை காவல்துறை ஷஹீன்ததாவையும், ரேணு சீனிவாசனையும் கைது செய்கிறது. இந்தக் கைது விவகாரம் விமர்சனத்துக்கு உள்ளானதால் அவர்கள் ரூ. 15,000 செலுத்திப் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவர்கள்மீது பாய்ந்த சட்டப் பிரிவு 505(2) ஏன் நீதிபதி மார்கண்டேய கட்ஜு மீது பாயவில்லை? இவர்கள் அப்பாவிகள் அதனால்தான் சட்டம் பாய்கிறது.
அன்றாடம் அரசியல் மேடைகளில் மிகவும் தரக்குறைவாகப் பேசும் அத்தனை பேச்சாளர்கள் மீதும் இந்தச் சட்டம் பாய வேண்டுமே, ஏன் இல்லை? தென்னிந்தியர்கள் மும்பையிலிருந்து வெளியேற வேண்டும் என்று பால் தாக்கரே பேசியபோதும், பிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்று அவரது சகோதரர் மகன் ராஜ் தாக்கரே பேசியபோதும் பாயவில்லையே ஏன்? அப்பாவிகளாக இருந்தால் ஒன்றுமில்லாத விஷயத்தைக்கூடக் குற்றமாக்கி சட்டம் தனது கடமையைச் செய்யும், அப்படித்தானே?
தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66 ஏ ஆனாலும், சட்டப்பிரிவு 505(2) ஆனாலும், அவை அரசியல் சட்ட அடிப்படை உரிமையான 19(1)(எ)வுக்கு மேலானதாக இருக்க முடியாது. ஒரு தனிமனிதனின் பேச்சுரிமையையும், கருத்து உரிமையையும் கட்டுப்படுத்த எந்தச் சட்டத்தாலும் முடியாது என்பதால்தான் அதற்கு அடிப்படை உரிமை அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.
மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லும் உரிமைக்குப் பெயர்தான் சுதந்திரம். அதைத்தான் ரவியும், ஷஹீன்ததாவும், ரேணு சீனிவாசனும் செய்தார்கள். சுப்பிரமணியன் சுவாமியும், நீதிபதி மார்கண்டேய கட்ஜு-வும் செய்தார்கள். அவர்கள் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்தான், அவரவர் பாதையில்! ஆனால், சட்டம் ஏன் சமமாக இல்லை என்பதுதான் வேதனையளிக்கிறது.
நீதியை நிலைநாட்டுவதற்காக வகுக்கப்பட்ட சட்டம் அநீதிக்குத் துணை போகிறதே, அதுவும் வேதனையளிக்கிறது!



--


ALAVUDEEN

No comments: