Tuesday, November 13, 2012

ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள்



அமெரிக்க அதிபர் ஒபாமாவின் லிமோசின் ரக கார் ஜெனரல் மோட்டார்ஸ் கீழ் செயல்படும் கேடில்லாக் நிறுவனத்திடமிருந்து கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டது. ராணுவ கவச வாகனம் போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இந்த லிமோசின் ரக காரின் தொழில்நுட்பம், பாதுகாப்பு வசதிகள் ஆகியவை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. தி பீஸ்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் அமெரிக்க அதிபரின் நடமாடும் அலுவலகமாக கூறப்படுகிறது. இந்த காரின் சிறப்பம்சங்களின் தகவல்களை காணலாம்.

போயிங் 757 விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கதவுகளுக்கு இணையான தடிமன் கொண்ட கதவுகள் இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் தகடுகள் ராணுவ கவச வாகனங்களில் பயன்படுத்தப்படும் 8 இஞ்ச் தடிமன் கொண்ட உறுதியான தகடுகளால் மூடப்பட்டிருக்கும்.

காரின் கீழ்ப்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தடிமன் கொண்ட தகடுகள் கண்ணி வெடி தாக்குதல்களில் கூட சேதமடையாது. இதன் பெட்ரோல் டேங்க்கும் ஏவுகணை தாக்குதலில் கூட தீப்பிடிக்காது. குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. டிரைவர் இருக்கையின் கீழே தற்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
அதிபர் ஒபாமா உள்பட 7 பேர் இந்த காரில் பயணம் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. முன்பக்க டிரைவர் வரிசை இருக்கையில் 2 பேர் அமரலாம். கண்ணாடி தடுப்புடன் கூடிய பின்புற கேபினில் பின்னோக்கி 3 இருக்கைகளும், முன்னோக்கி 2 இருக்கைகளும் உள்ளது. இதில், முன்னோக்கி பொருத்த்பபட்டிருக்கும் இரண்டு இருக்கைகளில் ஒன்று அதிபருக்கான ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கை.

இரு இருக்கைகளுக்கு இடையில் மடக்கி விரிக்கும் வசதிகொண்ட டேபிள் உள்ளது. இதில், லேப்டாப், தொலைபேசி ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். காரின் இருக்கைகள் அனைத்தும் உயர்தர லெதர் மூலம் கைவேலைப்பாடுகளோடு மிக சொகுசாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இது அதிபரின் நடமாடும் அலுவலகம் என்பதால் இன்டர்நெட் இணைப்பு, செயற்கைகோள் தொலைபேசி மற்றும் அவசர காலங்களில் ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் துணை ஜனாதிபதியுடன் உடனடியாக பேசும் வகையில் தொலைபேசியும் இருக்கிறது.










அதிபர் ஒபாமாவின் அதிகாரப்பூர்வமான இந்த காரின் டிரைவர் அமெரிக்க புலனாய்வு பிரிவான சிஐஏ., அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டவர். எத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளிலும் காரை வேகமாகவும், சாதுர்யமாகவும் ஓட்டுவதற்கு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
காரின் அனைத்து பக்கங்களிலும் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் வாய்ந்த நைட் விஷன் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த காரி்ல் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதால், கார் எந்த பகுதியில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை செயற்கைகோள் உதவியுடன் கண்காணிக்க முடியும்.
அதிபர் ஒபாமா உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும்போது, அமெரிக்க வான்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தின் மூலம் இந்த கார் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, அந்த விமானத்தில் சிறப்பு வசதிகளும் இருக்கிறது.

கண்ணீர் புகை குண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள், தீத்தடுப்பு கருவி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு பாதுகாப்பு சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. நச்சுப் புகை மற்றும் ரசாயன தாக்குதல்களை சமாளிக்கும் வகையில், உட்புறத்தில் காற்றை சுத்திகரித்து வெளியில் அனுப்பும் விஷேச கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், பஞ்சரானால் கூட காரை வேகமாக ஓட்டிச் செல்ல முடியும். இந்த கார் 5 டன் எடை கொண்டது. 100 கிமீ செல்வதற்கு 30 லிட்டர் வரை எரிபொருளை உறிஞ்சித் தள்ளும். மேலும், அமெரிக்க போக்குவரத்து துறையின் சுற்றுச் சூழல் மாசுபாடு விதிகளிலிருந்து இந்த காருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் அதிபர் ஒபாமா இந்த காரில் செல்லும்போது அமெரிக்க கொடியும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் செய்யும்போது காரில் ஒரு பக்கத்தில் அமெரிக்க கொடியும், மறுபக்கத்தில் சுற்றுப் பயணம் சென்றுள்ள நாட்டு கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும்.



--


ALAVUDEEN

No comments: