கனியிருப்பக் காய் கவர்வது ஏன்?
By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
First Published : 06 November 2012 02:25 AM IST
உலகுக்கு ஒளி போல், உடம்புக்கு உயிர் போல், பயிருக்கு மழை போல், வாழ்க்கைக்கு நாம் பேசும் வார்த்தைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
அன்பு, அரவணைப்பு, ஆதரவு என்கிற வார்த்தைகள் பலரது வாழ்வில் மிக ஆச்சரியமான எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தி வாழ்க்கைப் பாதையையே மாற்றியுள்ளன. அதே சமயத்தில், வெறுப்பு, வன்மம், காழ்ப்புணர்ச்சி காட்டும் வார்த்தைகள் பலரது வாழ்க்கையில் வன்முறையைத் தூண்டி வாழ்க்கையை அதல பாதாளத்தில் தள்ளி உள்ளன.
"மன்னியுங்கள்', "பரவாயில்லை', "தயவுசெய்து', "நன்றி', "வருக', "நான் உங்களுக்கு உதவலாமா?' போன்ற வார்த்தைகள் நம் அன்றாட வாழ்வில் பல அற்புதங்களைச் செய்யும்.
கொடூரமான, மரியாதையற்ற, மூர்க்கத்தனமாக வார்த்தைகளைப் பயன்படுத்துவதை எப்போதும் தவிர்க்க வேண்டும். அத்தகைய வார்த்தைகள் வயிற்றெரிச்சலையும், இதய எரிச்சலையும், பொறாமையையும் தூண்டும்.
வார்த்தைகளைப் பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள், நாம் பேசும் சொற்கள் மூலம் மற்றவர்களைக் காயப்படுத்தினால், அவர்கள் நம் மீது கொண்டுள்ள இணக்கமான உறவு பாதிப்படையும், அதனால் அவர்கள் நம் மீது கொண்டுள்ள நன்மதிப்பும், நல்லுறவும் அற்றுப்போகும். அந்த உறவு மீணடும் புதுப்பிக்கப்பட்டாலும், அது மெல்லிய நூலில் எப்போதோ போடப்பட்ட முடிச்சுச்போல மனதை வருடிக் கொண்டேயிருக்கும்.
வார்த்தைகள் ஆயுதங்களை விடக் கூர்மையானவை. சரியாகப் பயன்படுத்தினால் வெல்வது நிச்சயம். தவறாகிவிட்டதெனில் வீழ்வது உறுதி.
கவலையற்ற, அஜாக்கிரதையான வார்த்தைகள் நம் இதயத்தைக் குத்தும். ஆனால், சான்றோர்களின் அறிவுள்ள நாக்கோ அதை குணப்படுத்தும்.
நம்மில் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள். ஒருவர் பேசுவதற்கு முன்பு யோசிப்பார், இன்னொருவர் பேசும்போது யோசித்துப் பேசுவார், மற்றொருவர் பேசியபின் யோசித்து வருந்துவார்.
வதந்திகளைப் பரப்புவதும், பிறரைப் பற்றி குறை கூறுவதும் நம்மை திசைதிருப்பி நம் சக்தியை வீணாக்கும் கருவிகளாகும். நாம் பேசும் வார்த்தைகள் சூழ்நிலையைப்பற்றி விவரிக்காமல், சூழ்நிலையையே மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்ததாக அமைய வேண்டும்.
நாம் பேசும்போது எதிரில் கடவுள் இருப்பதைப்போல் எண்ணிப் பேச வேண்டும். அந்த வார்த்தைகள் பிறரை வாழ்த்துவதாக அமைய வேண்டுமேயொழிய, சபிப்பதாக அமையக் கூடாது. ஏனெனில், வார்த்தைகள் "பூமராங்' போன்று நம்மையே திருப்பித் தாக்கும் சக்தி வாய்ந்தவை.
அரண்மனையில் கண்ணாடியால் செய்யப்பட்ட பளிங்குத் தரையை, தண்ணீர் என்று நினைத்து மெதுவாக கால் வைத்து வழுக்கி கீழே விழுந்த துரியோதனனைப் பார்த்து திரெüபதி, ""குருடன் மகன் குருடனாகத்தானே இருப்பான்'' என்று சொல்லி நகைத்து பரிகாசத்துடன் அலட்சியமாகச் சிரித்ததுதான் மகாபாரதப் போருக்கு வித்திட்டது. அதனால் தான் சான்றோர் "தீமையை எதிர்த்து நில்லேல்' என்கிறார்கள்.
ஒரு காட்டில் தவளைகள் குழுவாக பலதையும் பேசி நடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது இரண்டு தவளைகள் ஆழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்து விட்டன. மற்ற தவளைகள் அந்த பாழுங்கிணற்றை எட்டிப் பார்த்து, பயந்தன. "எவ்வளவு ஆழமான கிணறு, நம் நண்பர்கள் மேலே வருவதே கடினம்' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டன. பின்னர், கீழே விழுந்த இரு தவளைகளைப் பார்த்து, ""நீங்கள் காயப்பட்டு மேலே வருவதைவிட இறப்பதே மேல்'' என்று மேலிருந்து கத்தின. ஆனால், அந்த இரண்டு தவளைகளும் அவைகளின் பேச்சைக் கேட்காமல், தங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி மேலே வர முயற்சித்தன. மீண்டும் மேலே இருந்த தவளைகள், ""நீங்கள் மேலே வர வேண்டாம், உங்கள் உடம்பில் காயங்கள் அதிகமாக இருப்பதால், நீங்கள் மேலே வந்தாலும் பிழைப்பது கடினம், பறவைகளுக்குத் தான் இரையாவீர்கள்'' என கத்தின. இதைக் கேட்ட ஒரு தவளை பயந்து கீழே விழுந்து இறந்தது. மற்றொரு தவளை, தன்னால் முடிந்த அனைத்து சக்தியையும் பயன்படுத்தி மீண்டும் மேல வர முயற்சித்தது. அப்போதும், மேலே உள்ள தவளைகள் கர்ணகடூரக் குரலால் கத்தின. ""மேலே வரவேண்டாம், நீ பிழைப்பது கடினம், இறந்து விடுவதே நல்லது'' என முழங்கின. ஆனாலும், அத் தவளை ஒரே தாவாகத் தாவி மேலே வந்து அனைத்துத் தவளைகளையும் பார்த்து சிரித்தது. அப்போது மற்ற தவளைகள், ""நீ எப்படி மேலே வந்தாய்?'' என்று கேட்டன.
அதற்கு அந்தத் தவளை, ""எனக்குக் காது கேட்காது; நீங்கள் மேலிருந்து கத்தின உற்சாக வார்த்தைகளே என்ன மேலே வரத் தூண்டின. அதனால்தான் என்னால் மேலே வர முடிந்தது'' என்றது.
பார்வையற்றவர்களிடம் பேசும்போது உண்மையாகவே பார்வையற்றவர்போல் பேச வேண்டும். நோயுற்றவர்களிடம், நாமும் நோயுற்றவர்களாகித் தன்மையுடன் பேச வேண்டும். அவர்கள் மனதைப் பாதிக்காத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.
பதினான்கு ஆண்டுகள் காட்டில் வனவாசம் அனுபவித்து விட்டு அயோத்தி நகரம் திரும்பிய ராமனைக் கண்டு கைகேயியும், மந்தரையும் (கூனி) பயந்தார்கள். ராமன் நம்மைக் கொன்று விடுவானோ, காட்டிற்கு அனுப்பி விடுவானோ என்றுகூட அச்சமுற்றார்கள். அவர்களது எண்ணவோட்டங்களை அறிந்த ராமன் அயோத்தி மாநகருக்குள் நுழைந்ததும் முதல் மரியாதையை கைகேயிக்கு அளித்து வணங்கினான். பின்னர் தான் தன் தாயான கெüசல்யாவைக் கண்டு வணங்கி நின்றான். பிறகு மந்தரையிடம் சென்று அவளை அணைத்து ஆதரவான, அன்பான, வார்த்தைகளைக் கூறி ஆறுதல்படுத்தி, முன்பிருந்ததைப் போலத் தொடர்ந்து அயோத்தி அரண்மனையிலேயே வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
நாம் பேசும் பேச்சுகள் மற்றவர்களின் துயரைப் போக்குவதாக அமைய வேண்டும். அவை பதறிய உள்ளங்களைச் சாந்தப்படுத்த வேண்டும். பின்னர் அதுவே நம் மனங்களைக் குளிர்ச்சியடையச் செய்து எண்ணத்தைத் தூய்மையாக்கி நல்வழி காட்டும். உள்ளத்தில் ஒளி உண்டானால் வாழ்க்கையில் இனிமை உண்டாகும்.
No comments:
Post a Comment