துப்பாக்கி படக்குழுவினர் முஸ்லிம்களிடம் பகிங்கர மன்னிப்பு-
அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒற்றுமையுடன் போராடியதால் கிடைத்த வெற்றி..
சமீபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தின் கதையும் காட்சிகளும், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விதத்தில் அமைந்ததை அறிந்து, தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் கொதித்தனர். இதன் காரணமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என விவாதித்த சமுதாயத் தலைவர்கள், முதலில் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதத்தில் படக்குழுவினரை தொடர்பு கொண்டு, திரைப்படத்தைப் பார்ப்ப
தற்கு சிறப்பு ஏற்பாட்டை செய்ய வேண்டினர். இதன் அடிப்படையில் நேற்று (14-11-2012) எஸ்.டி.பி.ஐ உட்பட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் 20 பேர் துப்பாக்கி திரைப்படத்தை பார்த்தனர்.
இதன் அடிப்படையில் இதுபற்றி மேல் நடவடிக்கைகளுக்காக இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு இன்று சென்னையில் கூடியது. இக்கூட்டத்தில் திரைப்படத்தின் கதை, காட்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் ஏக மனதாக கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த குறிப்பிட்ட தவறான காட்சிகளை முழுமையாக நீக்க வேண்டும்.
2. படக்குழுவினர் நடந்த இந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் படக்குழுவினர் ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து அமைப்புகளும் இத்திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளை முற்றுகையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவை திரைப்படக் குழுவினரிடம் பேச்சுவார்த்தையின் மூலம் தெரிவிப்பதற்கு 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனிபா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி. அப்துல் ஹமீது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பக்ருதீன், ஆகியோரை உள்ளடக்கிய இக்குழு இன்று மாலை துப்பாக்கி படக்குழுவினரான இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகரன், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் துப்பாக்கி திரைப்படத்தை எதிர்ப்பதற்கான காரணங்களையும், அத்தகைய காட்சிகளையும் தெளிவாக தலைவர்கள் விளக்கினர். இதன் உண்மைத் தன்மையையும், எதார்த்தத்தையும் உணர்ந்து கொண்ட படக்குழுவினர் மேற்கண்ட இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டனர். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குப்பின் பத்திரிக்கையாளர்களை அந்த இடத்திலேயே சந்தித்த படக்குழுவினர் நடந்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டனர். அதோடு தவறான அந்த காட்சிகளை தாங்கள் நீக்கப் போவதாக அறிவித்தனர். அத்தோடு முஸ்லிம்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லுகிற படங்களை தாங்கள் தயாரிக்கப்போவதாகவும் அறிவித்தனர். வரும் காலத்தில் முஸ்லிம்களின் தோழனாக விஜய் நடிப்பார் என அவரது தந்தை அறிவித்தார். இதன் மூலம் கடந்த நான்கு நாட்களாக துப்பாக்கி திரைப்படத்தைப் பற்றி நடந்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இதுவரை முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துக்களை விஜயகாந்த், அர்ஜுன் போன்றவர்கள் நடித்த, மணிரத்னம் போன்றவர்கள் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் எதிர்ப்பு ஒற்றுமையுடன் வெளிப்படாததால் எதிர்ப்பின் பலனை முஸ்லிம்கள் பெறவில்லை. இப்போது ஓரணியில் நின்று ஒற்றுமையுடன் போராடியதால் முஸ்லிம்களின் நிபந்தனைகளை ஏற்கவேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது முஸ்லிம்கள் கற்க வேண்டிய முக்கிய பாடமாகும்.
இதன் மூலம் வரும் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் தங்களது திரைப்படத்தில் இடம்பெற்றால் ஏற்படும் சூழ்நிலைகளை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் முஸ்லிம்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் இனிமேலாவது வராது என்று எதிர்பார்ப்போம்.
வாழ்க முஸ்லிம்களின் ஒற்றுமை! வெல்வோம் நமது உரிமைகளை!!
__._,_.___
No comments:
Post a Comment