Wednesday, November 14, 2012

அஸ்ஸலாமு அலைக்கும்.
சாட்டையை சுழட்டுவது எளிது. அது ஏற்படுத்தும் காயங்களை ஆற்றுவது அரிது.

யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நமது ஜீவிதம், நமது குடும்பம், நமது பிள்ளைகள், நமது எதிர்காலம் என்று சுயநல வாழ்க்கை வாழும் அந்த விவரமானவர்களின் மேல் இந்த சாட்டை சுழலாதது துரதிர்ஷ்டம் தான்.

சமூகம், பொதுநலன் என்று சொல்லிக்கொண்டு தான் கொண்ட கொள்கைக்காக சுயம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு ஏதாவது ஒரு சமூக பணியை செய்துக் கொண்டிருப்பவர்களை நோக்கி தான் இந்த மாதிரியான சாட்டைகள் பதம் பார்க்கும்.

இதனால் தான் பொது நல சேவைகளில் ஈடுபட்டு, உடலிலும் மனதிலும் அடிபட்டு, காயப்பட்டு ’போதுமடா சாமி’ என்று புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் ஏராளம்.

யார் செய்தாலும் சரி, எந்த பேனரில் செய்தாலும் சரி, எத்தனை இயக்கங்களின் பெயரில் செய்தாலும் சரி, ஆம்புலன்ஸ் சேவை, கல்வி உதவி, மருத்துவ உதவி, பித்ரா அரிசி மற்றும் குர்பானி இறைச்சி வினியோகம் என எதை செய்தாலும் சரி, இரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ செய்தாலும் சரி, ஒரு மனிதநேயன், சமூக நலம் நாடுபவன் என்ற முறையில் அதனை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.ஏனெனில் இங்கே பயனடைவது ஏழை பயனாளிகள்.

ஆற்றல் மிக்கவர்களும், அபரிதமான ஆளுமை திறன் படைத்தவர்களும் தான் ஒவ்வொரு இயக்கத்தையும் வழிநடத்துகிறார்கள். நன்மையான காரியங்களில், பெயருக்காக, புகழுக்காக, இவர்களிடையே ஏற்படும் போட்டிகள் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையுமானால் பாராட்டப்பட வேண்டியதுதான்.

பெயருக்கான, பொன்னுக்கான, பொருளுக்கான மற்றும் புகழுக்கான மனிதனின் ஆசைதான் இன்று உலகம் இயங்குவதற்கான பெருங்காரணிகளாக இருக்கிறது. பெரும் நாடுகளும், திட்டங்களும், கட்டுமானங்களும், கண்டுபிடிப்புகளும், சாதனைகளும், பெரிய உற்பத்தி மற்றும் வியாபார சாம்ராஜ்யங்களும் உருவாகுவதற்கு உந்துகோலாக அமைகிறது. அரசு ஓய்வூதியத்தை பொருந்திக் கொண்டு, மிகச் சிறிய அளவில் சமூக சேவை செய்து கொண்டு ஆசையற்று வாழும் என்னைவிட, பொருளீட்டி முன்னேறும் ஆசையில் பல வியாபரங்களை நிர்வகித்து பல குடும்பங்கள் வாழ்வதற்கு உதவும் எனது மூத்த சகோதரர் மேலானவராக எனக்கு தெரிகிறார்.

ஒரு தனி மனிதன் செய்யும் உதவிக்கும், ஒரு பைத்துல்மால் செய்யும் உதவிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தனி மனிதன் தான் செய்யும் உதவிக்கு யாருக்கும் கணக்கு கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் ஒரு இயக்கமோ அல்லது அறக்கட்டளையோ உதவிகள் செய்யும் போது, உதவி கொடுப்பதற்காக சில ஆவணங்களை கேட்க வேண்டியதிருக்கிறது. கொடுத்த உதவிகளுக்கான ஆதாரங்களையும், சாட்சிகளையும் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதுவும் அரசில் பதிவு செய்யப்பட்டு, வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு இன்னும் சிரமம். இதில் தன்மானம், கௌரவம், கண்ணியம் என்றெல்லாம் என்றெல்லாம் குழப்ப வேண்டிய அவசியம் இல்லை.

அனஸாரிகள் உதவியது தனி மனிதர்களாக. நமது படிப்பினைக்காக அந்த செய்திகள் நம் வரையில் அடைந்திருக்கிறது என்றால் அதுவும் ஆவணங்களாகி இருக்கிறது. மதீனாவில் இஸ்லாமிய அரசின் ’பைத்துல் மால்’ பொது நிதியில் இருந்தான வினியோகம் இரகசியமாக நடந்திருந்தால், உதவிகள் பெற்றவர்கள் சம்பந்தமான பல செய்திகள் நமக்கு கிடைத்திருக்காது.

எல்லாவற்றிற்கும் மேலாக, கருணையாளன் அல்லாஹ், நன்மைகளை, தர்மங்களை, உதவிகளை பகிரங்கமாக செய்ய அவனது இறுதி வேதம் அல் குர்ஆனின் 2:271, 2:274, 4:149, 13:22, 14:31 வசனங்கள் மூலம் நமக்கு அனுமதி அளித்திருக்கிறான்.

ஆக, ஒரு நன்மையையும் செய்யாதவர்களை விட, நன்மையான ஏதோ ஒன்றை செய்கிறவர்கள் மேலானவர்களே.

அவர்கள் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் அறிவான். அப்படியே அவர்கள் உள்ளத்தில் பிழை இருந்தாலும் அல்லாஹ் அதை மன்னித்து, அவர்களுக்கு ஈருலகிலும் நற்கூலிகளை கொடுக்கட்டும்.

எவரையும் நோகடிக்க இதனை எழுதவில்லை. நன்மை நாட போய் நான் பட்ட சாட்டையடிகளே இதை எழுத தூண்டியது.

சகோதரர். அப்துல் அஸீஸ் அவர்களும், சமரசமும், சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களும் இதனை நேர்மறையாக எடுத்துக் கொள்வாரகள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக.

நன்றி மற்றும் பிரார்த்தனையுடன்,
ஜி.மலுக்கு முஹம்மது,
(பிரிவு பொறியாளர் (ஓய்வு), தென்னக ரயில்வே.)


2012/11/8 abdul rahuman
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சொத்தில் மட்டுமல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியுடையோர் கூடுதலான மனைவியரைத் தலாக்விட்டு, எதுமில்லாமல் வந்த சகோதரர்களுக்கு வழங்கி உண்மையான சகோதரத்துவத்தை உலகுக்குப் பாடமாக விட்டுச்சென்றுள்ள உன்னத இஸ்லாமிய மார்க்கத்தினரின் உயர்ந்த வழியில் வாழும் இன்றைய முஸ்லிம்கள், தமது கொள்கை சகோதரர்களுக்குக்கூட செய்யும் சாதாரண பொருளுதவிகளையும் மேடை போட்டு விளம்பரப்படுத்தி அடித்துக்கொள்ளும் கூத்துகளுக்கு எல்லையில்லாமல் போய்விட்ட காலத்தில் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்குக் கவுரவத்தையும் மேன்மையையும் வழங்குகிறது. ஆனால், அந்தக் கவுரவத்தையும் மேன்மையையும் மற்றொரு முஸ்லிமே பறிக்கும் வகையில்தான் இன்றைய முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலை மாறவேண்டும். தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும்வரை ஒருவர் உண்மையான முஸ்லிமாக முடியாது என்பதை மனதில் நிலைநிறுத்தினால், செய்யும் உதவிகளை விளம்பரம் செய்வது உதவி பெறும் சகோதரருக்கு எத்தகைய கவுரவ இழிவு என்பது தெள்ளென விளங்கும்.

இதனைச் சுட்டி சமரசம் இதழில் எழுதப்பட்டுள்ள நல்லதொரு கட்டுரை இங்கே:

No comments: