சுகப் பிரசவம்
இரண்டு மாத உழைப்பு. பலமுறை திருத்தங்கள்…திருத்தங்கள்…அச்சகத்தில் பழியாய் கிடந்து ஒரு வழியாக சுகப் பிரசவம் நடந்து விட்டது. ஒரு நூல் வெளியிடுவதும் குழந்தை பெற்றெடுப்பதும் ஒரு வகையில் ஒன்றே. அந்த அடிப்படையில் எனது முதல் (குழந்தை) நூலான அருள் பொழியும் ரமலான் நல்லபடியாக வெளி வந்து விட்டது. சிற்சில குறைபாடுகள்…அச்சகத் தவறுகள். எப்படியிருப்பினும் என் குழந்தை என் குழந்தை தானே! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான். அந்த வகையில் மகிழ்ச்சி. பெண்கள் முதல் குழந்தையை பெற்றெடுப்பதில் படும் சிரமங்கள்,கஷ்டங்கள் அனைத்தையும் இம் முதல் நூல் வெளியிடுவதில் நான் அனுபவித்து விட்டேன். இந்த சுகமான அனுபவங்கள் அடுத்த நூல் வெளியிடுவதற்கு நிச்சயம் எனக்கு கை கொடுக்கும் என நம்புகிறேன்.
அடுத்த நூல் வேலை பாதியில் நிற்கிறது.. எங்கள் ஊரைப் பற்றிய (நம்மவூர் குலசை) வரலாற்று நூல். அந்த வேலையை துவங்க வேண்டும். இந்த விசயத்தில் குடும்ப கட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது இளைய நிலா பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு இதுவாகத் தானிருக்கும்(இறைவன் நாடினால்) தொடர்ந்து எம் பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளிவரும்.
இந்த நூல் அச்சினில் இருக்கும் போதே எனது அன்பான வேண்டுகோளை ஏற்று நம் வெளி நாட்டு வாழ் சகோதரர்களும், உள் நாட்டு சகோதரர்களும் ஏறத்தாழ 600 புத்தகங்கள் வரை ஆர்டர் செய்திருந்தனர். அந்த நல் இதயங்களுக்கு என் பணிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் இன்று கூட திருப்பூரைச் சேர்ந்த நண்பர் சுரேஷ் குமார் என்ற இளைஞர், என் வீட்டுக்கே வந்து தனக்காகவும், தன் நண்பர்களுக்காகவும் என 10 புத்தகங்களை வாங்கி சென்றது நெஞ்சை நெகிழ வைக்கிறது.அவருக்கு எனது அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.இன்னும் காலம் கடந்து விட வில்லை. மேலும் தேவையுள்ளோர் உடனடியாக என்னை தொடர்பு கொண்டால் எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்பி விடுகிறேன்.கடந்த இரு நாட்களாக வெளியூர் ஆர்டர்கள் அனைத்தையும் அனுப்பி விட்டேன். ஆக தமிழகம் முழுதும் பரவலாக இந் நூல் சென்றடைந்திருப்பதை எண்ணி மகிழ்வாக இருக்கிறது.
இந்நூலுக்கான செலவுகள் அனைத்தும் என்னுடையது. இதன் மூலம் வரும் வருமானம் அனைத்தும் ஏழை மாணவர்,மாணவிகளின் கல்வி செலவுக்காக மட்டும் செலவிட என்ணியுள்ளேன். ஆரம்ப காலங்களில், நான் படிப்பதற்காக பட்ட கஷ்டங்கள் இன்றும் என் நெஞ்சினில் நிழலாடுகின்றன. என்னைப் போன்று இனியும் பலர் சிரமப் படக் கூடாது என்பதற்காகத் தான் என்னால் இயன்ற சிறு உதவியிது.
தொடர்ந்து ஆதரவு தந்து வரும் அனைத்து சகோதரர்களுக்கும் மீண்டும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!!
Engr.Sulthan
__._,_.___
No comments:
Post a Comment