Monday, August 6, 2012

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல் புகாரி : 1903.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றிருக்கும் போது இஸ்லாம் தடுத்த தீய காரியங்களில் அறவே ஈடுபடக் கூடாது, இஸ்லாம் ஏவிய நற்காரியங்களில் இயன்றவரை ஈடுபட வேண்டும்.

ரமலான் மாதத்தில் பொய் பேசுவதிலிருந்தும் பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்தும் யார் தன்னை தடுத்துக்கொள்ள வில்லையோ அவருடைய நோன்பு மறுமையில் ஜீரோவாக இருக்கும் என்பதையே மேற்காணும் நபிமொழி விளக்குகிறது.

இயைறச்சத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் தான் மனித சமுதாயத்திற்கு நோன்பு கடமையாக்கப்பட்டது ரமலானில் பொய் பேசுவதையும் பொய்யான (தீய) செயல்களையும் தடுத்துக்கொள்ள வில்லை என்றால் அல்லாஹ்வுடைய நோக்கம் ரமலானில் நிறைவேற்றப்படவில்லை என்று அர்த்தம்..

அல்லாஹ்வுடைய நோக்கம் ரமலானில் மாற்றப்படுகின்றக் காரணத்தால் அந்த நோன்பு ( உணவையும், பாணத்தையும் மட்டும் விட்டு விடுகின்ற நோன்பு ) அல்லாஹ்வுக்கு தேவை இல்லை என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதால் தேவை இல்லாத ஒன்றுக்கு சன்மானம் வழங்கப்படாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு நிறுவனத்தை நடத்தக் கூடியவர் தனது பணியாளரிடம் ஒரு காரியத்தை செய்ய உத்தரவிடுகிறார் பணியாளரோ முதலாளியின் உத்தரவுக்கு மாற்றமாக தனக்கு இலகுவான காரியத்தை செய்து விடுகிறார் இதனால் முதலாளி சந்தோஷப்படுவாரா ? வெறுப்படைவாரா ? கண்டிப்பாக வெறப்படைவார்.

வெறுப்படைந்த முதலாளி இதற்கு குறைந்த பட்சம் சில நாட்களுக்கான சம்பளத்தை வெட்டுவார், அல்லது வேலையை விட்டேத் தூக்குவார் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம்..

முதலாளியின் நோக்கத்தை நிறைவேற்றாத காரணத்தினால் கூலியும் கிடைக்காததுடன் சிலநேரம் வேலையை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

சாதாரண மனிதர்களாகிய நாமே இப்படி என்றால் ? முழு பிரபஞ்சத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற படைப்பாளன் அல்லாஹ் இடுகின்ற கட்டளைக்கு மாற்றமாக அவனது அடியார்கள் செய்தால் சந்தோஷப் படுவானா ? வெறுப்படைவானா ? வெறுப்படைந்தால் கூலி கொடுப்பானா ? சிந்தித்துப் பாரக்க கடமைப் பட்டுள்ளோம்.

இதனால் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமலானில் எண்ணங்களுக்கேற்ப எழுப்பப்படுவார்கள் என்று கூறினார்கள்.

ரமளானில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) கூறினார். புகாரி 1901

அருள்வளம் மிக்க ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழங்கப்படுகின்ற அபரிமிதமான நற்கூலிகளை அடைந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் நோன்பு நோற்றோம் என்றால்

வழமையாகப் பேசுகின்ற பொய்யையும்,
வழமையாக வியாபாரத்தில் செய்யும் கலப்படத்தையும், நிருவையில் செய்யும் மோசடியையும்,
சக மனிதர்களுக்கு செய்யும் துரோகத்தையும்,
உள்ளத்தைக் கெடுத்து சிந்தனையை சீர் குலைக்கும் கேளிக்கைகளில் ஈடுபடுவதையும்,
இஸ்லாம் தடை செய்த இன்னும் பிற தீமைகளையும் தடுத்துக் கொள்ள வேண்டும்.

தடுத்துக் கொண்டால் ரமலானில் இறையச்சத்தை ஏற்படுத்தும் ஏகஇறைவனின் நோக்கம் நிறைவேறியதாக கருதப்படும் இதன் மூலம் அல்லாஹ்விடமிருந்து கணக்கின்றி நற்கூலிகளை அறுவடை செய்து கொள்ளலாம்.

மீறினால் அவருடைய நோன்பு மறுமையில் ஜீரோவாக இருக்கும் நிலை ஏற்படலாம் அதிலிருந்தும் கருணையாளனும், கொடையாளனுமாகிய வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள வேண்டும்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

No comments: