Thursday, August 2, 2012

பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

பெங்களூர் மாநகரம்.

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்".

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார்.

2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்".

பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".

3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான்.

முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார்.

மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது.

இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எப்படியிருக்கும்?

சென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன? இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது.

இந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது "சலாம் சென்டர்" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு.

ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம்.



ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன.

சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான்.

நிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.



ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள்.

"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர்.

இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள்.

ஒலிம்பிக்ஸ் 2012:

ஆஹா..வந்துவிட்டார்கள் IERA (இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம்).

பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்ற அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை.

இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு.

மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன் ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)


நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது...

IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA.

எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர்.


பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல்

"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி.


IERA குழுவினர்

உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம்.

நீங்கள் முஸ்லிமல்லாதவரா? இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள விருப்பமா? நீங்கள் இஸ்லாமை அறிந்துக்கொள்ள விரும்பும் இந்த முடிவு உங்கள் வாழ்வில் மாற்றத்தை, புத்துணர்ச்சியை கொண்டுவரலாம். aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இஸ்லாமின் மூலமான குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பு மற்றும் இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை மின்னூல் வடிவமைப்பில் பெற்றுக்கொள்ளுங்கள்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவேனே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Auto Drivers Now Turn ‘Divine Couriers’ - karnataka muslims. link
2. Is life just a game - IERA. link
--
நம் குழுமம் குறித்து : http://ping.fm/jlgRN

இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.



--


ALAVUDEEN



* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.
__._,_.___

No comments: