இடிச்சத்தம் ஏதுமில்லாமல் பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை தரக்கூடியது தங்கள் பிள்ளைகளின் காதல். வகைவகையான காதல் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை வீணடிக்கிறது. பருவ வயதில் தோன்றும் மின்சாரக் காதல், நரம்பு நுனிகளில் வெடித்து மலரும் உணர்ச்சிக் காதல், விழித்துக் கொண்டே கனவு காண்கிற கற்பனைக் காதல், தனக் குள்ளேயே பேசிக்கொள்கிற பைத்தியக் காதல், இணையதளத்தில் சிக்கிய இமெயில் காதல், பேசிப் பேசியே கழிக்கிற செல்போன் காதல்’ என்று காதலில் பல ரகம்.
எது காதல் என்று தெரியாமலேயே அதன் மாய வலைக்குள் இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஒரு சில திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இளைஞர்களை திசை மாறிப் போகச் செய்கின்றன. சினிமா நாயகனாக தன்னைப் பாவித்து இளைஞன் காதல் கடிதம் எழுதுகிறான். காதல் குறுஞ்செய்தி அனுப்புகிறான். துரத்தித் துரத்தி காதலிக்கிறான். படிப்பை மறந்து ஊர் சுற்றுகிறான்.
கல்லூரி மாணவன் ஒருவனைச் சந்தித்தேன். முழங்கைக்குக் கீழ் புள்ளிபுள்ளியாய் தீப்புண்கள். விசாரித்ததில் தெரிந்த உண்மை மிகுந்த வேதனை அளித்தது. அது அவன் காதலியின் பெயராம். அவள் பெயரை தன் கையில் சிகரெட் நெருப்பு கொண்டு பச்சை குத்துவது போல் பதித்து இருக்கிறான்.
பாறையில் எழுதுவது, மரத்தில் எழுதுவது, இரத்தம் கொண்டு எழுதுவது, பச்சை குத்திக் கொள்வது போன்ற எல்லாம் போய் நெருப்பைக் கொண்டு எழுதியிருக்கிறானே என்பதை அறிந்த போது ‘நெஞ்சு பொறுக்கு தில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்’ என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
சில இளைஞர்கள் திடீரென்று தாடி வளர்த்துக் கொண்டு, சிகரெட் புகைத்துக் கொண்டு சரியாக சாப்பிடாமல், சரியாக உடை உடுத்தாமல், வேதாந்தம் பேசத் தொடங்குவர். கேட்டால் ‘காதல் தோல்வி’ என்று கூறுவர். தான் கொண்டுள்ளது காதல்தானா என்று கூட சரியாகத் தெரியாத நிலையில் ஒரு பெண் எப்போதோ ஏதோ இரண்டு வார்த்தைகள் பேசியதை வைத்துக் கொண்டு அவள் தன்னைத்தான் விரும்புகிறாள் என்றும், இவன் இருக்கும் திசை பக்கம் பார்த்தாலே தன்னைத் தான் பார்க்கிறாள் என்றும் தவறாக எண்ணிக் கொண்டு காதல் மயக்கத்தில் கிடப்பர்.
மேலும், நண்பர்களிடம் இதைப் பற்றி இட்டுக்கட்டி பேசுவது, தனிமையில் அமர்ந்து அந்தப் பெண்ணையும், அவள் பேசிய வார்த்தைகளையும் மனதிற்குள் மீண்டும் மீண்டும் ‘ரீ பிளே’ செய்து பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. தப்பித் தவறி அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி விட்டால் இவரது காதல் கோட்டை இடிந்து தரைமட்டமாகி, ஒரு சாம்ராஜ்யமே அழிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு, கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிவதும் உண்டு.
தேசத்துக்காக உயிரைத் துறப்பது, உயர்ந்த நோக்கத்துக்காக உடலை வருத்திக் கொள்வது இவை யாவும் அறிவுடைமை. ஆனால் அற்ப காரணங்களுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அறிவீனம். இப்படிப் பட்டவர்களால் அவர்களுக்கும் பயனில்லை. மற்றவர்களுக்கும் பலனில்லை. காட்டில் எரியும் தீயால் யாருக்கு என்ன பயன்? அது வீட்டு அடுப்பில் எரிந்தாலாவது சமையலுக்குப் பயன்படும்.
தங்கள் பிள்ளை உலகைச் சுமக்கும் கவலையோடு இருந்தால், நேரம் தவறி வீட்டிற்கு வந்தால், தேவைக்கு அதிகமாகப் பணம் கேட்டால், ரகசியமாக செல்போன் வைத்திருந் தால், போனில் நீண்ட நேரம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு காதல் வைரஸ் பிடித்திருக்கலாம். காதல் என்னும் மாயக்குரங்கை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
காதல் என்கிற பெயரில் வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுகிறார்கள் பிள்ளைகள். பெற்றோரின் கனவுகளைச் சிதைத்து கூடவே தங்கள் லட்சியத்தையும் வருங்காலத்தையும் தொலைத்து விடுகிறார்கள்.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று மனம் போன போக்கெல்லாம் போகக் கூடாது என்பதற்கு ஒரு கதை சொல்வார்கள். விடுதலை என்ற பெயரில் தறுதலைகளாக ஒரு மண்ணாங்கட்டியும் ஒரு இலையும் காதலர் களாயின. ஒருவரை ஒருவர் கடைசிவரை இணைபிரியாது காப்பாற்றுவது என உறுதி எடுத்துக் கொண்டன.
காற்றடித்தது ஒரு நாள். இலையை அடித்துச் செல்லாமல் அதன் மீது உட்கார்ந்து கொண்டு இலையைக் காப்பாற்றியது மண்ணாங் கட்டி. மழைபெய்தது மறுநாள். மண்ணாங்கட்டி மீது இலை அமர்ந்து கொண்டு அதனைக் கரையாமல் காத்தது. ஒரு நாள் காற்றும் மழையும் சேர்ந்து அடித்தன. மழையில் கரைந்து காணாமல் போனது மண்ணாங்கட்டி. காற்றில் சிக்குண்டு சிதறிப் போனது இலை. மதியாதவர்களுக்கும், மதியைக் கொள்ளாதவர்களுக்கும் தொடக்கம் இனித்தாலும் முடிவு இதுதான்.
‘காதலுக்கு கண் இல்லை’ என்பதை தங்களுக்கு சாதகமாக புரிந்து கொண்டு இளம் உள்ளங்கள் காதலில் திளைப்பதாக எண்ணி மகிழ்கிறார்கள். கனவு உலகத்திற்குள் உலா வரும் வரை இவர்களுக்கு உள்ள காதலுக்குக் கண் இல்லைதான். ஆனால், கனவு உலகைக் கடந்து நடைமுறை வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் போது காதலுக்குக் கண் வந்துவிடும்.
காதல் அரும்பும்போது சாதி, மதம், அந்தஸ்து, படிப்பு எல்லாம் தடையாக இருப்பதில்லை. ஆனால் அது கல்யாணத்தில் நிறைவேறத் துடிக்கும்போதுதான் காதலுக்கு சாதி மதம் உள்ளிட்ட அனைத்தும் தடையாக நிற்பது தெரிய வரும். குடும்பத்திற்குள் தீர்க்க முடியாத குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படும். காதலிக்கும்போது இருந்த பூரிப்பு, மகிழ்ச்சி, வியப்பு எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு காணாமல் போய்விடும். கல்யாணத்திற்கு பிறகு காதலே நின்று விடும்.
அறியாப் பருவத்தில் இனித்த காதல், வாழ்க்கை ஓட்டத்தில் வேம்பாய்க் கசக்கத் தொடங்குகிறது. வழிகாட்ட பெற்றோரோ, உற்றாரோ இல்லாத நிலையில் தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.
‘காதலுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார்’ என்று வீர வசனம் பேசலாம். ‘சாதி, மதம், பணம், அந்தஸ்து அனைத்தையும் தூக்கி எறியத் தயார்’ என்று உறுதி மொழி கொடுக்கலாம். ‘பணமும், சொத்தும் எங்களுக்குத் தேவை யில்லை. நாங்களும் எங்களின் காதலும்தான் விலை மதிக்க முடியாத சொத்து’ என்று உள்ளத்தை உருகும் பொன் மொழிகளைக் கூறலாம்.
ஆனால் வாழ்க்கை என்பது வெறும் கற்பனையில் குடும்பம் நடத்துவது அன்று, நடைமுறையில் வாழ்ந்து காட்டுவது என்பதை உணர வேண்டும். காதல் வயப்பட்ட இருவர் காதலன்-காதலியாக இருக்கும்வரை காதல் சந்தனக் கட்டையாக மணம் வீசும். கணவன்-மனைவி என்று ஆகிவிட்டால் எரிந்து போன விறகுக்கட்டையாக புகை வீசும்.
காதல் என்பது அகராதியிலிருந்து நீக்கப்பட வேண்டிய கெட்ட வார்த்தையோ, உச்சரிக்கக்கூடாத பாவச் சொல்லோ அல்ல லட்சியங்களைப் பொசுக்கி விட்டுத் துளிர்க்கும் இளம் பருவக் காதல் தேவையா? என்பதே கேள்வி. பெரும்பாலும் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் ஏற்படுவது வெறும் இனக்கவர்ச்சியே அன்றி, வேறெதுவும் இல்லை.
‘இளமையில் காதலிக்காமல் முதுமையிலா காதலிப்பார்கள்’ என்பதை ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும் காதலிப்பதற்கு மட்டும்தானா இளமை என்றகேள்வியும் எழுகிறது. உள்ளத்தில் பொங்கி வரும் உற்சாகமும், முறுக்கேறிய வலிமையும், இளமைக்கே உரிய புதிய சிந்தனைகளும் இளம் பருவக் காதல் என்றமாய வலைக்குள் சிக்கி மறைந்து போவது சரியா? என்பதை யோசிக்க வேண்டும்.
இளமை என்பது சாதனைகளுக்கான களம். இளமையில் தொலைத்து விட்ட லட்சியங்களைப் பிற்காலத்தில் மீட்டெடுக்க நினைத்தாலும் அது முடியாது. சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் குறிக் கோளும், புதுமை படைக்க விரும்பும் ஒருமுகச் சிந்தனையுமே இன்றைய இளைஞனின் இலக்காக இருக்க வேண்டும்.
யாரும் பார்த்து விடக்கூடாது, யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்றெல்லாம் பயந்து பயந்து மனசுக்குள் பொத்திப் பொத்திக் காதலை மலர வைத்தது நேற்றைய காதல். கண்டதும் காதல், பார்த்ததும் உருகல், தொட்டதும் ஊர்விட்டு ஓடல் என்பதே இன்றைய காதல். ஊடகங்கள் காதலுக்கு பின் நேரக்கூடிய வலி, வேதனை, ரணம் என அனைத்தையும் படைப்பு நேர்மையுடன் வெளியிட்டால் இளைய மனங்கள் தெளிவடையும்.
வாழ்க்கை மொட்டவிழும் பருவம் இளமைப் பருவம். இந்தப் பருவம் லட்சியங்களைத் தேடிப் பிடிப்பதற்கான பருவம். காதலுக்கு ஒருவரை தேடிப் பிடிக்கும் பருவம் அல்ல. இப்பருவத்தில் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும், கண்ணாடி கைநழுவி கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கி விடுவது போல் வாழ்க்கையும் நொறுங்கி விடும்.
இளமைப் பருவம் ஒற்றைக் கண் சிமிட்டலில் முடிந்து போய் விடும். அதற்குள் நம் சுய அடையாளத்தை அமைத்துக் கொள்வது மிகமிக முக்கியம். காதல் நங்கூரம் சரியான இடத்தில், சரியான பருவத்தில் பாய்ச்சப்பட வேண்டும். காதலில் புறப்பாதுகாப்பை விட மனக்கட்டுப்பாடாகிய அகப்பாதுகாப்பு தான் உன்னதமானது.
லட்சியங்களுக்காக காதலைக் கொஞ்ச காலம் காக்க வைக்கலாம். தவறில்லை. காத்திருக்கும் காதலுக்கே வலிமையும், மதிப்பும் அதிகம். காதல் வெறும் பொழுதுபோக்கல்ல, வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கண்ணியமும் கட்டுப் பாடும் காதலுக்கும் உரியது.
(எதையோ தேடியபோது இது கிடைத்தது. அன்பர்களுக்கும் சுவாரசியமளிக்கும் என்று நம்புகிறேன்.)
தண்டபாணி
No comments:
Post a Comment