Tuesday, September 22, 2009

andhuvan loeran lavacier (1743 - 1794)

அந்துவான் லோரான் லாவாசியர் (1743 - 1794)

பெரும் ஃபிரெஞ்சு அறிவியலாளரான அந்துவான் லோரான் லாவாசியர் இரசாயனவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தவராவார். 1743 இல் அவர் பாரிசில் பிறந்தபோது, இரசாயனவியலானது இயற்பியல், கணிதம், வானவியல் ஆகியவற்றை விட பின் தங்கிய நிலையிலிருந்தது. அப்போது இரசாயனவியலார் தனிப்பட்ட உண்மைகள் பலவற்றைக் கண்டுபிடித்திருந்தனர். ஆயினும் சிதறிய இச் செய்திகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு கொள்கை அமைப்பு இல்லாதிருந்தது. அக்காலத்தில் காற்றும் நீரும் தனிமங்களே என்று தவறாகக் கருதி வந்தனர். அதைவிட மோசமான தீயின் தன்மை பற்றி முற்றிலும் தவறான கருத்து நிலவியது. எரியக் கூடிய பொருள்களிலெல்லாம் ஃப்ளோஜிஸ்டன் எனும் ஒரு பொருள் இருப்பதாக ஊகித்தனர். எரியக் கூடியப் பொருள்கள் எரியும் போது, ஃப்ளோஜிஸ்டனைக் காற்றில் வெளியேற்றியதாகவும் கருதினர்.

1754 முதல் 1774 வரை அறிவுத் திறமை மிகு இயைபியலாளர்களான ஜோசப் பிளாக், ஜோசப் ப்ரீஸ்ட்லி, ஹென்றி காவன்டிஷ் போன்றோர் ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு போன்று முக்கிய வாயுக்களைத் தனியாகப் பிரித்தனர். ஆயினும், ஃப்ளோஜிஸ்டன் கொள்கையை இவர் ஏற்றுக் கொண்டிருந்தமையால், தாம் கண்டுபிடித்த இரசாயனப் பொருள்களின் இயல்பை அல்லது சிறப்பை இவர்களால் கண்டறிய முடியவில்லை. எடுத்துக்காட்டாக, ஆக்சிஜன் என்பதை இவர்கள் ஃப்ளோஜிஸ்டன் அகற்றப்பட்ட காற்று என்றனர். (மரச்சிராய் சாதாரண காற்றில் எரிவதை விட ஆக்சிஜனில் நன்றாக எரியுமெனத் தெரிந்தது. ஒருவேளை ஃப்ளோஜிஸ்டன் வெளியேறிய காற்று எரியும் கட்டையிலுள்ள ஃப்ளோஜிஸ்டன் எளிதில் ஈர்க்க முடியுமெனக் கருதினர்). அடிப்படை சரியாக அறிந்து கொள்ளும் வரை இயைபியலில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட முடியாமலிந்தது. லாவாசியர் துண்டு துக்காணிகளான இச்செய்திகளைச் சரியாக ஒருங்கிணைத்து, இயைபியல் கொள்கைகளைச் சரியான வகையில் வகுத்தார். முதலாவது, அவர் ஃப்ளோஜிஸ்டன் கொள்கை முற்றிலும் தவறானதென்று கூறினார். ஃப்ளோஜிஸ்டன் என்று ஒரு பொருளில்லை என்றார். எரியும் பொருளும், ஆக்சிஜனும் சேர்ந்து ஏற்படும் இரசாயனக் கலப்புதான் எரிதலாகும். இரண்டாவது, நீர் ஒரு தனிமம் அன்று. ஆக்சிஜனும் நைட்ரஜனும் சேர்ந்த ஒரு இரசாயனக் கூட்டுப் பொருள். காற்றும் ஒரு தனிமம் அன்று. ஆக்சிஜன், நைட்ரஜன் எனும் இரு முக்கிய வாயுக்கள் கலந்த கலவையாகும். அவருடைய இக்கூற்றுகளெல்லாம் இன்று தெளிவாக விளங்குபவை. ஆயினும் இவை லாவாசியருக்கு முன் வாழ்ந்தவர்களுக்கோ, அவருடைய காலத்தவருக்கோ தெளிவாகத் தெரியவில்லை. லாவாசியர் இக்கொள்கைகளை வகுத்து அவற்றிற்குரிய சான்றுகளை எடுத்துக் காட்டிய போதிலும், பல பெரும் இயைபியலார் அவருடைய கருத்துகளை ஏற்க மறுத்தனர்

. லாவாசியரின் எலிமென்ட்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி (1789) எனும் சிறந்த நூல் அவருடைய கொள்கையையும் அதை எண்பிக்கும் சான்றுகளையும் தெளிவாகவும் உறுதியாகவும் விளக்கியது.இளம் தலை முறையினரான இரசாயனவியலார் அதை நம்பி ஏற்றனர். லாவாசியர் நீரும், காற்றும் இரசாயனத் தனிமங்கள் அல்லவென்று காட்டியபின், தாம் தனிமங்களல்லவென்று கருதிய பொருள்களின் பட்டியலைத் தமது நூலில் இணைத்தார். இப்பட்டியலில் சில தவறுகளிருப்பினும், இரசாயனத் தனிமங்களின் இன்றைய பட்டியலானது லாவாசியரின் பட்டியலின் விரிவான பட்டியலேயாகும்.

லாவாசியர் (பெர்த்தோல்த், ஃபூர்கருவா, கியூத்தோன் தெமோர்லோ ஆகியோருடன் சேர்ந்து) இரசாயனவியலின் கலைச்சொல் தொகுதியை உருவாக்கினார். அவருடைய தொகுப்பே இன்று பயன்படுத்தப் பெறும் சொற்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அதன்படி ஓர் இரசாயனப் பொருளின் கலப்பு அதன் பெயரையே பெறுகின்றது. முதல் முறையாக ஓரே வகையான கலைச் சொற்களைப் பயன்படுத்தியதால் உலகம் முழுவதுமுள்ள இரசாயனவியலார் தாம் கண்டுபிடித்தவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
இரசாயன எதிரியக்கத்தில் பொருண்மை மாறுவதில்லை எனும் கொள்கையை முதன்முதலாகத் தெளிவாக விளக்கியவர் லாவாசியராவார். இரசாயன எதிரியக்கம் ஒரு பொருளிலுள்ள தனிமங்களை மாற்றியமைக்கலாம். ஆனால் அவற்றில் எதையும் அழிப்பதில்லை. பொருள்களின் எடை மூலக்கூறுகளின் எடையினின்று வேறுபடுவதில்லை. எதிரியக்கத்தில் ஈடுபடும் இரசாயனப் பொருள்களைக் கவனமாக எடை போடுவதன் முக்கியத்துவத்தை லாவாசியர் வலியுறுத்தியது இரசாயனவியலை ஒரு நுட்பதிட்பமான இயலாக மாற்றத் துணை புரிந்தது.

லாவாசியர் புவியமைப்பின் வளர்ச்சிக்கு ஓரளவும், உடலியல் வளர்ச்சிக்குப் பெருமளவும் தொண்டாற்றினார். கவனமாக (லாப்ளாஸ’ன் துணையுடன்) பரிசோதனைகளை நடத்தி, சுவாசிக்கும் செயலானது மெதுவாக எரியும் செயலுக்கு சமமென்று அவர் காட்டினார். அதாவது, மனிதரும் பிற விலங்குகளும் தாம் உட்கொள்ளும் ஆக்சிஜனைப் பயன்படுத்தி கரிமப் பொருளை மெதுவாக உள்ளே எரிப்பதன் மூலம் ஆற்றலைப் பெறுகின்றனர். இரத்தச் சுழற்சியைப் பற்றி ஹார்வி கண்டுபிடித்ததைப் போன்ற முக்கியமான இக்கண்டுபிடிப்பே லாவாசியருக்கு இப்பட்டியலில் உரிய இடத்தைத் தரக்கூடியது. ஆயினும் அவர் இரசாயனவியல் கொள்கையை வகுத்ததினால் இரசாயனவியலுக்கு ஒரு சரியான பாதையை வகுத்தார் தற்கால இரசாயனவியலை நிறுவியவர் என்கிறோம். அப்பெயர் அவருக்கு மிகவும் பொருந்தும். இப்பட்டியலில் இடம்பெறும் ஒரு சிலரைப் போல், லாவாசியரும் இளைஞராக இருந்தபோது சட்டம் பயின்றார். அவர் சட்டத்தில் பட்டம் பெற்று, ஃபிரெஞ்சு வழக்கறிஞர் குழத்தில் இடம் பெற்ற போதிலும், வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடவில்லை. ஆயினும் ஆட்சித் துறைப் பணியிலும், பொதுநலப் பணியிலும் ஈடுபட்டார். ஃபிரெஞ்சு அரச அறிவியல் கழகத்தில் செயலாற்றினார்.

அவர் ஃபெர்ம் ஜெனரால் எனும் நிறுவனத்தில் உறுப்பினராக அதன் விளைவாக, 1789 இல் ஃபிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட பிறகு புரட்சி அரசாங்கம் அவரைப் பற்றி ஐயப்படத் துவங்கியது. பிறகு,. ஃபெர்ம் ஜெனரால் உறுப்பினருள் 21 பேருடன் அவரையும் கைது செய்தது. புரட்சிக் கால நீதி நுட்பமாகத் தீர்ப்பிடவில்லையெனினும் விரைவாகத் தீர்ப்பளித்தது. ஒரே நாளில் (மே 8, 1794) 28 பேரும் விசாரிக்கப் பட்டு, குற்றத் தீர்ப்பிடப்பட்டுக் கொல்லப் பட்டனர். லாவாசியரை இழந்த அவருடைய மனைவி அவருடைய ஆராய்ச்சிகளில் உதவிய அறிவுடைய மங்கையராவார்.
குற்ற விசாரணையின் போது, லாவாசியரைக் காப்பாற்றுவதற்காக வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. அவர் நாட்டுக்கும் அறிவியலுக்கும் ஆற்றிய தொண்டுகள் எடுத்துக்காட்டப் பெற்றன. நீதிபதி அவற்றையெல்லாம் ஏற்க மறுத்து, குடியரசுக்கு அறிஞர்கள் தேவையில்லை என்று சுருக்கமாகக் கூறிவிட்டார். அத்தலையை வெட்டுவதற்கு ஒரு நொடி தான் ஆனது. ஆனால் அது போன்ற தலையைப் பெறுவதற்கு நூறாண்டுகளானாலும் இயலாது. என்று அவருடைய தோழரும் கணித மேதையுமான லாக்ரான்ஷ் கூறியதில் ஓரளவு உண்மை இருக்கின்றது.


நன்றி : http://ping.fm/clNBu

No comments: