Monday, September 28, 2009

the great alexander bc.356-323

மகா அலெக்சாந்தர் (கி.மு.356-323)

பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார். மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர், அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இந்தப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார். அந்தக் கூட்டாட்சிக்குத் தாமே தலைவரானார். கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். கி.மு. 336 ஆம் ஆண்டில் அந்தப் படையெடுப்புத் தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தந்தை இறந்த போது அலெக்சாந்தருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும், அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாந்தருக்குத் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாந்தர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும், ஃபிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி, அலெக்சாந்தருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.

கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாந்தர், தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே, இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார்.

மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ந்த, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது.

அலெக்சாந்தர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாந்தர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக இருந்தது. அலெக்சாந்தரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருந்தபோதிலும், அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது. அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக, ஃபிலிப் மன்னர் விட்டுச் சென்ற இராணுவம், பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இரண்டாவதாக, அலெக்சாந்தர் மகத்தான இராணுவத் திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத் திகழ்ந்தார் என்றுகூடக் கூறலாம். மூன்றாவதாக, அலெக்சாந்தர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக் கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாந்தரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்குத் தாமே நேரடியாகத் தலைமைத் தாங்கிப் போரிடுவதைத் தமது கொள்கையாகக் கொண்டிருந்தார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால், அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால், அவரது படையினர், தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற் கொள்ளத் தயங்கும் அபாயத்தை ஏற்கும் படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது.

அலெக்சாந்தர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். பிறகு, வடக்குச் சிரியாவுக்குள் நுழைந்து, இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் படையைப் படுதோல்வியடையச் செய்தார். அதன் பின்பு, அலெக்சாந்தர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப் படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக் கடினமான ஏழுமாத முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாந்தர் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோதே, அலெக்சாந்தருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாந்தருக்கு தூது அனுப்பினார். இந்தச் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவராகிய பார்மீனியோ கருதினார். நான் அலெக்சாந்தராக இருந்தால், இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்வேன், என்று பார்மீனியோ கூறினார். அதற்கு அலெக்சாந்தர் பார்மீனியோவாக இருந்தால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன் என்று விடையளித்தார்.

டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாந்தர் தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றார். இருமாத கால முற்றுக்கைக்குப் பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர், அலெக்சாந்தர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருந்த அலெக்சாந்தர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக் கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் தம் படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு. 331 ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரு பெரிய பாரசீகப் படையை அவர் முற்றிலுமாகத் தோற்கடித்தார்.

ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு அலெக்சாந்தர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாந்ரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330 ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும், அலெக்சாந்தர் டரையசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப் படுத்தினார். பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார்.

இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாந்தருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார். அங்கிருந்து, அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க விழைந்தார். ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டுக் களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்து செல்ல மறுத்தனர். அதனால், அலெக்சாந்தர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார்.

பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச் செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப் பணியாக விளங்கியது. கிரேக்கப் பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாந்தர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக் கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாந்தர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள், தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனால், அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிகக் கூட்டுப் பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராகத் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக் கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார். கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசியப் பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாந்தர் கூட, தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்தபோதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.

மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாந்தர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாந்தர் திடீரெனக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை.

அலெக்சாந்தர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறந்ததும், அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாந்தரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.

அலெக்சாந்தர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால், அவர் உணிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருந்தால், அவர் பெரும்பாலும் வெற்றியடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரீ

No comments: