Monday, September 7, 2009

அபாயகரமான முதலையுடன் விசித்திர நட்பு

அபாயகரமான முதலையுடன் விசித்திர நட்பு


மத்திய அமெரிக்க நாடான கொஸ்தாரிக்காவைச் சேர்ந்த நபரொருவர், அபாயகரமான 17 அடி நீளமுடைய இராட்சத முதலையுடன் நட்புறவுடன் நெருங்கிப் பழகி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார்.

சிதோ (52 வயது) என்ற மேற்படி மீனவர், மார்பளவு நீரில் நின்றபடி இந்த 980 இறாத்தல் நிறையுடைய முதலையை செல்லமாகத் தட்டி முத்தமிடவும் அது பதிலுக்கு அவரது முகத்தில் முத்தமிடுகிறது.

20 வருடங்களுக்கு முன் அந்நாட்டின் பமினா ஆற்றங்கரையில் இடது கண்ணில் துப் பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி உயிருக்காகப் போராடிய நிலையில் இந்த முதலையை முதன்முதலாகக் கண்டதாகவும் உடனடியாக அதனை தனது வீட்டுக்கு எடுத்து வந்ததாகவும் சிதோ கூறினார்.

சிதோ காப்பாற்றிய சமயத்தில் அம் முதலை 150 இறாத்தல் நிறையை மட்டுமே கொண்டிருந்தது. அதற்கு கோழி இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுகளுடன் மருந்துகளையும் வழங்கி வர, அது 6 மாத காலப் பகுதியில் பூரண குணமடைந்துள்ளது.

அம் முதலைக்கு பொசோ என சிதோ பெயர் சூட்டியிருக்கிறார்.

இது தொடர்பில் சிதோ விபரிக்கையில், "பொசோ தற்போது என்னுடைய சிறந்த நண்பனாக உள்ளான். இந்த நட்பு மிகவும் அபாயகரமானதாக தோன்றிய போதும், நல்ல முறையில் தொடர்கிறது. பொசோ என்னைப் பார்க்கும் போது அவன் கண்களில் கருணை தெரியும். ஆனால், வேறு எவராவது நீரில் இறங்கினால் உயிருடன் தப்ப முடியாது'' என்று கூறினார்.

"பொசோ சுகவீனமடைந்திருந்த சமயம் நான் அவன் அருகிலேயே உறங்குவேன்.தன் மேல் ஒருவர் பரிவு காட்டவுள்ளார் என்பதையும் அனைத்து மனிதர்களும் கெட்டவர்கள் அல்ல எனவும் அவனுக்கு (முதலைக்கு) உணரச் செய்ய நான் விரும்பினேன். எனினும், அவனை என் வசப்படுத்துவதற்கு மிகவும் பாடுபட வேண்டியிருந்தது. நான் தினசரி பெரும் பொழுதை அவனருகே கழித்தேன். எனினும், நீரில் அவனை விட்டபின், அவன் அருகே செல்வது அபாயகரமாகத் தோன்றியது. 10 வருடங்களுக்குப் பின்பே நீரில் அவனருகே சென்று பழக முடிந்தது'' என்று கூறினார்.

மேலும் குணமடைந்த பின் முதலையை தனது ஊரிலிருந்த ஏரியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய போது, அம் முதலை நீரை விட்டு வெளியேறி தனது வீடு வரை தன்னைப் பின்தொடர்ந்து வந்ததாக சிதோ தெரிவித்தார்.

உயிராபத்து விளைவிக்கக் கூடிய இராட்சத முதலையுடன் தான் பழகுவது குறித்து தனது குடும்பத்தினர் தொடர்ந்து அச்சமடைந்த நிலையிலேயே உள்ளதாக அவர் கூறினார்.
Posted by எம்.ரிஷான் ஷெரீப்

No comments: